டிஜிபி நியமனத்தில் விதிமீறல் நடந்தால்…. உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!

Published On:

| By Kavi

appointment of DGP High Court warns

டிஜிபி நியமனத்தில் விதிமீறல் இருந்தால் நீதிமன்றம் தலையிடும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை எச்சரித்துள்ளது.

ராமநாதபுரம் ராஜவீதியைச் சேர்ந்த யாசர் அரபத் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார். 

ADVERTISEMENT

அதில் தமிழக டிஜிபி சங்கர் ஜுவால் ஆகஸ்ட் 31ஆம் தேதி ஓய்வு பெறுகிறார். அடுத்த டிஜிபி பதவிக்கான தகுதி வாய்ந்த ஐபிஎஸ் அதிகாரிகளின் பட்டியல் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்துக்கு தமிழக அரசு இதுவரை அனுப்பவில்லை. 

அதே சமயம் டிஜிபிக்கு பணி நீட்டிப்பு மற்றும் அவரை பொறுப்பு டிஜிபியாக நியமிக்கவும் வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகின்றன. 

ADVERTISEMENT

இப்படி செய்வது டிஜிபி நியமனம் தொடர்பான உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது. 2026 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அரசு உயர் பதவிகளில் தங்களுக்கு சாதகமானவர்களை வைத்துக்கொள்ள தமிழக அரசு விரும்புகிறது. 

ஆணவ கொலை, கொலை, கொள்ளை போன்ற பல அச்சமூட்டும் சம்பவங்கள் அதிகரித்தும் வரும் சூழலில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட டிஜிபி பணியிடம் முறையாக நிரப்பப்பட வேண்டியது அவசியம். 

ADVERTISEMENT

எனவே டிஜிபி சங்கர் ஜிவாலை அவரது ஓய்வுக்கு பிறகு பொறுப்பு டிஜிபியாக நியமிக்கவும் அவருக்கு பணி நீட்டிப்பு வழங்கவும் இடைக்கால தடை விதிக்க வேண்டும்” என்று கோரப்பட்டிருந்தது. 

இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் ஏ.டி.மரியா கிளாட் அமர்வில் இன்று (ஆகஸ்ட் 4) விசாரணைக்கு வந்தது. 

அப்போது மனுதாரர் சார்பில், “புதிய டிஜிபி நியமனம் தொடர்பான நடைமுறைகளை உடனடியாக தொடங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என்று வாதிடப்பட்டது. 

இதைக் கேட்ட நீதிபதிகள், டிஜிபி நியமனம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் 2006இல் வழிகாட்டுதல்களை பிறப்பித்து இருக்கிறது. இந்த வழிகாட்டுதல்களை 2019-ல் நீதிபதி தீபக் மிஸ்ரா தெளிவுபடுத்தியுள்ளார். 

சீனியருக்கு தான் டிஜிபி பதவியை வழங்க வேண்டும் என நீதிபதி நாகேஸ்வர ராவ் கூறியுள்ளார். டிஜிபி நியமனம் தொடர்பாக மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வகுத்துள்ள வழிகாட்டுதல்களை தமிழ்நாடு உட்பட பல மாநிலங்கள் பின்பற்றுவது இல்லை. 

டிஜிபி நியமனத்தில் என்ன நடைமுறை பின்பற்றப்படுகிறது என்பது தொடர்பாக தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும். இதில் முறைகேடு விதிமீறல் இருந்தால் நீதிமன்றம் தலையிட நேரிடும். 

இந்த மனு தொடர்பாக மத்திய உள்துறை செயலாளர், தமிழக தலைமைச் செயலாளர் மற்றும் உள்துறை செயலாளர் ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 11ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். 

இதற்கிடையே சென்னையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற காவல் கண்காணிப்பாளர் தாமோதரன் டிஜிபி நியமனம் தொடர்பாக சென்னை உயர் நதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். 

அதில், 30 ஆண்டுகள் பணியில் உள்ள அதிகாரிகளின் பட்டியலை டிஜிபி ஓய்வு பெறுவதற்கு ஆறு மாதங்களுக்கு முன் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்துக்கு தமிழ்நாடு அரசு அனுப்பி வைக்க வேண்டும். 

இந்த பட்டியலை ஆய்வு செய்து மூன்று பேரை தேர்வு செய்து மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கும். அந்த மூன்று பேரில் ஒருவரை தமிழக அரசு டிஜிபியாக நியமிக்க வேண்டும். 

ஆனால் தகுதி வாய்ந்த எட்டு அதிகாரிகள் உள்ள நிலையில் மாநில அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் கூட இல்லாத நிலையில் டிஜிபி நியமனம் முக்கியத்துவம் பெறுகிறது” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த மனு இன்று தலைமை நீதிபதி எம்.எம் ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி சுந்தர் மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. 

மனுவை விசாரித்த நீதிபதிகள் அரசின் நிர்வாக ரீதியான இந்த விவகாரத்தில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. ஆனால் புதிய டிஜிபி நியமனம் உச்சநீதிமன்ற விதிகளுக்கு முரணாக இருந்தால் அதை எதிர்த்து வழக்கு தொடரலாம். இந்த வழக்கு முன்கூட்டியே தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share