தமிழக பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (செப்டம்பர் 2) முறையீடு செய்யப்பட்ட நிலையில், மனுத்தாக்கல் செய்ய தலைமை நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
தமிழக டிஜிபியாக இருந்த சங்கர் ஜிவால் கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி தேதி பணி ஓய்வு பெற்றார். இதனையடுத்து பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமனை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது. இது பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்பினரின் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
இந்நிலையில் பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டதை எதிர்த்து வழக்கறிஞர் வரதராஜ் சார்பில், தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா தலைமையிலான அமர்வு முன்பு இன்று முறையீடு செய்யப்பட்டது.
அப்போது, ”தற்காலிக அடிப்படையில் டிஜிபியை நியமிக்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதன் அடிப்படையில் பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமனை நியமித்தது சட்டவிரோதம். எனவே இது சம்பந்தமாக தாக்கல் செய்ய உள்ள வழக்கை அவசரமாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்” என்றும் வரதராஜ் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
அதற்கு, ”மனு தாக்கல் செய்யும் பட்சத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்” என தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது.
முன்னதாக, “டிஜிபி நியமனத்தில் பிரகாஷ் சிங் வழக்கில் உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை தமிழக அரசு மீறி உள்ளதாகவும், டிஜிபி நியமன பெயர் பட்டியலை குறிப்பிட்ட காலத்திற்குள் யுபிஎஸ்சிக்கு அனுப்பி வைக்கவில்லை. இது நீதிமன்ற அவமதிப்பாக கருத வேண்டும்” என பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டுள்ளதை எதிர்த்து தமிழக அரசுக்கு எதிராக மனித உரிமை செயற்பாட்டாளர் ஹென்றி தீபன் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
