சபாநாயகர் அப்பாவு மீது அதிமுக கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது நாளை (மார்ச் 17) வாக்கெடுப்பு நடத்த உள்ளதால், அப்போது அவருக்கு பதிலாக துணை சபாநாயகர் பிச்சாண்டி அவையை நடத்துவார். appavu will not sit in speaker chair tomorrow
தமிழக சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 14ஆம் தேதி தொடங்கியது. அன்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பாக சபாநாயகர் மீது அதிமுக கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் பேச முயன்றார். ஆனால் அதற்கு சபாநாயகர் அப்பாவு மறுப்பு தெரிவித்தார்.
அதன்பின்னர் எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமி பேச முயன்றபோதும் எதிர்ப்பு தெரிவிக்கவே அதிமுகவினர் கூட்டாக வெளிநடப்பு செய்தனர்.
கடந்த ஜனவரி மாதம் சபாநாயகர் அப்பாவுவை அந்த பதவியில் இருந்து நீக்கக்கோரும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை, சட்டமன்ற செயலாளரான சீனிவாசனை சந்தித்து ஆர்.பி உதயகுமார் கொடுத்தார்.
அதன் தொடர்ச்சியாக கடந்த 14ஆம் தேதி நடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் அதில் வாக்கெடுப்பு நடத்த கோரியதற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.

அப்பாவு மீதான தீர்மானத்தை ஏற்க வேண்டும்!
அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “சட்டமன்றம் தொடங்கியதும் சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் வாக்கெடுப்பு நடத்த கோரினோம். அவர் நடுநிலைத் தன்மையுடன் நடந்துகொள்ளவில்லை. எதிர்க்கட்சியினர் பேச வாய்ப்பு தருவதில்லை. எதிர்க்கட்சியினரின் மைக் ஆப் செய்யப்படுகிறது.
ஏற்கெனவே அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், அப்போது சபாநாயகராக இருந்த தனபால் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக் கோரினார். அதனை விதிமுறைப்படி 14 நாட்களுக்கு பிறகு எடுத்துக்கொண்டோம். அதே போன்று ஏற்கெனவே அப்பாவுவுக்கு எதிராக தீர்மானம் கொண்டுவந்து 14 நாட்கள் கடந்த நிலையில், இதனை ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார்.
இதனையடுத்து சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அளித்துள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானம், திங்கள் கிழமை (மார்ச் 17) விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் என சட்டசபை செயலாளர் சீனிவாசன் அறிவித்தார்.
அப்பாவு இருக்கையில் அமர மாட்டாரா?
அதன்படி நாளை நடக்கும் சட்டமன்ற கூட்டத்தின் தொடக்கத்தில் திருக்குறளை படித்து அவையை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைப்பார். பின்னர், மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், டாக்டர் செரியன் ஆகியோருக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்படும்.
அதன் பிறகான கேள்வி நேரத்திற்கு பிறகு உதயகுமார் தனது தீர்மானத்தை உடனே வாக்கெடுப்புக்கு விடும்படி கோருவார். அதனை ஏற்று தீர்மானத்தை உடனே எடுக்கும்பட்சத்தில், சபாநாயகர் இருக்கையில் இருந்து எழுந்து சபாநாயகர் அப்பாவு வெளியே சென்று விடுவார். பின்னர் துணை சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து வாக்கெடுப்பை நடத்துவார்.
குரல் வாக்கெடுப்பு!
முதலில் தீர்மானத்தின் மீது உதயகுமார் பேசுவார். அவரது விவாதத்திற்கு முதல்வரோ அல்லது அவை முன்னவரோ பதிலளித்து பேசுவார்கள். அதன் பின்னர் குரல் வாக்கெடுப்புக்கு தீர்மானம் விடப்பட்டால், ‘ஏற்போர் ஆம் என்க, மறுப்போர் இல்லை என்க’ என்று கூறும்படி துணை சபாநாயகர் கேட்டுக்கொள்வார். தீர்மானத்தை ஏற்று ஆம் என்று ஒலிக்கும் மொத்த குரலையும், இல்லை என்று ஒலிக்கும் குரலையும் கணக்கிட்டு துணை சபாநாயகர் தீர்ப்பளிப்பார்.
சட்டசபையில் தற்போது திமுகவின் பலம் 133-ஆகவும், அதிமுகவின் பலம் 62-ஆகவும் உள்ளது. தீர்மானம் தோற்றுவிட்டால், சபாநாயகர் அப்பாவு மீண்டும் சபாநாயகர் இருக்கையில் வந்தமர்ந்து அடுத்த அலுவல்களை மேற்கொள்ள உத்தரவு பிறப்பிப்பார்.
இதற்கிடையே தான் மூன்றாவது நாளாக நாளையும் சபாநாயகர் அப்பாவுவை செங்கோட்டையன் சந்திப்பார் என்கிறார்கள் அவரது வட்டாரத்தில்.
டிவிஷன் முறைப்படி வாக்கெடுப்பு!
ஒருவேளை எண்ணிக் கணிக்கும் ‘டிவிஷன்’ முறைப்படி வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டால், நேரம் குறிக்கப்பட்டு அவையின் நுழைவு வாயில்கள் அடைக்கப்படும். அந்த நேரத்தில் வெளியே சென்றிருந்தால், அவர் அமைச்சர் என்றாலோ அல்லது எம்.எல்.ஏ. என்றாலும் யாரும் அவைக்குள் வர முடியாது.
அந்த வாக்கெடுப்பை சட்டசபை செயலாளர் நடத்துவார். தமிழக சட்டசபையில் 6 டிவிஷன்கள் உள்ளன. ஒவ்வொரு டிவிஷனிலும் உள்ள எம்.எல்.ஏ.க்களை எழுந்து நிற்கச் செய்து அவர்களின் வாக்குகளை சட்டசபை செயலாளர் பெற்று, அதை எண்ணிக் கணித்து, அதை துணை சபாநாயகரிடம் சட்டசபை செயலாளர் அளிப்பார். அதன் அடிப்படையில் தீர்மானத்தின் முடிவை துணை சபாநாயகர் அறிவிப்பார்.
இதற்கிடையே

தனபால் மீது ஸ்டாலின் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் – ஒரு பார்வை! appavu will not sit in speaker chair tomorrow
கடந்த அதிமுக ஆட்சியின் போது அப்போதைய சபாநாயகராக இருந்த தனபாலை பதவியில் இருந்து நீக்கக் கோரும் தீர்மானத்தை 10 எம்.எல்.ஏ.க்களின் கையெழுத்துடன் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த 2017ஆம் ஆண்டு கொண்டு வந்தார்.
அதன்படி சபாநாயகர் தனபால் தனது இருக்கையில் அமராமல் வெளியே சென்றுவிட்டார். எனவே அப்போது அவையை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் நடத்தினார்.
தொடர்ந்து நடந்த ‘டிவிஷன்’ முறை வாக்கெடுப்பின்படி அவையின் கதவுகள் அடைக்கப்பட்டு, 6 பிரிவுகளாக அமர்ந்திருந்த எம்.எல்.ஏ.க்களிடம் ஒவ்வொரு பிரிவாக வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் திமுகவின் தீர்மானம் தோல்வி அடைந்தது. அதன் பிறகு தனபால் சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து அவையை தொடர்ந்து நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.