கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள திருப்பயரில் இன்று (பிப்ரவரி 22) பள்ளி கல்வித்துறையும், பெற்றோர் ஆசிரியர் கழகமும் இணைந்து நடத்திய ‘பெற்றோரைக் கொண்டாடுவோம்’ மண்டல மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் ஒன்றரை லட்சம் பேர் கலந்துகொண்டனர். Appa Stalin care students
மாநாட்டில் பேசிய ஸ்டாலின், “தேசிய கல்விக்கொள்கை என்பது தமிழ்நாட்டிற்கும், தமிழ் மக்களுக்கும், குழந்தைகளின் எதிர்காலத்திற்கும் வேட்டு வைக்கிற கொள்கை. நாங்கள் எந்த மொழிக்கும் தனிப்பட்ட முறையில் எதிரிகள் இல்லை. ஆனால், எந்த மொழியை திணிக்க நினைத்தாலும் எதிர்ப்போம். அதில் உறுதியாக இருப்போம். அதனால் பத்தாயிரம் கோடி கொடுத்தால் கூட தேசிய கல்வி கொள்கையை நாங்கள் ஏற்கமாட்டோம்” என்று பேசினார்.

மேலும், இந்த மாநாட்டில் அப்பா என்ற செயலியை ஸ்டாலின் அறிமுகம் செய்தார். மாணவ, மாணவிகள் தங்களுக்குள்ள எந்த கேள்விகளையும் இந்த ஆப் மூலமாக கேட்டு தெரிந்துகொள்ள முடியும்.
இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக அரசுப் பள்ளிகளின் மேம்பாட்டிற்காக பொதுமக்கள் தங்களால் இயன்ற பொருட்களைப் பள்ளிகளுக்கு அளிக்கும் பள்ளிச் சீர் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது. முதல்வர் ஸ்டாலினும் பள்ளி மாணவர்களுக்காக சீர் சுமந்து வந்தார். ஸ்டாலின் கொண்டு வந்த சீர் தட்டில், புத்தகங்கள், ரோபோட் ஆகியவை இருந்தன. அவற்றை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷிடம் ஸ்டாலின் கொடுத்தார்.

சமீப நாட்களாக முதல்வர் ஸ்டாலின் கள ஆய்வு செல்லும் இடங்களில், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், இளைஞர்கள் அவரை அப்பா, அப்பா என்று அழைக்கும் நிலையில், மாணவர்களுக்கு அப்பா ஸ்தானத்தில் ஸ்டாலின் சீர் சுமந்து சென்றுள்ளதாக சமூக வலைதளங்களில் திமுகவினர் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். Appa Stalin care students