”எந்த வகை இசையாக இருந்தாலும் தமிழிற்கு முன்னுரிமை வழங்குங்கள்” என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை டி.டி.கே சாலையில் உள்ள மியூசிக் அகாடமியின் 96வது ஆண்டு விழாவை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (டிசம்பர் 15) தொடங்கிவைத்தார். இந்த அகாடமியில் மார்கழி மாதம் முழுவதும் 100க்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்களின் ’மார்கழி இசைத் திருவிழா’ நடைபெற உள்ளது.
இதையடுத்து, சங்கீத கலாநிதி எம்.எஸ்.சுப்புலட்சுமி விருதுகளை நெய்வேலி சந்தான கோபாலன், திருவாரூர் பக்தவத்சலம், லால்குடி ஜி.ஜே.ஆர்.கிருஷ்ணன் மற்றும் லால்குடி விஜயலட்சுமி ஆகியோருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இவ்விழாவில் பேசிய மு.க.ஸ்டாலின், “மியூசிக் அகாடமி இசைக்கலை ஒன்றியத்தின் 96வது ஆண்டு விழாவில் கலந்து கொள்வதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைக்கிறேன். 1927ஆம் ஆண்டு நடந்த இசை மாநாட்டில் இந்திய இசையை வலுசேர்ப்பதற்காக இப்படி ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும் என்று நினைத்து உருவாக்கியிருக்கிறார்கள்.

எந்த அமைப்பாக இருந்தாலும் அதனை உருவாக்குவது எளிது. ஆனால் தொடர்ந்து நடத்துவதுதான் சிரமம். 96 ஆண்டுகள் தொடர்ந்து நடத்தியிருக்கும் அனைவரையும் வணங்குகிறேன், வாழ்த்துகிறேன்.
இன்னும் 4 ஆண்டுகளில் இந்நிகழ்ச்சி என்பது நூற்றாண்டு விழாவாக நடைபெறப் போகிறது. அதிலும் நான் உறுதியாக கலந்துகொள்வேன் என்று நம்புகிறேன். இசை வளர்த்தல் என்பது கலை வளர்த்தல்.
கலை வளர்த்தல் என்பது பண்பாடு வளர்த்தல். பண்பாடு வளர்த்தல் என்பது நாகரிகம் வளர்த்தல். மியூசிக் அகாடமி கலை வளர்க்கும் பண்பாட்டு அமைப்பு. நாடகம், இயல், இசை என்பதே சரியான வரிசை என தலைவர் கலைஞர் சொல்வார்.
தமிழர்களின் இசை வடிவம் பழமையானது. செழுமையானது. தொல்காப்பியம் காலத்திற்கு முன்பே தமிழ் இசை வடிவம் இருந்து வருகிறது. உலகில் உள்ள இசைக் கலைஞர்களை சென்னைக்கு அழைக்கும் வேடந்தாங்கலாக மியூசிக் அகாடமி உள்ளது. ’வேற்றுமையில் ஒற்றுமை காண்கிறோம்’ என்பது அரசியல் கட்சிகளுக்கு மட்டுமின்றி, தனிமனித கொள்கையாக மாற வேண்டும்.
இதுதான் இன்றைய நாட்டிற்கு தேவையானதாக உள்ளது. எந்த இசை மன்றமாக இருந்தாலும், எந்த வகை இசையாக இருந்தாலும் தமிழிற்கு முன்னுரிமை வழங்குங்கள். தமிழிசை தவறாது ஒலிக்க வேண்டும். பாப் இசையாக இருந்தாலும், ராக் இசையாக இருந்தாலும், அது தமிழ் இசையாக இருக்க வேண்டும். நான் முதல்வராக பொறுப்பேற்ற பின்னர் எந்தவித பரபரப்பும், டென்ஷனும் இல்லாமல் பங்கேற்ற முதல் நிகழ்ச்சி இதுதான்” என்றார்.
ஜெ.பிரகாஷ்
முதல் டெஸ்ட்: குல்தீப் சுழலில் சிக்கிய வங்கதேசம்
பழங்குடியினர் பட்டியலில் குருவிக்காரர்: மக்களவையில் நிறைவேறிய மசோதா!
