சனாதன தர்மத்தை விமர்சித்து பேசியதற்காக தமக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை ஒன்றாக விசாரிக்க கோரி தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்த வழக்கின் விசாரணையை 2026-ம் ஆண்டு பிப்ரவரி 3-வது வாரத்துக்கு உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.
2023-ஆம் ஆண்டு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கம் சென்னையில் நடத்திய சனாதன ஒழிப்பு மாநாட்டில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். அம்மாநாட்டில் பேசிய உதயநிதி ஸ்டாலின், “சனாதன தர்மத்தை நாம் எதிர்க்கக்கூடாது. டெங்கு, மலேரியா, கொரோனா ஆகிய நோய்களை நாம் எதிர்க்க மாட்டோம். அதனை ஒழிக்கவே முயற்சி செய்வோம். அதேபோல் தான் சனாதன தர்மமும். அதை எதிர்ப்பதை விட ஒழிப்பதே சிறந்தது” என பேசியிருந்தார்.
உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சுக்கு எதிராக நாட்டின் பல்வேறு மாநிலங்களில் வழக்குகள் தொடரப்பட்டன. இதனால் தமக்கு எதிரான அனைத்து மாநிலங்களின் வழக்குகளையும் ஒன்றாக விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் உதயநிதி ஸ்டாலின் மனுத் தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், இந்த வழக்குகளில் உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க தடை விதித்திருந்தது.
இந்த பின்னணியில் உச்சநீதிமன்றத்தில் நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான பெஞ்ச் முன்பாக, உதயநிதி ஸ்டாலின் மனு மீதான விசாரணை இன்று செப்டம்பர் 1-ந் தேதி நடைபெற்றது. இன்றைய விசாரணையின் போது, “இந்த வழக்கை விரிவாக விசாரிக்க வேண்டியிருக்கிறது; தற்போது அதற்கான நேரம் இல்லை. ஆகையால் இந்த வழக்கின் விசாரணையை 2026-ம் ஆண்டு பிப்ரவரி 3-வது வாரத்தில் பட்டியலிட்டு விசாரிக்க உத்தரவிடுகிறோம்” என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
