’அந்தகன்’ பெரும் விவாதத்தை ஏற்படுத்தும் : தியாகராஜன்

Published On:

| By christopher

நடிகர் பிரசாந்த் கதையின் நாயகனாக  நடித்திருக்கும் ‘அந்தகன் – தி பியானிஸ்ட்’ திரைப்படத்தினை விளம்பரபடுத்தும் வகையில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையில், இசையமைப்பாளரும், பின்னணி பாடகருமான அனிருத் மற்றும் நடிகர் விஜய் சேதுபதி ஆகியோர் பின்னணி பாட, ‘அந்தகன் ஆந்தம்’ எனும் ப்ரோமோ பாடல் தயாராகி இருக்கிறது.

கவிஞர் ஏகாதசி, உமாதேவி எழுதியுள்ள இந்த பாடலின் உள்ளடக்கத்தை உருவாக்கி, காட்சிப்படுத்தியிருக்கிறார் ‘நடன இயக்குநர்’ பிரபுதேவா. இந்த பாடலை நடிகர் விஜய் வெளியிட்டு, பட குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

ADVERTISEMENT

இதைத் தொடர்ந்து இந்தப் பாடலை அறிமுகப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நேற்று (ஜூலை 24) நடைபெற்றது.

ADVERTISEMENT

இந்நிகழ்வில் படத்தின் இயக்குநர் தியாகராஜன் பேசுகையில்,

”2019ம் ஆண்டில் பலத்த போட்டிகளுக்கு இடையே இந்தியில் வெளியான ‘அந்தாதூன்’ படத்தின் தமிழ் உரிமையை வாங்கினேன். தமிழ் திரையுலகில் பெரிய பெரிய நட்சத்திர நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் என பலரும் இப்படத்தின் தமிழ் உரிமையை வாங்குவதற்கு போட்டியிட்டார்கள்.

ADVERTISEMENT

இந்தப் படத்தை ஏன் வாங்க வேண்டும் என தோன்றியது என்றால், அதில் ஒரு பார்வை திறன் சவால் உள்ள மாற்றுத்திறனாளி தான் கதையின் நாயகன். அவன் ஒரு பியானோ வாசிக்கும் இசை கலைஞன். பிரசாந்த் சிறிய வயதிலிருந்து பியானோ வாசிப்பான், லண்டன் டிரினிட்டி இசைக்கல்லூரியில் பியானோ இசையில் நான்காவது கிரேடில் தேர்ச்சி பெற்றிருக்கிறான். அவனுக்கு இந்த கதை மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று நினைத்து தான் இதன் தமிழ் உரிமையை வாங்கினேன்.

படத்தை வாங்கிய பிறகு கொரோனாவால் இரண்டு ஆண்டு காலம் சென்றது.‌ அதன் பிறகு இடர்பாடுகள் ஏற்பட்டன. அதனைத் தொடர்ந்து நான் படத்தை இயக்கும் பொறுப்பினை ஏற்றுக் கொண்டேன். ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் பொருத்தமான நட்சத்திர நடிகர்களை தேர்வு செய்தோம்.

குறிப்பாக இதில் ஒரு டாக்டர் கேரக்டர் இருக்கிறது. அந்த கேரக்டருக்கு இயக்குநரும், நடிகருமான கே. எஸ். ரவிக்குமார் தான் பொருத்தமாக இருப்பார் என்று அவரை தொடர்பு கொண்டு பேசினேன். அவரும் கதையைக் கேட்டவுடன் நடிக்க ஒப்புக்கொண்டார். படத்தில் அவருடைய பங்களிப்பு அதிகம். திறமையான நடிப்பால் அந்த கதாபாத்திரத்தை அவர் மெருகேற்றி இருக்கிறார்.

நடிகை பிரியா ஆனந்த் அழகான பெண். இந்த படத்தில் அவரை இளமையாகவும், அழகாகவும் காட்சிப்படுத்தி இருக்கிறோம்.‌ லண்டன் வீதிகளில் அவர் நடந்து செல்லும் ஸ்டைலும், அவரின் அவுட்லுக்கும் அனைவரும் ரசிக்கக் கூடியதாக இருக்கும். நடிகை சிம்ரனும் இந்தப் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். சற்று எதிர்மறையான கதாபாத்திரம் என்றாலும் திறமையான நடிப்பால் அந்த கதாபாத்திரத்தை உயிர்ப்பித்திருக்கிறார்.

அவருடைய சிறந்த நடிப்பிற்காக இந்த வருடம் அவருக்கு நிச்சயம் விருது கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அடுத்ததாக வனிதா விஜயகுமார்-  அவருடைய நடிப்புக்கு தீனி போடும் வகையில் பொருத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

கார்த்திக் பழம்பெரும் நடிகர் கதாபாத்திரத்தில்  நடித்திருக்கிறார்.  ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தில் தொடங்கிய அவருடனான எனது நட்பு இன்றும் தொடர்கிறது.  படப்பிடிப்பு தளத்திற்கு காலை எட்டு மணிக்கு வருகை தந்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறார். அவருடைய தொடக்க காலகட்டத்தில் நடித்த துள்ளலான நடிப்பை இப்படத்தில் காணலாம்.

இவர்களைத் தொடர்ந்து நடிகர் யோகி பாபு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.  யோகி பாபுவுக்கு சகோதரியாக ஊர்வசி நடித்திருக்கிறார். ஊர்வசி என்னுடன் சில திரைப்படங்களில் ஜோடியாக நடித்திருக்கிறார். பிரசாந்த்  நடித்த ‘மன்னவா’ படத்திலும் நடித்திருக்கிறார். இப்படத்தின் ஒரிஜினலில் ஊர்வசி கதாபாத்திரம் இருக்கிறது.‌ ஆனால் தமிழில் அந்த கதாபாத்திரம் மேலும் விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. அது ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை வழங்கும்.

பிரசாந்த் நடித்த ‘செம்பருத்தி’, ‘காதல் கவிதை’ ஆகிய படங்களில் பணியாற்றிய ரவி யாதவ் இந்த திரைப்படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி இருக்கிறார். லண்டனில் இருந்த ரவி யாதவ் நான் அழைத்தவுடன் மகிழ்ச்சியுடன் சம்மதித்து இந்த படத்தில் பணியாற்றியிருக்கிறார்.

இந்தி பதிப்பில் இல்லாத பல விஷயங்களை தமிழ் ரசிகர்களை மனதில் வைத்து இணைத்திருக்கிறோம். அதனால் அந்தகன் ரீமேக் படம் அல்ல ரீமேட் படம். அதாவது மறு உருவாக்கம் செய்யப்பட்ட படைப்பு.

அந்தகன் திரைப்படம் ரசிகர்களுக்காக புதுமையாகவும், நேர்த்தியாகவும் அமைக்கப்பட்டிருக்கிறது. இப்படத்தின் உச்சகட்ட காட்சி பெரும் விவாதத்தை ஏற்படுத்தும்.‌ இது ரசிகர்களை மீண்டும் திரையரங்கத்திற்கு வரவழைக்கும் வகையில் அமைந்திருக்கிறது.‌

இந்தத் திரைப்படம் வெளியான பிறகு இந்தியில் வெளியான அந்தாதூன் திரைப்படத்திற்கும், தமிழில் வெளியாகி இருக்கும் அந்தகன் படத்திற்கும் இடையேயான வித்தியாசத்தை உணர்வீர்கள்.‌ இந்தியில் இல்லாத பல விஷயங்களை நாங்கள் முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கியிருக்கிறோம்.‌ அதிலும் அந்தகன் திரைப்படம் பிரசாந்தின் ஐம்பதாவது திரைப்படம் என்பதால் கூடுதல் முக்கியத்துவம் வழங்கியிருக்கிறோம். இந்தத் திரைப்படத்தை ஆகஸ்ட் மாதத்தில் வெளியிட திட்டமிட்டிருக்கிறோம்” என்று தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

இராமானுஜம்

நாகேந்திரன்’ஸ் ஹனிமூன்ஸ் : விமர்சனம்!

டாக்டர் ராமதாஸுக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share