பத்திரிகை அலுவலகத்தில் நடந்தது இதுதான்: பாமக

Published On:

| By Balaji

பத்திரிகை அலுவலகத்தில் நடந்தவை தொடர்பாக பாமக செய்தித் தொடர்பாளர் கே.பாலு பதிலளித்துள்ளார்.

தமிழகத்திலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகள் குறித்து நாடாளுமன்ற இணையதளத்தில் வெளியிடப்பட்ட தகவல்களை அடிப்படையாக வைத்து, டைம்ஸ் ஆப் இந்தியா நாளேட்டில் செய்தி வெளியிடப்பட்டது. அதில், வருகைப் பதிவைப் பொறுத்தவரை அனைத்து உறுப்பினர்களையும் விட பாமக மாநிலங்களவை எம்.பி அன்புமணி ராமதாஸின் வருகைப் பதிவு மிகவும் மோசமானதாக இருக்கிறது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதுவரை 2 விவாதங்களில் மட்டுமே கலந்துகொண்டிருப்பதாகவும், அதில் எந்த கேள்வியையும் எழுப்பவில்லை என்றும் கூறப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

இதனால் ஆத்திரமடைந்த பாமகவினர் நேற்று சென்னையில் உள்ள டைம்ஸ் ஆஃப் இந்தியா அலுவலகத்திற்குச் சென்று பத்திரிகையாளர்களை மிரட்டியதாக தகவல் வெளியானது. இதற்கு பத்திரிகையாளர் சங்கம் எதிர்ப்பு தெரிவிக்க, மிரட்டல் விடுத்ததாக வந்த தகவலை பாமக மறுத்தது.

இந்த சம்பவம் தொடர்பாக திமுக செய்தித் தொடர்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான டி.கே.எஸ்.இளங்கோவன் வெளியிட்ட அறிக்கையில், “அன்புமணி ராமதாஸ் தொடர்ச்சியாக பாராளுமன்ற கூட்டங்களில் கலந்து கொள்வதில்லை என்ற விமர்சனம் உள்ளது. சிஏபி மீதான விவாதத்தில் கலந்து கொள்ளாமல், வாக்கெடுப்பின்போது மட்டும் கலந்து கொண்ட அன்புமணி, இஸ்லாமியர்களுக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் எதிராகவும் பாஜகவுக்கு ஆதரவாகவும் வாக்களித்தார். மற்ற நாட்களில் அவர் அவைக்கு வந்ததாக தெரியவில்லை.அதுவே விமர்சனத்துக்கு உள்ளானது” என்று தெரிவித்தார்.

ADVERTISEMENT

டைம்ஸ் ஆப் இந்தியா அலுவலகத்திற்கு வினோபா தலைமையில் சென்ற பாமகவினர் வன்முறையில் ஈடுபட்டதாகக் குறிப்பிட்ட இளங்கோவன், “அதில் தவறு இருந்தால், அது தவறு என்று, ஆதாரத்துடன் சுட்டிக்காட்டி, மறுப்பு செய்தி வெளியிடச் சொல்லலாம். ஒரு எம்.பி நாடாளுமன்றக் கூட்டங்களைக் புறக்கணிப்பதும், ஓரிரு நாட்கள் மட்டும் கலந்து கொள்வதும், அவர் மக்கள் பணியில் அக்கறை காட்டவில்லை என்பதையே நிரூபிக்கிறது” என்று விமர்சித்துள்ளார்.

செய்தி வெளியிட்ட பத்திரிகை அலுவலகத்தினுள் புகுந்து தாக்குதல் நடத்துவது என்பது ஜனநாயகவிரோத மக்கள்விரோத பாசிச செயலாகும் எனக் கண்டித்ததோடு, “ஜனநாயகத்தின் மீது எந்த காலத்திலும் பாமகவுக்கு நம்பிக்கையில்லை என்பதை பாமகவினரின் இந்த செயல் மீண்டும் உறுதிபடுத்துகிறது. இத்தகை செயல்களில் ஈடுபடுவோர்மீது தமிழக அரசு, பாரபட்சம் பார்க்காமல் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

ADVERTISEMENT

**பாமக பதில்**

இதற்கு பாமக செய்தித் தொடர்பாளர் கே.பாலு இன்று (டிசம்பர் 26) அளித்துள்ள பதிலில், “பாமக குறித்து செய்தி வெளியிட்டதற்காக பாமக செய்தித்தொடர்பாளர் வினோபா பூபதி தலைமையில் பாமகவினர் டைம்ஸ் ஆப் இந்தியா அலுவலகத்திற்கு சென்று வன்முறையில் ஈடுபட்டதாக டி.கே.எஸ். இளங்கோவன் குற்றம் சாட்டியுள்ளார். சில பத்திரிகையாளர் அமைப்புகளும் உண்மையறியாமல் இதே புகாரை கூறியிருக்கின்றன.இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் அடிப்படை ஆதாரமற்ற, உள்நோக்கம் கொண்டவை ஆகும். இவை ஜமுக்காளத்தில் வடிகட்டிய அப்பட்டமான பொய்” என்று மறுத்துள்ளார்.

டைம்ஸ் ஆப் இந்தியா நாளேடு வெளியிட்டுள்ள விவரங்கள் அனைத்தும் பொய்யானவை; தவறானவை என்று கூறியுள்ள பாலு, “மாநிலங்களவையில் பூஜ்ஜிய நேரத்தில் மட்டும் புவிவெப்பமயமாதல், காவிரி – கோதாவரி இணைப்பு, வேளாண்மைக்கு தனி நிதிநிலை அறிக்கை, உயர்கல்விக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு ஆகிய நான்கு முக்கிய பிரச்சினைகள் குறித்து மருத்துவர் அன்புமணி இராமதாஸ் பேசியுள்ளார். அதுமட்டுமின்றி, 10 வினாக்களை அவர் எழுப்பியுள்ளார். அவற்றில் 4 வினாக்களுக்கு பதிலளித்துள்ள மத்திய அரசு, கூட்டத்தொடர் முடிவடைந்து விட்டதால் மீதமுள்ள வினாக்களுக்கு விடையளிக்க முடியவில்லை என்பதையும் தெரிவித்துள்ளது” என்று விளக்கியுள்ளார்.

கடந்த காலங்களில் அன்புமணி அவரது தொகுதி மேம்பாட்டு நிதியை செலவிடவில்லை என்று பொய்யான செய்தி ஒன்றை டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டிருந்தது. இப்போதும் அதே போன்று பொய்யான செய்தியை அந்த நாளிதழ் வெளியிட்டிருப்பதால் அதன் பின்னணியில் ஏதேனும் உள்நோக்கம் இருக்கலாம் என பாமக சந்தேகிக்கிறது என்றுள்ள கே.பாலு, “டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழின் அரசியல் பிரிவு ஆசிரியர் ஜெயாமேனன் அழைப்பின்படியே பாமக செய்தித்தொடர்பாளர் வினோபா, பாமக நிர்வாகி கோபால் ஆகிய இருவரும் ஜெயா மேனனை அவரது அலுவலகத்தில் சந்தித்து உண்மை நிலவரத்தை விளக்கியுள்ளனர்.

நாடாளுமன்ற இணையதளங்களில் இருந்து தான் மருத்துவர் அன்புமணி இராமதாசின் செயல்பாடுகள் குறித்த விவரங்களை எடுத்ததாக செய்தியில் செய்தியாளர் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால், நாடாளுமன்ற இணையதளங்களில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் எழுப்பிய பிரச்சினைகள், வினாக்கள் ஆகியவை பற்றி குறிப்பிடப்பட்டிருப்பதை ஆதாரங்களுடன் வினோபா பூபதி எடுத்துக்காட்டியதும் உடனடியாக தமது நிலையை மாற்றிக்கொண்ட அந்த செய்தியாளர், ஒரு தொண்டு நிறுவனத்தின் இணையதளத்தில் இருந்து தான் இத்தகவல்களை எடுத்து வெளியிட்டதாகக் கூறினார். அவர் எழுதிய செய்தி பொய்யானது என்பதற்கு இதைவிட வேறு உதாரணங்கள் தேவையில்லை. இதுதொடர்பாக ஜெயாமேனன், சிவக்குமார் ஆகியோருக்கும் வினோபா பூபதிக்கும் இடையே விவாதம் நடந்து கொண்டிருந்த போது, ஜெயாமேனனின் அறைக்குள் வந்த நாளிதழ் ஊழியர்கள் சிலர் வினோபா பூபதியை மிரட்டியதுடன், முரட்டுத்தனமாக நடந்து கொண்டனர். அப்போது அவர்களை எச்சரித்த ஜெயாமேனன் அறையிலிருந்து வெளியேறும்படி ஆணையிட்டிருக்கிறார். அதுமட்டுமின்றி தங்களின் செய்தியாளர் தரப்பில் தவறு இருப்பதாகவும், பா.ம.க. தரப்பில் விளக்கச் செய்தி கொடுத்தால் அதை விதிகளுக்கு உட்பட்டு பிரசுரிப்பதாகவும் உறுதியளித்தார். அதைத் தொடர்ந்து வினோபா பூபதியும், கோபாலும் அவருக்கு நன்றி கூறி திரும்பினர். இதைத் தவிர டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் அலுவலகத்தில் வேறு எதுவும் நடைபெறவில்லை” என்று கூறியுள்ளார்.

இந்த நிகழ்வில் சம்பந்தப்பட்டவர்கள் டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழின் அரசியல் பிரிவு ஆசிரியர் ஜெயாமேனன் அவர்களும், வினோபா பூபதி அவர்களும் தான். இவர்கள் இருவரும் சொல்லாத ஒன்றை மற்ற அனைவரும் எப்படி துப்பறிந்தனர் என்று கேள்வி எழுப்பிய பாலு, “பாமகவினர் நுழைந்திருந்தால் அங்கு இருந்த பத்திரிகை புகைப்படக்காரர்கள் படம் எடுத்திருந்திருக்கலாம்; ஜெயா மேனன் அறையில் இருந்த கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகளை வைத்து காவல்துறையில் புகார் செய்திருக்கலாம். ஆனால், எதுவும் நடக்கவில்லை. அதற்கும் மேலாக இந்த நிகழ்வு குறித்து சமூக வலைத்தளங்களில் சில பத்திரிகை அமைப்புகளின் பெயர்களின் வெளியாகியுள்ள செய்திகளுக்கு தாங்கள் பொறுப்பல்ல என்று அந்த நாளிதழின் அரசியல் பிரிவு ஆசிரியர் ஜெயாமேனன் பாமகவுக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவித்திருக்கிறார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “டைம்ஸ் ஆஃப் இந்தியா அலுவலகத்தில் வன்முறை செய்ததாக பா.ம.க. மீது அவதூறு பரப்பிய திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் உள்ளிட்டோர் அதற்காக மன்னிப்பு கோர வேண்டும். அவ்வாறு மன்னிப்பு கோரா விட்டால் அவர்கள் மீது அவதூறு வழக்கு உள்ளிட்ட சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share