திரைப்படம் வெளியாகும் போது உயிரற்ற கட் அவுட்களுக்கு ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்வதைத் தடுக்க ரசிகர்களுக்கு வலியுறுத்துமாறு அஜித் மற்றும் விஜய்க்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க தலைவர் பொன்னுசாமி கடிதம் எழுதியுள்ளார்.
2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு அஜித் நடிப்பில் துணிவு மற்றும் விஜய் நடிப்பில் வாரிசு படங்கள் வெளியாகவுள்ளன. ஜனவரி 11 ஆம் தேதி படம் வெளியாகும் என்று அறிவித்ததில் இருந்தே ரசிகர்கள் அவர்களுக்குப் பிடித்த ஹீரோக்களின் போஸ்டர்களை சமூக வலைத்தளங்களில் பகிரத் தொடங்கினர்.

திரையரங்க வாசல்களிலும் கட் அவுட் வைத்து படம் வெளியாவதைக் கொண்டாடுவதற்குத் தயாராக உள்ளனர். இந்நிலையில், தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத் தலைவர் பொன்னுசாமி விஜய் மற்றும் அஜித்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், “தங்களது சிறப்பான நடிப்பிலும், திரையுலகில் பிரபலமான முன்னணி, மூத்த கலைஞர்களின் பங்கேற்பிலும், இயக்குநர் வம்சி அவர்களின் இயக்கத்திலும் உருவாகியுள்ள “வாரிசு” திரைப்படம் மற்றும் இயக்குநர் வினோத் அவர்களின் இயக்கத்திலும் உருவாகியுள்ள “துணிவு” திரைப்படம் தமிழர் திருநாளாம் வரும் பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாவது மிகுந்த மகிழ்ச்சி.
இத்தருணத்தில் இளம் தலைமுறையினரின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு கடந்த 2016ம் ஆண்டு முதல் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் தொடர்ச்சியாக முன் வைத்து வரும் கோரிக்கைகளை மீண்டும் தங்கள் முன் வைக்கக் கடமைப்பட்டுள்ளோம்.
உயிரற்ற கட்அவுட்டுகளுக்கு பாலாபிஷேகம் செய்வதைத் தடை செய்க
ஆண்டுக்கு ஒருமுறையோ அல்லது இரண்டு, மூன்று முறையோ திரையரங்குகளில் தங்களைப் போன்ற முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகும் காலங்களில் ரசிகர்களின் கொண்டாட்டங்கள் என்பது தவிர்க்க முடியாத ஒன்று தான் என்றாலும் கூட அது தங்களின் ரசிகர்களை மட்டுமின்றி, திரையரங்குகளுக்குப் படம் பார்க்க வருகை தரும் அனைத்து தரப்பு மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தாமல் பலனிக்கக் கூடியதாக அமைய வேண்டும்.

அதற்குத் தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்கு வளாகங்களில் தங்களின் திரைப்படங்கள் வெளியாகும் சமயங்களில் தங்களுக்கு வைக்கப்படும் பல அடி உயர கட்அவுட்டுகள் மீதேறி, அந்த உயிரற்ற கட்அவுட்டுகளுக்கு மாலை அணிவித்து, கற்பூர ஆரத்தி எடுத்து, ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்வதைத் தடுத்து நிறுத்தும் வகையில் தங்களின் ரசிகர்களுக்கான ஆக்கப்பூர்வமான அறிவிப்புகள் வெளியிட வேண்டும்.
இதனால் தமிழகம் முழுவதும் பல ஆயிரம் லிட்டர் பால் வீணடிப்பது தடுக்கப்படும். அத்துடன் அதுபோன்ற காலகட்டங்களில் பாலினை திருட்டு கொடுத்து விழி பிதுங்கி நிற்கும் பால் முகவர்களாகிய எங்களது வாழ்வாதார இழப்பானது காப்பாற்றப்படும்.
ஒரு வாரக் காலத்திற்கு விழிப்புணர்வு முகாம்
தங்களது திரைப்படம் தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் காலகட்டங்களில் வெறும் கட்அவுட்டுகள் வைப்பது, அதற்கு மாலை அணிவித்து மரியாதை செய்வது என்பதைக் கடந்து திரைப்பட வெளியீட்டு கொண்டாட்டங்களைப் பொதுமக்கள் மத்தியில் குறைந்தபட்சம் ஒரு வார காலமாவது விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
குறிப்பாக மது, சிகரெட் உள்ளிட்ட போதை வஸ்துக்களுக்கு எதிராகவும், உடல்உறுப்புதானம், தலைக்கவசம், சாலை விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வு முகாமினையும், அரசு மருத்துவமனை மற்றும் தன்னார்வ ரத்த வங்கி அமைப்புகளோடு இணைந்து ரத்ததான முகாம்களையும் அனைத்து திரையரங்க வளாகங்களிலும் நடத்தத் தங்களின் ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு, ரசிகர்களுக்கு கட்டளையிட வேண்டும்.
இது அடுத்த தலைமுறைக்கு நல்ல விசயங்களைக் கொண்டு போய் சேர்க்கவும், இளம் தலைமுறையினர் தடம் மாறி செல்வதையும் தடுக்க உதவி செய்வதாக அமையும்.
ஏனெனில் தங்களைப் போன்ற இளம் முன்னணி நடிகர்கள் திரையில் பேசும் வசனங்கள் வேதவாக்காகவும், திரையில் நிழலாக வரும் தங்களின் நடை, உடை, பாவனை என அனைத்தும் நிஜ வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய வேதமந்திரமாகவும் தற்போதைய இளம் தலைமுறையினருக்குத் தெரிகிறது.
அதனால் தான் இளம் தலைமுறையினர் தடம் மாறி சென்று விடக்கூடாது என்கிற நல்லெண்ண அடிப்படையில் தங்களைப் போன்ற முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகும் காலங்களில் எல்லாம் எங்களது தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் மேற்கண்ட கோரிக்கைகளை முன்வைப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறோம்.
கடந்த காலங்களில் உயிரைப் பணயம் வைத்துக் கொண்டாடிய சமயங்களில் பல்வேறு முன்னணி நடிகர்களின் நூறடிக்கும் உயரமான கட்அவுட்டுகளின் மேலிருந்து கீழே விழுந்து பல ரசிகர்கள் உயிரிழந்துள்ளதோடு, கை, கால்கள், மண்டை உடைந்து உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டதும், அவ்வாறு கட்அவுட் வைத்துக் கொண்டாடுவதில் மற்ற நடிகர்களின் ரசிகர்களுடன் சண்டையிட்டு சட்டம் ஒழுங்கை கேள்விக்குள்ளாக்கிய நிகழ்வுகளும் தமிழகம் முழுவதும் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
ரசிகர்கள் என்பவர்கள் அணுகுண்டுக்கு இணையான சக்தி மிக்கவர்கள் என்பதை தாங்கள் நன்கறிவீர்கள். அணுகுண்டை உலக நாடுகள் சில அழிவிற்குப் பயன்படுத்தும் வேளையில் ஆக்கப்பூர்வமான பணிகளுக்குப் பயன்படுத்தும் நாடுகளும் இருக்கவே செய்கின்றன.
அந்த வகையில் ரசிகர்கள் எனும் மாபெரும் அணுகுண்டு சக்தியை கட்அவுட்டுகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்ய வைத்து, கற்பூர ஆரத்தி எடுத்து, பாலாபிஷேகம் செய்கிற வெறும் விசிலடிச்சான் குஞ்சுகளாக இல்லாமல் ஆக்கப்பூர்வமான பணிகளைச் செய்ய வைக்கும் அளப்பரிய சக்தியாக மாற்றிட செய்வது தங்களின் கரத்திலும், குரலிலும் தான் இருக்கிறது.
இத்தருணத்தில் மேற்கண்ட எங்களது கோரிக்கைகளைக் கவனத்தில் கொண்டு அதனைச் செயல்படுத்த ரசிகர்களுக்கு கட்டளையிடுமாறு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.
மோனிஷா
தமிழ்நாட்டின் மீது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை: முதல்வர்
ஆளுநர் மாற்றிக்கொள்ள வேண்டும்; இல்லையேல் மாற்ற வேண்டும்- கமல்ஹாசன்