மகளிர் நலனுக்காக பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. Announcement in the budget for women welfare
இன்று (மார்ச் 14) தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் உரையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வாசித்து வருகிறார்.
அதில், “மகளிர் நலனுக்காக இந்த அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. முதல்வர் கையெழுத்திட்ட முதல் கோப்பு, விடியல் பயண திட்டம். இத்திட்டத்தின் மூலம் பெண்கள் பயணம் மேற்கொள்வது 40ல் இருந்து 60 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. 642 கோடி முறை பெண்கள் பயணம் செய்துள்ளனர்.
இந்த திட்டத்தால் பெண்கள் 888 ரூபாய் சேமிக்க முடிகிறது. இத்திட்டத்திற்காக மானிய தொகை 3,600 கோடி ரூபாயை 2025-26ஆம் ஆண்டில் வரவு செலவு திட்ட மதிப்பீடுகளில் அரசு ஒதுக்கியுள்ளது.
அதுபோன்று மகளிர் உரிமைத் தொகை திட்டம் மூலம் 1.15 கோடி குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டு வருகிறது. இதுவரை மகளிர் உரிமைத் தொகை பெற்றிடாத தகுதி வாய்ந்த இல்லத்தரசிகள் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்திட உரிய வாய்ப்புகள் விரைவில் வழங்கப்படும். இந்த திட்டத்துக்காக வரவு செலவு திட்டத்தில் 13,807 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் தற்போது 4 லட்சத்துக்கு 6 ஆயிரம் பெண்கள் பயன்பெறுகின்றனர். உயர்க்கல்விக்கு செல்லும் மாணவிகளின் எண்ணிக்கை 19 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. வரும் நிதியாண்டில் இத்திட்டத்தை செயல்படுத்த 420 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
மகளிர் சுய உதவிக்குழு திட்டத்தில் புதிதாக 10,000 சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்படும். மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் ரூ.37,000 கோடி வங்கிக் கடன் வழங்கிட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
புதிதாக, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் ரூ.77 கோடியில் மேலும் 10 இடங்களில் 800 பணிபுரியும் பெண்கள் பயனடையும் வகையில் தோழி விடுதிகள் அமைக்கப்படும்.
சென்னை, கோவை, மதுரையில் தலா 1,000 மாணவிகள் பயன்பெறும் வகையில் ரூ.275 கோடியில் மாணவியர் விடுதிகள் அமைக்கப்படும்” என்று அறிவித்தார். Announcement in the budget for women welfare
