விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விபத்து நடக்கக்கூடிய கரும்புள்ளி வளைவுகளில் மேம்பாலங்கள் அமைக்க அன்னியூர் சிவா எம்.எல்.ஏ கோரிக்கை மனு அளித்துள்ளார்.
விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட சென்னை–திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. இதனால் வி.சாலை, சூர்யா காலேஜ் சந்திப்பு, திருவாமத்தூர் கூட்டு சாலை, விராட்டி குப்பம் சாலை உள்ளிட்ட பகுதிகள் ஆபத்தான வளைவுகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இதனால் அந்த இடங்களில் சிறிய சுரங்கப்பாலங்கள் அமைக்க வேண்டும்.
மேலும் ராஜஸ்ரீ சர்க்கரை ஆலை, கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பனையபுரம் பகுதியில் பெரிய மேம்பாலம் கட்ட வேண்டும் எனவும் விக்கிரவாண்டி எம்எல்ஏ அன்னியூர் சிவா மனு அளித்தார்.
இந்த மனுவை, விசிக தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி., விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமார் எம்.பி. ஆகியோருடன் சேர்ந்து இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் தலைவர் சந்தோஷ் குமார் யாதவிடம் நேரில் சென்று வழங்கினார்.
மேலும், புதிய மேம்பாலங்களுடன் இணைக்கப்படும் சர்வீஸ் சாலைகளை சிமெண்ட் சாலைகளாக அமைக்க வேண்டும் என்றும், இரண்டு ஆண்டுகளாக நிலுவையில் உள்ள முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன் மேம்பாலப் பணிகளை உடனடியாக தொடங்கி விரைந்து முடிக்க வேண்டும் என்றும் அம்மனுவில் கேட்டுக்கொண்டார்.
மனுவை பெற்ற தேசிய நெடுஞ்சாலை ஆணையத் தலைவர் சந்தோஷ் குமார் யாதவ், குறிப்பிட்ட இடங்களுக்கு நேரில் வந்து ஆய்வு செய்து தேவையான நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.
