தேர்தல் விதிகளுக்கு மாறாக, நீதிமன்ற முத்திரைத்தாளில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளார் அண்ணாமலை என அதிமுக சார்பில் தேர்தல் ஆணையத்திடம் இன்று (மார்ச் 28) புகாரளிக்கப்பட்டுள்ளது.
கோவை நாடாளுமன்றத் தொகுதியில் திமுகவின் கணபதி ராஜ்குமார், அதிமுகவின் சிங்கை ராமச்சந்திரன், பாஜகவின் அண்ணாமலை உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.
இதனைத் தொடர்ந்து, பாஜக சார்பில் கோவையில் போட்டியிடும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
இந்நிலையில், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று வேட்பு மனு மீதான பரிசீலனை நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து, கோவை தேர்தல் நடத்தும் அலுவலரான மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, அண்ணாமலையின் வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அறிவித்தார்.
திமுக, அதிமுக, நாதக புகார்!
ஆனால், அண்ணாமலை தேர்தல் விதிகளுக்கு மாறாக, நீதிமன்ற முத்திரைத்தாளில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளதாக திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி சார்பில் புகாரளிக்கப்பட்டுள்ளது.
மேலும், தேர்தல் விதிகளை மீறி வேட்புமனுவை ஏற்றதாக தேர்தல் அதிகாரி மீதும் அதிமுகவினர் புகாரளித்துள்ளனர்.
அப்பட்டமான விதிமீறல்!
இதனைத் தொடர்ந்து, அண்ணாமலையின் வேட்புமனு செல்லாது என அறிவிக்கக்கோரி தேர்தல் ஆணையத்திடம் அதிமுக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
அதிமுகவின் மனுவில், “வேட்பு மனுக்களை தாக்கல் செய்யும்போது பத்திர பதிவுக்கான முத்திரைத் தாளில்தான் வேட்பு மனுத் தாக்கல் செய்ய வேண்டும்.
ஆனால், தேர்தல் ஆணையம் அனுமதிக்காத நீதிமன்ற முத்திரைத் தாளை பயன்படுத்தி அண்ணாமலை வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார்.
இது அப்பட்டமான விதிமீறல். இதன் காரணமாக, அண்ணாமலையின் வேட்புமனு ஏற்கப்பட கூடாது.
இது தொடர்பாக தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. எதிர்ப்பை மீறி அண்ணாமலையின் வேட்பு மனு ஏற்கப்பட்டதாக தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஆணையம் இதனை ஆய்வு செய்து அண்ணாமலை வேட்பு மனு செல்லாது என அறிவிக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளது.
தேர்தல் அதிகாரி விளக்கம்!
இதனையடுத்து தேர்தல் அதிகாரியான கிராந்தி குமார் பாடி இந்த புகார்களுக்கு தற்போது விளக்கம் அளித்துள்ளார். அதில், “அண்ணாமலை 2 வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளார். ஒன்றில் ’Indian Court Fee’ பத்திரம் மூலமும், மற்றொன்றை ‘Indian Non Judicial’ பத்திரம் மூலமும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில் ஒரு வேட்பு மனு சரியாக இருந்ததால், அண்ணாமலையின் வேட்பு மனு ஏற்கப்பட்டுள்ளது” என்று தேர்தல் அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வேட்பு மனு ஏற்பு… தீவிர வாக்கு சேகரிப்பில் இறங்கிய கலாநிதி வீராசாமி
வில்லேஜ் குக்கிங் சேனல் பெரிய தம்பிக்கு என்னாச்சி?
பினராயி விஜயன் மகள் மீது வழக்கு பதிந்த அமலாக்கத்துறை..கொதிக்கும் கேரள சிபிஎம்!