தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று மார்ச் 30 ஆம் தேதி நாகப்பட்டினத்தில் பிரச்சாரத்தை தொடங்கி அதன் பிறகு தஞ்சாவூருக்கு சென்றார்.
தஞ்சாவூரில் தேர்தல் பரப்புரைக்கு இடையே இன்று மாலை தஞ்சை நகரத்தில் இருக்கும் வாண்டையார் பங்களா என்று அழைக்கப்படும் காங்கிரஸ் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையாரின் வீட்டுக்கு ரகசியமாக சென்றார் அண்ணாமலை.
சுமார் ஒரு மணி நேரம் தமிழ்நாடு காங்கிரஸின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையாரோடு தனியாக உரையாடியிருக்கிறார் அண்ணாமலை. ஏற்கனவே தஞ்சாவூர் தொகுதி திமுகவுக்கு ஒதுக்கப்பட்டது குறித்தும், காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட டெல்டா தொகுதியான மயிலாடுதுறை தொகுதியிலும் தனக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை என்றும் வருத்தத்தில் இருந்திருக்கிறார் கிருஷ்ணசாமி வாண்டையார்.
இந்த வருத்தம் அவரது சம்பந்தியும் தற்போது பாஜக கூட்டணியில் இருக்கக்கூடிய அமமுக பொதுச்செயலாளர் தினகரனுக்கும் தெரிந்திருக்கிறது. இந்த நிலையில்தான், தஞ்சாவூர் பயணத்தின் போது திடீரென வாண்டையார் வீடு தேடிச் சென்று அவரை சந்தித்து பேசி இருக்கிறார் அண்ணாமலை.
இதனால் தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார் பாஜகவில் இணைவாரோ என்ற பேச்சு டெல்டா அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
அதேநேரம் இன்று இரவு கிருஷ்ணசாமி வாண்டையார் தனது பேஸ்புக் பக்கத்தில், ‘மரியாதை நிமித்தமான சந்திப்பு’ என்று மட்டும் பூடகமாக குறிப்பிட்டிருக்கிறார்.
“இந்தியா முழுவதும் காங்கிரசை துடைத்து எறிவதற்கான அத்தனை வேலைகளிலும் மோடி தீவிரமாக இருக்கிறார். காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. ரயில் டிக்கெட் எடுக்க கூட காங்கிரஸ் கட்சியிடம் பணம் இல்லை என்று கட்சியின் தலைவர் சோனியா காந்தியே சொல்லும் அளவுக்கு காங்கிரஸ் கட்சியை வைத்திருக்கிறார் பிரதமர் மோடி.
இந்த நிலையில் பாஜக மாநில தலைவரோடு மரியாதை நிமித்தமாக என்ன சந்திப்பு வேண்டி கிடக்கிறது?” என்று கேட்கிறார்கள் காங்கிரஸ் நிர்வாகிகள்.
ஏற்கனவே வருத்தத்தில் இருக்கும் வாண்டையார் அடுத்த வாரம் அமித் ஷா வரும்போது பாஜகவில் இணைந்தாலும் ஆச்சரியம் இல்லை என்கிறார்கள் தஞ்சை மாவட்டத்தில் இருக்கும் அவரது ஆதரவாளர்கள்.
தேர்தல் நேரத்தில் நடந்திருக்கும் இந்த சந்திப்பு திமுக வட்டாரத்திலும் கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் மூலம் வாண்டையார் மறைமுகமாக பாஜக கூட்டணிக்கு ஆதரவளிக்கிறாரா என்ற கேள்வியும் திமுகவினர் மத்தியில் எழுந்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
–வேந்தன்
திருநெல்வேலிக்கும் போங்க… அனிதாவுக்கு ஸ்டாலின் போட்ட அவசர உத்தரவு பின்னணி!