“ஜாபர் சாதிக் கூட்டாளிகளை விசாரிக்காதது ஏன்?” – அண்ணாமலை கேள்வி!

Published On:

| By Selvam

Annamalai urge take case against jaffer sadiq

டெல்லியில் ரூ.2000 கோடி மதிப்புள்ள போதை பொருள் கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட தமிழகத்தை சேர்ந்த மூன்று பேரை மத்திய போதைப்பொருள் கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் பிப்ரவரி 24-ஆம் தேதி கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட அனைவரும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், சென்னை மேற்கு மாவட்ட திமுக அயலக அணியின் துணை அமைப்பாளருமான ஜாபர் சாதிக் தலைமையில் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து, திமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ஜாபர் சாதிக் நீக்கப்பட்டார்.

தொடர்ந்து தலைமறைவாக இருந்து வரும் ஜாபர் சாதிக்கை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தேடி வருகின்றனர்.

இந்தநிலையில், போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் ஜாபர் சாதிக்கின் கூட்டாளிகள் அனைவரையும் உடனடியாக தமிழக அரசு கைது செய்ய வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

3 ஆண்டுகளில் 45 முறை போதை பொருள் கடத்தல்!

மத்திய அரசின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுத் துறை, கடந்த பிப்ரவரி 24 அன்று, டெல்லியில் சூடோஎபெட்ரீன் என்ற அதிக போதை தரும் செயற்கை வேதிப்பொருளை, சத்துமாவு, உலர்ந்த தேங்காய்த் தூள் என்ற போர்வையில் கடத்த முயன்ற, தமிழகத்தைச் சேர்ந்த 3 பேரை கைது செய்தது.

இந்த போதைப்பொருள் மாஃபியாவின் தலைவனாகச் செயல்பட்டவர், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளரும், திமுக அயலகப் பிரிவின் நிர்வாகியுமான ஜாபர் சாதிக் என்பவர் ஆவார்.

கடந்த 3 ஆண்டுகளில் 45 முறை, சுமார் 3,500 கிலோ சூடோஎபெட்ரீன் வேதிப்பொருளை இதுவரை அனுப்பியிருப்பதும், சர்வதேச சந்தையில் அதன் மதிப்பு சுமார் 2,000 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய நாடுகளில் செயல்படும் இந்த போதைப் பொருள் கடத்தல் கும்பலைக் கைது செய்து, இந்தக் கடத்தல் வலையை அறுத்தெறிய, இந்திய போதைப்பொருள் கட்டுப்பாட்டுத் துறை, அந்தந்த நாட்டு அதிகாரிகளையும் அணுகியுள்ளது.

இந்த சர்வதேச போதைப்பொருள் கடத்தலுக்கு உடந்தையாக இருக்கும் ஜாபர் சாதிக்கின் சகோதரர் முகமது சலீம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட அளவிலான நிர்வாகியாக இருக்கிறார்.

கடந்த சில ஆண்டுகளாக, ஜாபர் சாதிக் மற்றும் அவரது சகோதரர் சலீம் ஆகியோர், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர்கள் சேகர் பாபு, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பல திமுக தலைவர்களுடனும், விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்களுடன், கட்சிக்கு நன்கொடை, நிவாரண நிதி உள்ளிட்டவை வழங்கி நெருக்கமாகச் செயல்பட்டுள்ளனர்.

ஜாபர் சாதிக் கூட்டாளிகளை விசாரணைக்கு அழைக்காதது ஏன்?

போதைப் பொருள் கடத்தலில் தொடர்புடைய ஜாபர் சாதிக் மற்றும் அவரது சகோதரர்கள் முகமது சலீம் மற்றும் மைதீன் ஆகியோர், கடந்த சில ஆண்டுகளாக இந்தக் கட்சிகளுக்கு வழங்கிய நிதி குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும்.

இந்த ஜாபர் சாதிக், போதைப்பொருள் கடத்தல் மூலம் கிடைத்த பணத்தை, தமிழகத் திரைப்படத் துறையில் முதலீடு செய்து, கடந்த சில ஆண்டுகளாக ஏராளமான திரைப்படங்களைத் தயாரித்துள்ளார்.

தங்களது தனிப்பட்ட ஆதாயங்களுக்காக, சமூகத்தின் நலனைப் புறக்கணித்த அவரது திரைத்துறை கூட்டாளிகள் யார் யார் என்பது குறித்தும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

போதைப்பொருள் கடத்தல் என்பது நம் தேசத்தின் மீது நடத்தப்படும் போர் என்பதை மனதில் கொண்டு, இந்த கடத்தலில் தொடர்புடைய அனைவரையும் உடனடியாகக் கண்டறிந்து, அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவர்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்ய வேண்டும் என்று தமிழக பாஜக சார்பாக, தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.

இந்த போதைப் பொருள் கடத்தல் கும்பல் குறித்த செய்தி, நேற்று காலையில் வெளியானதில் இருந்து, இதுவரை இது தொடர்பாக திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஜாபர் சாதிக்குடன் நெருக்கமாக பழகிய திமுக மற்றும் தமிழ்த் திரையுலகைச் சார்ந்தவர்கள், இதுவரை விசாரணைக்கு அழைக்கப்படவில்லை. கட்சியிலிருந்து பதவி நீக்கம் மட்டும் செய்தால், மக்களின் கவனத்தை திசை திருப்பி விடலாம் என்று திமுக நம்பினால், அவர்கள் கணிப்பு தவறு.

இந்த விவகாரத்தில், திமுக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஜாபர் சாதிக்கின் கூட்டாளிகள் அனைவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் பாஜக தமிழக அரசை வலியுறுத்துகிறது.

தமிழக அரசு செயல்படுவது பொதுமக்களுக்காகவே தவிர, போதைப்பொருள் வியாபாரிகளுக்காக அல்ல என்பதை திமுக அரசுக்கு நினைவூட்டுகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஆப்பிள் இறக்குமதி: பாதிக்கப்படும் இந்திய விவசாயிகள்!

பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share