பள்ளி மாணவர்களுக்கு தரமற்ற உணவுகள்: அண்ணாமலை குற்றச்சாட்டு!

Published On:

| By Minnambalam

பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் உணவு தரமற்றதாக உள்ளது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று (நவம்பர் 4) குற்றம்சாட்டியுள்ளார்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு திட்டத்தின் கீழ் முட்டை வழங்கப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒன்று முதல் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு மதிய உணவு திட்டத்தின் கீழ் வாரம்தோறும் 92 ஆயிரம் முட்டைகள் வழங்கப்படுகிறது. அதில் மொடக்குறிச்சி தாலுகாவில் 120 பள்ளிகளும் கொடுமுடி தாலுகாவில் 90 பள்ளிகளும் முட்டை பெறுகின்றன.

ADVERTISEMENT

இந்தநிலையில் கடந்த புதன்கிழமை மாணவர்களுக்கு வழங்கிய முட்டைகள் அழுகி போயிருந்ததை சமையலர்கள் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். இதனால் கடந்த மூன்று நாட்களாக மொடக்குறிச்சி, கொடுமுடி தாலுகாவில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு முட்டைகள் வழங்கவில்லை. மொடக்குறிச்சி தாலுகாவில் 27 பள்ளிகளில் 1348 முட்டைகளும், கொடுமுடி தாலுகாவில் 13 பள்ளிகளில் 767 முட்டைகளும் அழுகிபோயிருந்துள்ளது. பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட முட்டைகள் அழுகியதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தாலுகா மற்றும் கொடுமுடி தாலுகாவில் உள்ள பல பள்ளிகளில், கடந்த புதன்கிழமை முதல் அடுத்தடுத்த நாட்களில், மாணவ மாணவியருக்கு வழங்கப்பட்ட முட்டைகள் அழுகிய நிலையில் இருந்திருக்கின்றன. அதனைத் தொடர்ந்து, கடந்த 3 நாட்களாக மாணவ மாணவியருக்கு மதிய உணவில் முட்டை வழங்காமல் நிறுத்தி வைத்திருக்கின்றனர்.

ADVERTISEMENT

சுமார் 2,000 முட்டைகள் அழுகிய நிலையில் இருந்ததாகச் செய்திகள் வெளிவந்துள்ளன. அமைச்சர் கீதா ஜீவன், மாணவர்கள் குறித்த எந்தக் கவலையும் இல்லாமல், மாணவர்களுக்கு அழுகிய முட்டை வழங்குவதைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார். ஒரே தவறைத் திரும்பத் திரும்பச் செய்து கொண்டிருந்தாலும், தவறு செய்தவர்களுக்கு எந்தத் தண்டனையும் கிடைப்பதில்லை.

குறைந்தபட்சம், முட்டை வழங்கும் நிறுவனங்கள் மீது கூட நடவடிக்கை எடுக்கப்படவில்லை. குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைப்பாட்டை போக்கிட, பிரதமர் மோடி கொண்டு வந்த போஷான் அபியான் திட்டம் மூலம், கடந்த ஏழு ஆண்டுகளில் தமிழகத்துக்கு வழங்கப்பட்டுள்ள நிதி ரூ.2,907 கோடி. சராசரியாக வருடத்திற்கு ஐம்பது லட்சம் குழந்தைகள் இந்தத் திட்டத்தின் மூலம் பலனடைகிறார்கள்.

ADVERTISEMENT

ஆனால், தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு, தரமற்றதாக இருக்கிறது என்ற குற்றச்சாட்டு அடிக்கடி எழுந்தாலும், அது குறித்த எந்த அக்கறையும் இல்லாமல் இருந்து வருகிறது ஊழல் திமுக அரசு. குறிப்பாக, திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து, எத்தனை முறை மதிய உணவில் அழுகிய முட்டைகளைக் கொடுத்தார்கள் என்பதற்குக் கணக்கே இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. ஏழை எளிய அரசுப் பள்ளி மாணவர்கள் என்றால் திமுகவுக்கு அத்தனை இளக்காரமாகி விட்டது. உடனடியாக, மாணவர்களுக்கு அழுகிய முட்டை வழங்கி அவர்கள் உயிருடன் விளையாடிக் கொண்டிருக்கும் சம்பந்தப்பட்டவர்கள் அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று என்று பாஜக சார்பில் வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது ஆளுநர் நடவடிக்கை எடுக்காதது ஏன்? – கே.எஸ்.அழகிரி

66 மின்சார ரயில்கள் ரத்து: ரயில் பயணியா நீங்க? இதை கவனிங்க!

Photo of author
Minnambalam
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share