வைஃபை ஆன் செய்ததும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில நிர்வாகிகள் கூட்டம் நடந்த புகைப்படங்கள் இன்பாக்ஸில் வந்து விழுந்தன.
அவற்றைப் பார்த்துக் கொண்டே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது.
“அதிமுக-பாஜக கூட்டணி கடந்த 2023 செப்டம்பர் மாதம் உடைந்தது. அதன் பிறகு ஏற்கனவே தேசிய ஜனநாயக கூட்டணியிலே அங்கம் வகித்த பாமக, தேமுதிக, தமிழ் மாநில காங்கிரஸ், புதிய தமிழகம், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட கட்சிகள் தாங்கள் அதிமுக பக்கமா, பாஜக பக்கமா என்பதை இன்றுவரை வெளிப்படையாக தெளிவாக்கவில்லை.
இப்போது அதிமுக வசம் அதிகாரபூர்வமாக இருக்கும் கூட்டணி கட்சிகள் புரட்சி பாரதமும் எஸ்டிபிஐ கட்சியும் தான். அதே நேரம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, வருகிற பிப்ரவரி 18ஆம் தேதி மோடி திருப்பூருக்கு தனது நடை பயண நிறைவு விழாவுக்கு வரும்போது கூட்டணி கட்சித் தலைவர்களை ஒருங்கிணைத்து பாஜக தலைமையில் ஒரு கூட்டணியை பிரதமர் முன்னிலையில் மேடை ஏற்றுவதற்கான வேலைகளை செய்து வருகிறார்.
அதிமுக தரப்பில் முன்னாள் அமைச்சரும் தலைமை கழகச் செயலாளருமான எஸ்பி வேலுமணி கடந்த இரண்டு வாரங்களாக கூட்டணி கட்சி தலைவர்களை ரகசியமாக சந்தித்து அதிமுக பக்கம் வருமாறும்… அப்படி வந்தால் தான் நாடாளுமன்றத் தேர்தலில் மட்டுமல்ல சட்டமன்றத் தேர்தலிலும் உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும் என்றும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அந்த கட்சிகளுக்கு வேலுமணி மேலும் ஆசைகளை காட்டியுள்ளதாகவும் அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன.
இங்கே அண்ணாமலையும் அதிமுக தரப்பில் வேலுமணியும் இப்படி முயற்சி மேற்கொண்டிருக்க… பாஜகவின் டெல்லி தலைமையோ மீண்டும் அதிமுகவை தேசிய ஜனநாயக கூட்டணியில் இழுக்கும் முயற்சியை இன்னும் கைவிடவில்லை.
டெல்லிக்கு கிடைத்திருக்கும் ரிப்போர்ட் படி தமிழ்நாட்டில் அதிமுக பாஜக மற்றும் ஏற்கனவே தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்த கட்சிகள் அனைத்தும் இணைந்து தேர்தலை சந்தித்தால் மட்டுமே திமுகவுக்கு வலுவான போட்டியை ஏற்படுத்த முடியும் என்றும், அதிமுகவும் பாஜகவும் தனித்தனி அணி அமைத்து தேர்தலை சந்தித்தால் திமுக இன்னமும் எளிதாக வெற்றி பெற்று விடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அடிப்படையில் தான் எப்படியாவது எடப்பாடி பழனிசாமியை சமாதானப்படுத்தி மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியில் அவரை கொண்டு வருவதற்கு டெல்லி பாஜக தலைமை முயற்சித்து வருகிறது. அந்த முயற்சிகளின் கடைசி கட்ட முயற்சியாக தான் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜிகே வாசன் பிப்ரவரி 2ஆம் தேதி மாலை எடப்பாடியை அவரது இல்லத்தில் சந்தித்திருக்கிறார்.
மோடி அமித்ஷா உள்ளிட்டோர் தன்னிடம் தமிழக விவகாரம் பற்றி கவலைப்படுவதாகவும் திமுகவுக்கு எதிரான சக்திகள் பிரிந்து போவது நாடாளுமன்றத் தேர்தலில் மோடியை பலவீனப்படுத்துவதாகவே அமையும். எனவே அண்ணாமலை தான் உங்களுக்கு பிரச்சனை என்றால் தமிழ்நாடு பாஜகவிற்கு தேர்தல் பொறுப்புக் குழு நியமித்து அண்ணாமலையை சற்று அடக்கி வைக்க கூட பாஜக தயாராக இருப்பதாகவும் வாசன் எடப்பாடி சந்திப்பில் பேசப்பட்டிருக்கிறது. ஆனால் எடப்பாடி இது தொடர்பாக எந்த உத்தரவாதமும் வழங்கவில்லை என்றும் அதிமுக வட்டாரத்தில் சொல்கிறார்கள்.
தனி அணி என்ற அண்ணாமலையின் வியூகத்தின் மீது டெல்லி பாஜக தலைமை நம்பிக்கை இழந்திருப்பதால்தான்… ஜி. கே. வாசன் மூலமாகவும் எடப்பாடிக்கு தூதுவிட்டு இருக்கிறார்கள்.
நேற்று எடப்பாடியை தனது கட்சிக்காரர்களுக்கு தெரியாமல் வாசன் சந்தித்த நிலையில்… இன்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் யாரும் கூட்டணி பற்றி பேசக்கூடாது என்று முதலிலேயே ஜி கே வாசன் கூறிவிட்டார். பிப்ரவரி 12ஆம் தேதி செயற்குழு கூட்டத்தில் நாம் முடிவெடுத்துக் கொள்ளலாம் என்றும் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார்.
அப்படியானால் எடப்பாடி சந்தித்ததற்கு நேர்மறையான விளைவுகள் இருக்கும் என்று வாசன் நம்புகிறார் என்றும் தமாகா வட்டாரத்தில் கூறுகிறார்கள்” என்ற மெசேஜுக்கு சென்ட் கொடுத்து ஆஃப்லைன் போனது வாட்ஸ் அப்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
நெற்றி நிறைய பட்டையுடன் வழிபாடு : ராகுலா இது?
‘அமித் ஷாவுடன் சந்திப்பு…’ : ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ராஜினாமா!