பெண்களின் பாதுகாப்பு குறித்து த.வெ.க தலைவரும், முதல்வருமான ஜோசப் விஜய் கூறி வரும் வாக்குறுதிகளுக்கு நேர்மாறாக உண்மை நிலை இருப்பது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது என அண்ணாமலை குற்றம் சாட்டி உள்ளார்.
சென்னை பரங்கிமலையில் கணவரை இழந்த பெண் ஒருவருக்குப் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆலந்தூர் வடக்கு பகுதிச் செயலாளர் வேம்புலி என்பவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் வேம்புலி மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இதனைத் தொடர்ந்து, அவர் கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து சென்னை புறநகர் த.வெ.க மாவட்டச் செயலாளர் சரவணன் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் கூறியிருப்பதாவது:
“ஆலந்தூர் வடக்கு பகுதி கழகச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வந்த வேம்புலி, கட்சியின் ஒழுங்கு விதிமுறைகளுக்கு முரணான செயல்பாடுகளில் ஈடுபட்டதாலும், கட்சியின் நற்பெயருக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் உடனடியாக நீக்கப்படுகிறார்.
இனி அவருக்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை. த.வெ.க-வின் பெயர், கொடி, சின்னம் மற்றும் நிர்வாகப் பொறுப்புகளைப் பயன்படுத்தி அவர் எந்தவொரு நடவடிக்கையிலும் ஈடுபடக் கூடாது; அவரால் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகளுக்குக் கழகம் பொறுப்பேற்காது. கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் யாரும் அவருடன் கட்சி சார்ந்த தொடர்புகள் வைத்துக்கொள்ளக் கூடாது.” என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அண்ணாமலை கண்டனம்:

இந்த விவகாரம் குறித்து ‘வி த லீடர்ஸ்’ இயக்கத்தின் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “த.வெ.க நிர்வாகி வேம்புலி, கணவரை இழந்து தனியாக வசிக்கும் பெண்ணின் வீட்டிற்குள் புகுந்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. பெண்களின் பாதுகாப்பு குறித்து த.வெ.க தலைவரும், முதலமைச்சருமான ஜோசப் விஜய் கூறி வரும் வாக்குறுதிகளுக்கு நேர்மாறாக உண்மை நிலை இருப்பது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது.
திமுக ஆட்சியில் நடைபெற்ற பெண்களுக்கு எதிரான குற்றங்கள், தற்போதைய ஆட்சியிலும் குறையவில்லை. இது போன்ற கடுமையான குற்றங்களில் ஈடுபடும் தைரியம் இவர்களுக்கு எங்கிருந்து வருகிறது? சமூக விரோதச் செயல்பாடுகளுக்கு அரசியல் அடையாளம் ஒருபோதும் பாதுகாப்பாக இருக்கக் கூடாது என்பதை முதலமைச்சர் உறுதி செய்ய வேண்டும். குற்றவாளி மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
