நரேந்திர மோடியை அடையாளம் கண்டு முதல்வர் ஆக்கியது வாஜ்பாய் தான் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று (டிசம்பர் 25) தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக சார்பில், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நூற்றாண்டு பிறந்த தின விழா நிகழ்ச்சி மற்றும் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் 1 லட்சம் நபர்கள் கணக்கு தொடங்கும் தொடக்க நிகழ்ச்சி சென்னை அடையாறில் இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, தமிழக பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை, “வாஜ்பாய் 9 முறை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வாகி உள்ளார். 1999-க்கு முன்பு குறுகிய காலத்தில் நான்கு முறை நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. பொக்ரான் அணு ஆயுத சோதனை நமக்கு எவ்வளவு முக்கியமானது என்று நாம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.
வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில், தமிழ்நாட்டில் முரண்பட்ட கொள்கைகள் கொண்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்திருந்தோம். மோடியை அடையாளம் கண்டு முதல்வர் ஆக்கியது வாஜ்பாய் தான்.
வாஜ்பாய் கொண்டு வந்த திட்டங்களை மேலும் மெருகேற்றியவர் மோடி. எனவே இந்த செல்வ மகள் சேமிப்பு திட்டம் நாம் நிர்ணயித்த ஒரு லட்சம் பெண் குழந்தைகளுக்கு தலா ஆயிரம் ரூபாய் வீதம் நாம் சேமிப்பு செய்து கணக்கை ஆரம்பித்து இலக்கை எட்ட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.
இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “சென்னையின் மையப்பகுதியில் அனைத்து பாதுகாப்பு அம்சங்களும் நிறைந்த அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒரு கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
இதைப்பற்றி முதன்மையான விசாரணை செய்வதற்கு கேட்டபோது கண்காணிப்பு கேமராக்கள் எதுவும் மழையின் காரணமாக இயங்கவில்லை என்று சாதாரணமாக கூறுகிறார்கள்.

நமது முதல்வர் உறங்கிக் கொண்டிருக்கிறார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எவ்வளவு மோசமாக உள்ளது என்பதை அவர் தெரிந்து கொள்ள வேண்டும்” என்றார்.
தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகத்திற்கு வரும்போது கருப்புக் கொடி காட்ட உள்ளதாக செல்வப் பெருந்தகை கூறியுள்ளாரே என்று கேட்டதற்கு, “அமித்ஷா தமிழ்நாட்டுக்கு வரும் தேதி இன்னும் முடிவாகவில்லை. முடிவானதும் நானே கூறுகிறேன்.
தமிழ்நாட்டில் யார் வேண்டுமானாலும் கருப்பு சட்டை அணியலாம். கருப்பு கொடி காட்டலாம். ஏனென்றால் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு மிகவும் சீர்குலைந்துள்ளது” என்று அண்ணாமலை தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மதச்சார்பின்மையைப் பேணிக்காத்தவர் வாஜ்பாய்… ஸ்டாலின் புகழாரம்!
‘என் மகனே இறந்து போயிட்டான்’- நடிகை திரிஷா வெளியிட்ட உருக்கமான பதிவு!