அன்பில் மகேஷ் உடனே பதவி விலக வேண்டும்: போர்க்கொடி தூக்கிய அண்ணாமலை

Published On:

| By Minnambalam Desk

பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பதவியிலிருந்து அன்பில் மகேஷ் உடனே விலக வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். Annamalai says Anbil Mahesh

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில் மாணவிகள் 7 பேர், குழந்தைகள் பாதுகாப்பு அவசர உதவி எண்ணுக்கு அழைத்து பாலியல் தொல்லை புகார் அளித்தனர். அதன் பேரில் பள்ளிக்குச் சென்று விசாரணை நடத்திய போலீசார், பாலியல் தொல்லை அளித்ததாக உதவித் தலைமை ஆசிரியர் பெருமாளை கைது செய்தனர். அவர் மீது போக்சோ உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதுதொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று (பிப்ரவரி 19) வெளியிட்ட அறிக்கையில், “தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டங்களிலும், தொடர்ந்து பள்ளி மாணவிகள் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர் என்று குற்றம்சாட்டினார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதுக்கோட்டை மாவட்டம் அரசுப் பள்ளியில், மாணவிகள் 7 பேருக்குப் பாலியல் தொல்லை அளித்த பள்ளி உதவித் தலைமையாசிரியர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

ADVERTISEMENT

தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டங்களிலும், தொடர்ந்து பள்ளி மாணவிகள் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். பள்ளிகளில் மாணவ மாணவியர் பாதுகாப்பை உறுதி செய்ய, ஆலோசனைக் குழுக்கள் அமைப்பதாகச் சொல்லி மூன்று ஆண்டுகள் கடந்து விட்டன.

எந்தப் பள்ளிகளிலும் இந்தக் குழுக்கள் செயல்பாட்டில் இல்லை என்பதையே, தொடர்ந்து பள்ளி மாணவிகள் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாவது காட்டுகிறது. குழந்தைகள் பாதுகாப்புக்கான தேசிய அவசர உதவி எண் 1098-க்கு அழைத்ததால் மட்டுமே, தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

ADVERTISEMENT

பள்ளி செல்லும் நமது பெண் குழந்தைகளைப் பாதுகாப்பதில், திமுக அரசு முற்றிலுமாகத் தோல்வி அடைந்து விட்டது. இத்தனை தொடர் குற்றங்களுக்குப் பிறகும், பள்ளி மாணவ, மாணவியர் பாதுகாப்பை உறுதி செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இனியும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அமைச்சராகத் தொடரத் தகுதியோ, தார்மீக உரிமையோ இல்லை. உடனடியாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பதவியிலிருந்து, அன்பில் மகேஷ் விலக வேண்டும். முதலமைச்சர் உடனடியாக, பள்ளிக் கல்வித் துறைக்குத் திறமையான, குழந்தைகள் நலனில் அக்கறை கொண்ட வேறு ஒருவரை அமைச்சராக நியமித்து, பள்ளிக் குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Annamalai says Anbil Mahesh

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share