போராட்டம் நடத்த வந்த பாஜகவினரை கைது செய்தும், வீட்டுக் காவலில் வைத்தும், ஜனநாயக விரோதமாக திமுக அரசு நடந்து கொள்கிறது என அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார். annamalai on bjp leaders arrest
திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக இன்று (பிப்ரவரி 4) இந்து முன்னணி கட்சி ஆர்ப்பாட்டத்தை அறிவித்துள்ளது.
இதன் முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக மதுரையில் இரண்டு நாட்கள் 144 தடை உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. எனினும் அதனை மீறியும் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்தனர்.
இதனையடுத்து இன்று அதிகாலை முதலே தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த இந்து முன்னணி அமைப்பினர், பாஜகவினர் மற்றும் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகள் போலீசாரால் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு? annamalai on bjp leaders arrest
இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், “திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மலை தொடர்பான நிகழ்வுகளில், இந்து மத விரோதமாகச் செயல்படும் அமைப்புகளைக் கண்டித்தும், பாரபட்சமாகச் செயல்படும் திமுக அரசைக் கண்டித்தும், ஆலயத்தின் புனிதத்தைக் காக்க இன்று நடைபெறவிருந்த போராட்டத்தைத் தடுக்க, மதுரை மாவட்டம் முழுவதும் திமுக அரசு 144 தடைவிதித்துள்ளது.
ஆனால், தமிழகம் முழுவதுமே, 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது போல, பாஜக விருதுநகர் கிழக்கு மாவட்டத் தலைவர் பாண்டுரங்கன், கோயம்புத்தூர் நகர மாவட்டத் தலைவர் ரமேஷ், தூத்துக்குடி வடக்கு மாவட்டத் தலைவர் சரவணகிருஷ்ணன், சேலம் நகர மாவட்டத் தலைவர் சசிக்குமார் மற்றும் பாஜக சகோதரர்கள் என பலரையும் கைது செய்தும், வீட்டுக் காவலில் வைத்தும், ஜனநாயக விரோதமாக நடந்து கொள்கிறது திமுக அரசு.
அனைத்துக்கும் ஒரு எல்லை உண்டு. திமுக அமைச்சருக்கு ஒரு நியாயம், பொதுமக்களுக்கு ஒரு நியாயமா? பொறுமையும், சகோதரத்துவமும் கொண்ட தமிழக மக்களைச் சீண்டிக் கொண்டே இருக்கும் தேவையற்ற நடவடிக்கைகளுக்குத் துணைசெல்வதை, திமுக அரசு உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். உடனடியாக, கைது செய்யப்பட்டவர்கள் அனைவரையும் விடுவிப்பதோடு, ஜனநாயக ரீதியாகப் போராட அனுமதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அண்ணா நினைவு தினத்தையொட்டி அமைச்சர் மூர்த்தி தலைமையில் அமைதி பேரணி நேற்று நடைபெற்றது. அதனை குறிப்பிட்டு, ”மதுரையில் 144 தடை உத்தரவு பிறப்பித்திருந்த திமுக அரசு, அமைச்சர் மூர்த்தி ஊர்வலத்திற்கு மட்டும் எப்படி அனுமதி வழங்கியது?” என அண்ணாமலை நேற்று கேள்வி எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.