அண்ணாமலை, எல்.முருகன் சாலை மறியல்… வருத்தம் தெரிவித்த எஸ்.பி: நீலகிரியில் நடந்தது என்ன?

Published On:

| By Kavi

நீலகிரியில் வேட்புமனு தாக்கல் செய்ய சென்றபோது அதிமுக – பாஜகவினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில், அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதில் சிலருக்கு காயம் ஏற்பட்டது.

தமிழ்நாட்டில் இன்று(மார்ச் 25) பல்வேறு கட்சியை சேர்ந்த முக்கிய வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

நீலகிரி தொகுதியில் பாஜக சார்பில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் போட்டியிடுகிறார். அதிமுக சார்பாக முன்னாள் சபாநாயகர் தனபால் மகன் லோகேஷ் தமிழ்ச் செல்வன் போட்டியிடுகிறார். திமுக சார்பில் துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி போட்டியிடுகிறார்.

இன்று அதிமுக, பாஜக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இரு கட்சியினரும் உதகை காபி ஹவுஸ் சந்திப்பில் இருந்து ஊர்வலமாக செல்ல திட்டமிட்டிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

முதலில் பாஜகவுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், தங்களுக்கு தாமதம் ஆவதாக கூறி அதிமுகவினரும் புறப்பட்டிருக்கின்றனர்.

இதனால் வாக்குவாதம் ஏற்பட்டு இரு கட்சினரும் மாறி மாறி கோஷங்கள் எழுப்பினர். பாஜகவினர் மோடி, மோடி என கோஷம் எழுப்பினர். இந்நிலையில் அசம்பாவிதம் உருவாவதை தடுக்க இரு கட்சியினர் மீதும் போலீசார் லேசான தடியடி நடத்தினர்.

இந்த சம்பவத்தால் அங்கிருந்த  சிலருக்கு காயம் ஏற்பட்டது. அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

Image

தொடர்ந்து எல்.முருகனும், அண்ணாமலையும் வந்த பிறகு பாஜகவினர்  வேட்புமனு தாக்கல் செய்ய ஊர்வலமாக புறப்பட்டனர்.

இதனால் ஆத்திரமடைந்த அதிமுகவினர் போலீசாரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கட்டுப்படுத்தினர்.

இந்நிலையில், நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்த பிறகு, வெளியே வந்த எல்.முருகன் மற்றும் அண்ணாமலை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

போலீசார் தடியடி நடத்தியதால், பெண்கள், ஒரு குழந்தை ஆகியோருக்கு காயம் ஏற்பட்டதாக குற்றம்சாட்டிய அண்ணாமலை, காவல் கண்காணிப்பாளர் வந்து மன்னிப்பு கேட்கும் வரை இங்கிருந்து நகரமாட்டேன் என்று சாலைமறியலில் ஈடுபட்டார்.

இதைத்தொடர்ந்து ஊட்டி எஸ்.பி.சுந்தரவடிவேல் சாலை மறியல் நடைபெறும் இடத்துக்கு வந்து அண்ணாமலையிடம் பேசி வருத்தம் தெரிவித்தார்.

அப்போது மைக்கில் பேசிய அண்ணாமலை, ‘இது தெரிந்து நடக்கவில்லை. சூழ்நிலையை கட்டுக்குள் கொண்டு வர முயற்சி செய்தோம். இதில் உங்களது தொண்டர்கள் பாதிக்கப்பட்டிருந்தால் மன்னிப்பு கேட்கிறோம் என எஸ்.பி கூறினார். அதனால் சாலை மறியலை வாபஸ் பெறுகிறோம்” என கூறினார்.

இதையடுத்து, பாஜகவினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “இன்றைய சம்பவம் குறித்து தலைமை தேர்தல் அதிகாரியிடம் சென்னையில் இருக்கக் கூடிய பாஜகவினர் புகார் அளித்தனர். நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

சத்தமின்றி திருமணம் முடித்த ‘ஆடுகளம்’ நடிகை

நாடாளுமன்றத் தேர்தல்: வேட்புமனு தாக்கல் விறுவிறுப்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share