தலைநகரம் தண்ணீரில் தத்தளிப்பது தலைகுனிவாக இருக்கிறது என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
மிக்ஜாம் புயலின் போது பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்பில் இருந்து சென்னை இன்னும் மீளவில்லை. கடந்த 3 நாட்களாக பல்வேறு இடங்களிலும் தண்ணீர் தேங்கியிருக்கிறது.
இந்நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை வேளச்சேரி, சைதாப்பேட்டை, ஆயிரம் விளக்கு, தி.நகர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று (டிசம்பர் 6)ஆய்வு மேற்கொண்டார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு பால், பிரெட், பிஸ்கட் உள்ளிட்ட தேவையான பொருட்களை வழங்கினார். சைதாப்பேட்டையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மதிய உணவு வழங்கினார்.
இந்த ஆய்வின் போது வேளச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கடுமையாக உழைக்கிறார்கள். கடைநிலை ஊழியர்கள் முதல் உயரதிகாரிகள் வரை அனைவரும் உழைக்கிறார்கள். இரவிலும் வேலை செய்கிறார்கள்.
இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் முக்கியமான கேள்வி என்றால், சின்ன மழையாக இருந்தால் சில இடங்களில் மழை நீர் தேங்குகிறது. பெரிய மழையாக இருந்தால் சென்னை முழுவதும் தேங்குகிறது.
எத்தனையோ மாஸ்டர் ப்ளான் போடுகிறார்கள். 4 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்யப்பட்டிருக்கிறது. சென்னை என்பது ஒரு குளோபல் சிட்டி, இண்டர்நேஷனல் சிட்டி. இன்று நிறைய கார்ப்பரேட் நிறுவனத்தினர் சென்னைக்கு வர பயப்படுகிறார்கள். ஹைதராபாத் செல்கிறார்கள்.
நான் சிலரிடம் பேசும் போது மழை காலத்தில் ஹைதராபாத் பாதுகாப்பாக இருக்கிறது என்கிறார்கள். சென்னையில் இயற்கை பேரிடர் இருக்கிறது என்கிறார்கள். இதை மாற்றுவதற்கு முயற்சி எடுக்க வேண்டும்.
நான் அரசியல் செய்ய விரும்பவில்லை. இந்த ஆட்சிக்கு இன்னும் 30 மாதங்கள் இருக்கிறது. இவர்கள் முழு மனதோடு மாற்றி யோசிக்க வேண்டும். பழைய பாலிடிக்ஸ், பழைய பஞ்சாயத்தெல்லாம் செய்யக் கூடாது.
மழை வரும் போது வேட்டியை மடித்துகட்டிக்கொண்டு களத்தில் இறங்கி, மக்களுக்கு போர்வை உள்ளிட்டவை கொடுப்பதெல்லாம் 21ஆம் நூற்றாண்டில் நன்றாகவா இருக்கிறது.
சிறந்த நிபுணர்களை கொண்டு வந்து, ஊழல் இல்லாத திட்டங்களை செய்ய வேண்டும். மேயர் அதிகாலை 3 மணிக்கு காரை எடுத்துக்கொண்டு பாதிக்கப்பட்ட இடத்துக்கு போவதெல்லாம் பெருமை கிடையாது,
தலைநகரம் ஒவ்வொரு மழையின் போதும் தத்தளிப்பது எனக்கு தலைகுனிவாக இருக்கிறது. அடுத்த மழைக்காவது தப்பிக்க வேண்டும். உலகளவில் இருந்து நிபுணர்களை கொண்டு வர வேண்டும்” என்றார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் நோ எலிமினேஷன்… காரணம் என்ன?
மழை பாதிப்பு: மின் கட்டணம் செலுத்த அவகாசம்!

Comments are closed.