பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகியுள்ளார்.
இந்தநிலையில் தனது அடுத்தக்கட்ட நகர்வு குறித்து அவர் சமூக வலைதளம் வாயிலாக பேசி வருகிறார்.
அதில்,
”கடந்த 2020 ஆகஸ்ட் 25ஆம் தேதி டெல்லிக்கு வந்து பாஜகவில் நான் இணைந்தேன். தமிழக மக்களுக்காக 6 ஆண்டு காலம் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. அதை பெரிய பாக்கியமாக கருதுகிறேன்.
அன்றைக்கு எந்த இடத்தில் இணைந்தேனோ இன்று அதே இடத்துக்கு வந்திருக்கிறேன். வேறு பாதையில் பயணம் செய்ய வேண்டும் இலக்குகள் நிறைய இருக்கிறது. ஒரு புதிய அரசியலை, அடிப்படை கட்டமைப்பை மாற்றக்கூடிய அரசியலை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு இதை ஒரு பண்போடு தலைமையிடம் சொல்லிவிட்டு வெளியே வந்திருக்கிறேன்.
இதை தமிழர் பண்பு கூட என்று எடுத்துக் கொள்ளலாம்.
வெளியே செல்லும்போது மரியாதையாக சொல்லிவிட்டு கிளம்ப வேண்டும் என்பதுதான் எனக்கும் இலக்கணமாகப்படுகிறது.
இன்றிலிருந்து ஒரு புதிய பாதை புதிய அரசியல் இயக்கம், புதிய பரிமாணத்தோடு பார்க்கக் கூடிய ஒரு விதத்தில் தான் ஒரு இயக்கத்தை ஆரம்பிக்கிறேன்.
அதற்கு முன்பு சில விஷயங்களை உங்களிடம் சொல்ல வேண்டும்.
என்னுடைய அரசியல் பாதை வளைந்து நெளிந்து இப்போது இங்கே வந்து நிற்கிறது.
ஒரு கிராமத்தில் சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்து, இங்கு வந்திருக்கிறேன்.
நான் லக்னோவில் படிக்கும்போது 2009 ஆம் ஆண்டு எனது அரசியல் பயணம் ஒரு இன்டெர்ன்ஷிப் மூலம் தேமுதிகவில் இருந்து தொடங்கியது.
அதன் பிறகு பாஜகவில் இருந்து ஆரம்பித்து ஆறாண்டு காலம் தொடர்ந்தது.
இன்றைக்கு தனித்துவமாக நம்முடைய இயக்கத்தை மக்கள் முன்னால் வைக்கிறேன்.
25 வயதில் நான் விஜயகாந்த் அவர்கள் கட்சியில் இன்டர்ன்ஷிப் செய்தது பாக்கியமாக கருதுகிறேன்.
அன்றிலிருந்து ஒரு புதிய பாதையை உருவாக்க 17 ஆண்டுகளாக போராடிக் கொண்டிருக்கிறேன்.
ஒரு புதிய அரசியலை புதிய சமூகத்தை கொண்டு வர முடியுமா என போராடிக் கொண்டிருக்கிறேன்.
இதே டெல்லியில் பாஜகவில் நான் இணைய வரும் போது ஆகஸ்ட் 24, 2020 அன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எனக்கு போன் செய்தார்.
அவரிடம் நான் நிறைய பேசி இருக்கிறேன். அவருடைய அரசியல் பாதை எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி எல்லாம் பேசி இருக்கிறேன்.
அப்போது ரஜினிகாந்த், நான் டெல்லியில் இருந்து திரும்பி வரவேண்டும். அவருடைய இயக்கத்தில் இணைய வேண்டும் என்று வேண்டுகோளை வைத்தார். அதாவது நான் பாஜகவில் இணைவதற்கு ஒரு நாள் முன்னதாக ஆகஸ்ட் 24ஆம் தேதி இதை சொன்னார்.
அப்போது மூன்று விஷயங்கள் என் முன்னால் வந்தது.
தமிழ்நாட்டுக்கு எது நல்லது. சூப்பர் ஸ்டார் அரசியலுக்கு வரவேண்டும் அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அவர் வருவது தமிழ்நாட்டுக்கு நல்லது.
அதேசமயம் சூப்பர் ஸ்டாருக்கு எது நல்லது. அவர் அரசியலுக்கு வராமல் இருப்பது தான் நல்லது. கொரோனா காலகட்டத்தில் அவருக்கு இருக்கக்கூடிய உடல்நல பிரச்சனை… இதை அவர் கவனித்துக் கொள்ள வேண்டும். அவர் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.
அண்ணாமலைக்கு எது நல்லது.. பாஜகவில் இணைவேன் என்ற வாக்குறுதியை சந்தோஷ் அவர்களிடம் கொடுத்தேன். அதை உடைக்ககூடாது என்பதில் நான் தெளிவாக இருந்தேன்.
ரஜினிகாந்திடம் என்னால் வர முடியாது என்று சொல்லி, மன்னிப்பு கேட்டு அடுத்த நாள் நான் பாஜகவில் இணைந்தேன்.
அவரும் பெருந்தன்மையாக நடந்து கொண்டார். அடுத்து அவருடைய பாதையையும் தீர்மானித்தார்.
இதையெல்லாம் நான் எதற்காக சொல்கிறேன் என்றால் சில யூகங்களுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இதைத் தவிர வேறு எந்த காரணமும் கிடையாது.
இன்றும் ரஜினிகாந்த் அவர்கள் மீது எனக்கு மிகுந்த மரியாதை இருக்கிறது.
அதேசமயம் பாஜகவை பொறுத்தவரை இந்த ஆறு ஆண்டு காலத்தில் எப்பொழுதும், தமிழ்நாட்டின் அடையாளத்தையும், மண்ணை, கலாச்சாரத்தை, பாரம்பரியத்தை விட்டுக் கொடுத்தது கிடையாது” என்று கூறினார்
