டிஜிட்டல் திண்ணை:  அண்ணாமலை கைது?  களத்தில் குதிக்கும் அமித் ஷா…  பரபரப்புத் திருப்பங்கள்!

Published On:

| By Aara

வைஃபை ஆன் செய்ததும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப் பெருந்தகை,  தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோருக்கு இடையிலான வார்த்தைப் போர் வீடியோக்கள் இன்பாக்ஸில் வந்து விழுந்தன.

அவற்றைப் பார்த்தபடியே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது.

“பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்  கொலை  தொடர்பான விவாதத்தில்  சட்டம் ஒழுங்கு பற்றி அண்ணாமலை பேசக்கூடாது என்று செல்வப் பெருந்தகை  தெரிவித்திருந்தார்.

இதுபற்றி செய்தியாளர்கள் கேட்டபோது,  ‘காங்கிரஸ் கட்சியில் எத்தனையோ தலைவர்கள் இருந்திருக்கிறார்கள்.  ஆனால் செல்வப் பெருந்தகை  குற்றப்  பின்னணி கொண்ட  ஹிஸ்டரி ஷீட்டர்’ என்று  குறிப்பிட்டார் அண்ணாமலை.

இதையடுத்து  செல்வப் பெருந்தகை  தமிழக  பாஜகவில்  சுமார் 250க்கும் மேற்பட்ட  நிர்வாகிகள் மீது  1977 வழக்குகள் இருப்பது பற்றி உளவுத்துறை அறிக்கையை மேற்கோள் காட்டி முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட பட்டியலை  மீண்டும் வெளியிட்டார்.  மேலும் தன் மீது பல ஆண்டுகள் முன் தொடுக்கப்பட்ட வழக்குகள் அவற்றின் சட்ட ரீதியான போக்குகள் குறித்து வீடியோவும் வெளியிட்டார் செல்வப்பெருந்தகை.

மேலும்  அண்ணாமலை நாவை அடக்கி பேச வேண்டும் என்றும்  அவருக்கு எதிராக அவதூறு வழக்கும்,  எஸ்சி எஸ்டி வன்கொடுமை  தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கும் தொடரப்படும்  என்றும் செல்வப்பெருந்தகை எச்சரித்தார்.

இந்த நிலையில்  காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை  எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ்  அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்குமாறு  ஒரு புகாரை தயார் செய்து  சென்னை  மாநகர போலீஸ் கமிஷனரை சந்தித்திருக்கிறார் என்கிறார்கள் அரசியல் வட்டாரங்களில்.

புகாரை படித்துப் பார்த்த போலீஸ் உயரதிகாரிகள் அண்ணாமலைக்கு எதிரான இந்த புகார் சட்ட ரீதியாக நிற்காது என்றும்,  அப்படி அண்ணாமலை மீது வன்கொடுமை தடுப்புச் சட்டப்படி வழக்குப் பதிவு செய்தால் தேவையற்ற அரசியல் விளைவுகள்தான் ஏற்படும் என்றும் கூறிவிட்டனர். இதனால் செல்வப்பெருந்தகை தரப்பில் வருத்தத்தில் இருக்கிறார்கள் என்றும் காங்கிரஸ் வட்டாரத்தில் தெரிவிக்கிறார்கள்.

இதுபற்றிய வருத்தத்தை செல்வப்பெருந்தகை தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கும் தெரியப்படுத்தியிருப்பதாகவும் காங்கிரஸ் தரப்பில் கூறுகிறார்கள்.

இதையடுத்து அண்ணாமலை  கைது செய்யப்படும் வகையில் புகாரை தயார் செய்வது  தொடர்பான சட்ட ஆலோசனைகளிலும் செல்வப்பெருந்தகை தொடர்ந்து ஈடுபட்டுள்ளார்.

5 பேர் மற்றும் உரை படமாக இருக்கக்கூடும்

இதே நேரம் காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள்  உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள்  தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே அண்ணாமலையின்  உருவ பொம்மையை  எரித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.   ஆனால் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர்களான மூத்த நிர்வாகிகள் இதுவரை  அண்ணாமலைக்கு எதிராக செல்வப் பெருந்தகைக்கு ஆதரவாக  கண்டன அறிக்கையோ  பேட்டியோ கொடுக்கவில்லை.

இன்னும் சொல்லப்போனால்  செல்வப் பெருந்தகை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி  தலைவராக நியமிக்கப்படுவார் என்று பேசப்பட்ட சூழலில்…. அவருடைய கடந்த கால வழக்குகள் பற்றி ஆங்கிலத்தில் நீண்ட கடிதங்களை டெல்லிக்கு தமிழக காங்கிரஸ்  புள்ளிகள் சிலர்  அனுப்பி வைத்தனர்.  அந்த கடிதங்களில் இருக்கும் விவரங்களைதான் அண்ணாமலை இப்போது  பத்திரிகையாளர்களிடம் தெரிவித்து வருகிறார்.

இந்த விஷயங்கள் பற்றி இவ்வளவு  விரிவாக அண்ணாமலைக்கு சில காங்கிரஸ் புள்ளிகளே அனுப்பி வைத்திருக்கிறார்கள் என்றும் சத்தியமூர்த்தி பவன் வட்டாரத்தில்  அதிருப்தியோடு இருக்கிறார்கள்.

இன்னொரு பக்கம்  தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை  தரப்பிலும் செல்வப்பெருந்தகைக்கு எதிரான நடவடிக்கைகள் பற்றி பெரும் திட்டம் தீட்டப்பட்டு வருகிறது என்கிறார்கள்.

‘லண்டனில் செல்வப்பெருந்தகை முதலீடு செய்த  பணம் பற்றிய விஷயத்தை எல்லாம் நான் கொண்டு வருகிறேன். இதுதான் தமிழகத்தின் தலைவிதி என்றால் அதை கையிலெடுக்க நான் தயாராக உள்ளேன். ரிசர்வ் வங்கியில் கடைநிலை ஊழியராக இருந்த செல்வப் பெருந்தகை லண்டனில் என்னவெல்லாம் வாங்கியுள்ளார்?  எல்லாவற்றையும் பேசுவோம்’ என்று பேட்டியளித்திருந்தார் அண்ணாமலை.

இந்நிலையில் லண்டனில் செல்வப் பெருந்தகை முதலீடு செய்ததாக கூறப்படுவது பற்றிய முழு விவரங்களைத் திரட்டி அவருக்கு எதிராக அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம்  அண்ணாமலை கோரிக்கை வைத்திருக்கிறார். இதை சுட்டிக் காட்டி செல்வப்பெருந்தகை மீது விரைவில் அமலாக்கத்துறை ஆக்‌ஷன் பாயும் என்கிறார்கள் பாஜக புள்ளிகள்.

இதற்கு தேவையான பல விவரங்களை காங்கிரஸ் புள்ளிகளே அண்ணாமலைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள் என்பதும் கூடுதல் தகவல்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

யாருயா நீங்கல்லாம்? : அப்டேட் குமாரு

பி.எஸ் 6 மாடலில் 200 புதிய SETC பேருந்துகள் : என்னென்ன வசதிகள் உள்ளன?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share