“கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற கள்ளச்சாராய மரணத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் சதி இருக்குமோ” என்று சந்தேகப்படுவதாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசியிருந்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு ஆர்.எஸ்.பாரதிக்கு அண்ணாமலை வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இந்தநிலையில், சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.பாரதி மீது அண்ணாமலை இன்று (ஜூலை 10) அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை,
“திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கடந்த ஜூன் 23-ஆம் தேதி பத்திரிகையாளர் சந்திப்பின்போது, கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணத்திற்கு அண்ணாமலையின் கூட்டுச்சதி காரணம் என்று பேசியிருந்தார். அவரது பேச்சு எனக்கு பெரிய ஒரு துக்கத்தை உண்டாக்கியிருக்கிறது.
காரணம், தமிழகத்தில் ஒரு அரசியல் மாற்றம் வரவேண்டும் என்பதற்காக போராடிக்கொண்டிருக்கிறேன். நான் அரசியலுக்கு வந்த இந்த மூன்றாண்டு காலத்தில் யார் மீதும் அவதூறு வழக்கு தொடரவில்லை. ஆனால், தற்போது ஆர்.எஸ்.பாரதி மீது அவதூறு வழக்கு தொடர்வதற்கான காரணம், அவரது பேச்சு எல்லையில்லாமல் சென்றுள்ளது.
அதனால் நீதிமன்றத்தில் இன்று ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்து ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டிருக்கிறேன். இந்த ரூ.1 கோடி ரூபாயை ஆர்.எஸ்.பாரதியிடம் இருந்து பெற்று, கள்ளக்குறிச்சியில் குடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு சிகிச்சை அளிக்க முகாம் அமைக்க உள்ளோம். ஆர்.எஸ்.பாரதியை நிச்சயமாக சிறைக்கு அனுப்ப தான் போகிறோம்” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அதிரடியாக குறைந்த தங்கம் விலை: எவ்வளவு தெரியுமா?
விக்கிரவாண்டி தேர்தல்… இவிஎம் மெஷின் கோளாறு… வாக்குப்பதிவு தாமதம்!