“இபிஎஸ் ‘ரோடு ஷோ’ போக தயாரா?” – அண்ணாமலை சவால்!

Published On:

| By Selvam

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் ரோடு ஷோ சென்றால், யாரும் வர மாட்டார்கள் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று (ஏப்ரல் 11) கடுமையாக விமர்சித்துள்ளார்.

பொள்ளாச்சியில் நேற்று (ஏப்ரல் 10) அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “பாஜகவுக்கு புதிதாக ஒரு தலைவர் வந்திருக்கிறார். அவர் ஃபிளைட்டில் ஏறும் போது ஒரு பேட்டி, இறங்கும் போது ஒரு பேட்டி என பேட்டி கொடுத்தே மக்களை ஈர்க்க பார்க்கிறார். அது தமிழ்நாட்டு மக்களிடத்தில் எடுபடாது. மத்தியில் இருந்து தமிழகத்திற்கு வருபவர்கள் ரோடு ஷோ நடத்தினால் மக்கள் ஓட்டு போட்டுவிடுவார்களா?” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலையிடம் எடப்பாடி பேசியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த அண்ணாமலை,  “சென்னை, கோவை என எந்த இடத்திலும் பத்திரிகையாளர்களுக்கு போன் செய்து அவர்களை பிரஸ் மீட்டிற்கு நான் அழைத்தது இல்லை. யாரிடம் சென்றால் கருத்து கிடைக்கும் என்று பத்திரிகையாளர் நண்பர்களுக்கு தெரியும். எடப்பாடி பழனிசாமியிடம் கருத்து கிடைக்கும் என்றால் அவரிடம் செல்வீர்கள். அண்ணாமலையிடம் கருத்து கிடைக்கும் என்றால் என்னிடம் வருவீர்கள்.

தனிப்பட்ட முறையில் நேர்காணலுக்கு அழைத்தால் தாமதிக்கும் ஆள் நான் தான். காலம் மாறிவிட்டது என்பதை இபிஎஸ் புரிந்து கொள்ள வேண்டும். பழைய பஞ்சாங்கத்தையே இன்னும் பிரஸ் மீட்டில் பேசிக்கொண்டிருந்தால் யார் கேட்பார்கள். தமிழகத்தில் நிறைய பிரச்சனைகள் இருக்கிறது. அதற்கான தீர்வுகளை பிரஸ் மீட்டில் நான் சொல்கிறேன்.

தமிழகத்தில் ஆட்சியில் திமுக இருக்கிறது. மத்தியில் கடந்த 10 ஆண்டுகளாக நாங்கள் ஆட்சி செய்திருக்கிறோம். மக்கள் எப்படி ஓட்டு போடுகிறார்கள்? மீண்டும் பாஜகவுக்கு வாக்களிக்கலாமா? அல்லது திமுகவுக்கு வாக்களிக்கலாமா என்று தான் பார்ப்பார்கள். அதனால் இரண்டு கட்சிளுக்கும் இடையே தான் போட்டி.

மோடி ஏன் அதிமுகவை விமர்சிக்கவில்லை என்று கேட்கிறார்கள். அதிமுவை விமர்சித்தால் எங்கள் கட்சி பெயரை ஏன் மோடி சொல்லவில்லை என திருமா, சீமான் போன்றோர் கோபித்துக்கொள்வார்கள். களத்தில் யார் எங்களுக்கு போட்டியாளர்களாக இருக்கிறார்களோ அவர்கள் மீது இருக்கும் தவறை மக்கள் மன்றத்தில் மோடி பேசியிருக்கிறார்.

இபிஎஸ் அண்ணனை ரோடு ஷோ போக சொல்லுங்கள். எவ்வளவு பேர் வருகிறார்கள் என்று பார்ப்போம். தமிழகத்தில் உள்ள தலைவர்கள் வீதியில் வந்தால், அவர்களை பார்ப்பதற்கு மக்கள் தயாராக இல்லை. அதனால் பொதுக்கூட்டத்தை ஏற்பாடு செய்து வண்டியில் மக்களை ஏற்றி அழைத்து வருகிறார்கள். இப்படி தான் தமிழகத்தில் கூட்டங்கள் நடக்கிறது. அதிமுக கூட்டமும் இப்படி தான் நடக்கிறது. தலைவர்கள் பேச்சை முழுமையாக கேட்டால் தான் ரூ.250 கொடுப்பார்கள்.

இன்றைக்கு தமிழகத்தில் உள்ள சாமானிய பொதுமக்கள் வீதிக்கு வந்து மோடியின் ரோடு ஷோவை பார்க்கிறார்கள். தமிழகத்தை பொறுத்தவரை அது ரோடு ஷோ கிடையாது, மக்கள் தரிசன யாத்திரை. மக்களை தரிசிப்பதற்காக எங்களுடைய தலைவர்கள் வீதிக்கு வருகிறார்கள். இது எப்படி தவறாகும்?

இதே ரோடு ஷோவை நீங்கள் பண்ண வேண்டியது தானே. அப்படி ரோடு ஷோ செய்தால் மக்கள் வர மாட்டாரகள் என்று அவர்களுக்கு தெரியும்” என்று அண்ணாமலை தெரிவித்தார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

விக்னேஷ் சிவன் வரிகளுக்கு ‘குத்தாட்டம்’ போடும் சந்தானம்

#25YearsOfPadayappa: ரஜினிக்கு ஜோடியாக நக்மா… வில்லியாக மீனா… ‘படையப்பா’ சுவாரஸ்யங்கள்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share