தொகுதி மறுசீரமைப்பு தென் மாநிலங்கள் உள்ளிட்ட அனைத்து மக்களுக்கும் சாதகமாக இருக்கும் என்று பிரதமர் மோடி தெளிவாக கூறியும், முதல்வர் ஸ்டாலின் ஏன் பயத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று (பிப்ரவரி 25) கேள்வி எழுப்பியுள்ளார். Annamalai condemned Stalin Delimitation
சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில், இன்று (பிப்ரவரி 25) அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ஸ்டாலின், மத்திய அரசின் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக வரும் மார்ச் 5-ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்த இருப்பதாக தெரிவித்தார்.
இதனை விமர்சித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், “தமது குடும்பத்தினர் நடத்தும் பள்ளிகளைப் போல, தமிழக அரசுப் பள்ளிகளில் படிக்கும் எங்கள் குழந்தைகளுக்கும், மும்மொழிக் கல்வி கிடைப்பதைத் தடுக்கும் தனது வாதத்தை, பெயிண்ட் டப்பாவைத் தூக்கித் திரியும் சிலரைத் தவிர, ஒட்டு மொத்த தமிழகமுமே நிராகரித்துவிட்டது. இதை அறிந்தவுடன், பாராளுமன்ற இடங்கள் குறைப்பு என்ற தனது கற்பனையின் மூலம் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்.
தனது நிலைப்பாட்டில் அவமானகரமான வீழ்ச்சியைச் சந்தித்திருக்கிறது திமுக. பாராளுமன்ற இடங்கள் எல்லை நிர்ணயம் எப்போது நடக்கும், அது நடக்கும்போது எப்படி அது தென் மாநிலங்கள் உட்பட அனைவருக்கும் சாதகமாக இருக்கும் என்று, பிரதமர் மோடி தெளிவாகக் கூறியிருந்தும், ஏன் இந்த பயத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார் ஸ்டாலின்? கற்பனையான பயங்களும், முட்டாள்தனமான வாதங்களுமே, தமிழக முதல்வரின் ஒரே செயல்பாடாக மாறிவிட்டன” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, “மும்மொழிக் கொள்கை விவகாரத்தை மடைமாற்ற தொகுதி மறுசீரமைப்பு விஷயத்தை முதல்வர் ஸ்டாலின் கையிலெடுத்துள்ளார். இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.
இது முதல்வர் பதவிக்கு அழகல்ல. தொகுதி மறுசீரமைப்பால் தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படும் என்று யார் சொன்னார்கள் என்று முதல்வர் ஸ்டாலின் தெளிவாக சொன்னால், பாஜக அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்கும். இல்லையென்றால் நாங்கள் பங்கேற்க மாட்டோம்” என்று அண்ணாமலை தெரிவித்தார். Annamalai condemned Stalin Delimitation