“அண்ணாமலை ஒரு விட்டில் பூச்சி” : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி!

Published On:

| By Minnambalam Login1

annamalai bjp jayakumar

சென்னை ராயப்பேட்டையில் ஆகஸ்ட் 25-ஆம் தேதி நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்துப் பேசிய பாஜக தலைவர் அண்ணாமலையை நாட்டு மக்கள் ஃபியூஸ் போன பல்ப்பை போலத்தான் பார்ப்பார்கள் என்று முன்னால் அமைச்சர் ஜெயக்குமார், இன்று(ஆகஸ்ட் 27) காலை நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் ஆகஸ்ட் 25-ஆம் தேதி பாஜகவின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் பாஜக தலைவர் அண்ணாமலை “ தவழ்ந்து காலில் விழுந்து பதவி வாங்கியவன் நான் அல்ல, தன்மானமுள்ள விவசாயி மகன் நான். தற்குறி பழனிசாமி போல் மானம்கெட்டு பதவி வாங்கவில்லை” என்று எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து பேசியிருந்தார்.

அண்ணாமலையின் இந்தப் பேச்சைக் கண்டித்து பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கேபி முனுசாமி, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் உள்பட பலரும் கண்டனம் தெரிவித்திருந்தார்கள்.

இந்த நிலையில், இன்று பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயகுமார்,  “அண்ணாமலை பாஜக என்ற கார்ப்பரேட் நிறுவனத்தின் மேனேஜர். அவர் முதல்வர் ஸ்டாலினின் ஆட்டத்திற்கு ஆடுகிறார். தேர்தல் காலத்தில் பாஜகவிற்கும் திமுகவிற்கும் ரகசிய உறவு இருக்கிறது என்று முதல்வர் ஸ்டாலின் சொன்னதை அண்ணாமலை மறுத்தாரா? பாஜக மற்றும் திமுக என்ற இரண்டு கார்பரேட் நிறுவனங்கள் ரகசிய கூட்டணி அமைத்திருப்பது இன்று ஒரு விவாத பொருளாக மாறியுள்ள நிலையில் முதல்வர் ஸ்டாலினின் பேச்சைக் கேட்டு, பாஜக பொதுக்கூட்டம் நடந்த மேடையை அண்ணாமலை அநாகரிகமாக பயன்படுத்தி உள்ளார்.

அண்ணாமலையின் தகுதி என்ன? ஒரு மூன்று வருடம் அரசியல் அனுபவம்தான். ஒரு பொதுச்செயலாளரின் தகுதி என்ன? ஒரு கிளைச்செயலாளர், ஒன்றிய செயலாளர், அதற்குப் பின் சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், அமைச்சர், கடைசியில் முதலமைச்சர். உங்களின்(அண்ணாமலை) நிலைமையே ஒரு விட்டில் பூச்சியின் வாழ்க்கை போலத்தான். விட்டில் பூச்சியின் வாழ்க்கை 7 நாட்கள் தான். அந்த அளவிற்குத் தான் அண்ணாமலையின் அரசியல் நிலைமையும் இருக்கிறது. ஆனால் இதை மறந்துவிட்டு, பாரம்பரியம் மிக்கக் கட்சியான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம், 31 வருடம் ஆண்ட கட்சி, 2026-இல் ஆட்சி அமைக்க இருக்கிற கட்சியைப் பற்றிப் பேச அண்ணாமலைக்கு தகுதி இருக்கா?

1,12,000 பேர்களை உள்ளாட்சித் தேர்தலில் நிற்க வைத்து, அவர்கள் அனைவரையும் அவர் ஜெயிக்க வைத்துவிடுவாரா? அவர் கற்பனையிலேயே அரசியல் நடத்திக்கொண்டிருக்கிறார்.

அதிமுகவை விட்டில் பூச்சியான அண்ணாமலையால் ஒழிக்க முடியாது. கருணாநிதியின் அப்பாவாலோ அல்லது முப்பாட்டனாலோ கூட அதிமுகவை ஒழிக்க முடியவில்லை. அதேபோல அண்ணாமலையின் அப்பாவாலோ அல்லது அவரது முப்பாட்டனாலோ கூட அதிமுகவை ஒழிக்க முடியாது.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொட்டுப்பார்த்தால் அவன் கெட்டுப் போவான் என்பதுதான் வரலாறு. அண்ணாமலை எத்தனை ஜென்மம் எடுத்தாலும் சரி, அதிமுகவை அழிக்க இனி ஒருத்தன் கூட பிறக்க முடியாது. மூன்று வருடங்களுக்கு முன் பிறந்த குழந்தையான அண்ணாமலை, 52 வருடங்களுக்கு முன் பிறந்த இந்த ஆலமரத்தை(அதிமுக) பற்றி விரக்தியில் பேசுகிறார்.

அண்ணாமலை ஒரு மேனேஜர் மட்டும் தான், அவரை ஒரு ஃபியூஸ் போன பல்ப் போலத்தான் நாட்டு மக்கள் பார்ப்பார்கள். அதனால் இந்த வாய் ஜாலம், உதார் விடுவது, சவால் விடுவது போன்றவை வெறும் பேச்சு தான். பாஜக எந்த காலத்திலும் தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க முடியாது, ஒரு எம்எல்ஏ சீட்டு கூட ஜெயிக்க முடியாது.” என்று தெரிவித்தார்.

 அப்துல் ரஹ்மான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

ஜூனியர் ஆர்டிஸ்ட் அம்மாவை கூட விட்டு வைக்கல : நடிகை சரிதாவின் முன்னாள் கணவர் மீது புகார்!

எடப்பாடி நேரில் ஆஜர் : தயாநிதிமாறன் தொடர்ந்த வழக்கு ஒத்திவைப்பு!

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share