வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு அதிமுக- பாஜக கூட்டணி உருவாகலாம் என்ற சூழல் நிலவிவரும் நிலையில், தற்போதைய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மாற்றப்படுவார் என தொடர்ந்து தகவல்கள் வருகின்றன.
பத்திரிக்கையாளர் சந்திப்புகளில் அண்ணாமலையே கூட இது பற்றி சூசகமாகவும் பூடகமாகவும் பேசிக் கொண்டுதான் இருக்கிறார்.
அண்ணாமலை தமிழக பாஜக தலைவராக இருக்கும் நிலையில் கட்சி வைப்ரேன்ட் ஆக இருக்கிறது என்று டெல்லி தலைமை நம்புகிறது. அதனால் அவரை மாநில தலைவர் பதவியில் இருந்து மாற்றினால், அதற்கு ஈடாக அவருக்கு பதவி ஒன்றை அளிக்க வேண்டும் என்ற ஆலோசனையும் டெல்லி வட்டாரத்தில் நடக்கிறது.
அண்ணாமலை டெல்லியில் அமித் ஷாவை சந்தித்தபோது, ‘நீங்கள் எனக்கு மாநிலத் தலைவர் பதவி அளித்தபோது, 2031 இல் தமிழ்நாட்டில் பாஜகவை ஆட்சியில் அமர்த்துவேன், அதை நோக்கி பாஜகவை வளர்க்க எனக்கு சுதந்திரம் தாருங்கள் என்று கேட்டேன். நீங்களும் கொடுத்தீர்கள். அதை நோக்கித்தான் நான் இப்போது பயணப்பட்டு வருகிறேன்.
இப்போது 2026 இல் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்க வேண்டும் என்று நாம் முடிவெடுத்தால், நமது பயணம் பின்னோக்கிப் போய்விடும். ஆனால் திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றுவது என்ற நோக்கத்தில் அதிமுக கூட்டணிதான் என நீங்கள் முடிவெடுத்தால், எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. நான் தொண்டனாக இருந்து கட்சிக்காக உழைக்கிறேன்’ என்று கூறியிருக்கிறார்.
அதேநேரம் எடப்பாடி பழனிசாமியும் அமித் ஷாவிடம், ‘ உங்கள் கட்சியின் மாநிலத் தலைவரை மாற்றுங்கள் என்று நாங்கள் சொல்ல முடியாது. அது உங்கள் உட்கட்சிப் பிரச்சினை. ஆனால் அண்ணாமலை மாநில தலைவராக இருந்தால் அதிமுகவுடனான தேர்தல் பேச்சுவார்த்தையில் பெரும் பிரச்சினை ஏற்படலாம். இரு கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்களுக்கு இடையிலும் இணக்கம் ஏற்படாமல் போகலாம்’ என்று சொல்லியிருக்கிறார்.
இந்நிலையில் டெல்லியில் அமித் ஷா மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை அழைத்து இது தொடர்பாக ஆலோசித்திருக்கிறார்.

“அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் அண்ணாமலைக்கும் இடையிலான மனக் கசப்பை முடிவுக்கு கொண்டுவருவது எப்படி? என்று அந்த ஆலோசனையில் விவாதிக்கப்பட்டிருக்கிறது.
அப்போது, ‘அண்ணாமலையை தமிழ்நாடு மாநிலத் தலைவர் பதவியில் இருந்து விடுவிப்பதன் மூலம் அதிமுகவை திருப்திப் படுத்த முடியும். ஆனால், அண்ணாமலையின் ஆதரவு நிர்வாகிகள் தொண்டர்களுக்கு இது வருத்தத்தை ஏற்படுத்தும்.
’
அதை களைவதற்கு ஒரு திட்டம் இருக்கிறது. வரும் ஜூலையில் தமிழ்நாட்டில் இருந்து நடக்க இருக்கும் ராஜ்யசபா தேர்தலில் அதிமுக தரப்பில் இரு எம்.பி.க்களை அனுப்ப முடியும். அதில் ஒருவராக அண்ணாமலையையே தேர்ந்தெடுத்து டெல்லிக்கு அனுப்பினால் என்ன? அதிமுகவையும், அண்ணாமலையையும் ஒரே நேரத்தில் திருப்திப்படுத்துவது போல இதை செய்யலாம் என்று ஆலோசித்திருக்கிறார்கள்
ஆனால் இதற்கு அதிமுக ஒப்புக்கொள்ளுமா என்பது இன்னொரு கேள்விக்குறி.
எடப்பாடி பழனிசாமியை தரம் தாழ்ந்த வகையில் அண்ணாமலை சென்னை பொதுக்கூட்டத்தில் விமர்சித்த வீடியோவை திடீரென இப்போது சமூக தளங்களில் வைரல் ஆக்கி வருகிறது ஒரு க்ரூப்.

இந்த நிலையில்தான் இன்று (ஏப்ரல் 4) கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை,
“பாரதிய ஜனதா கட்சியில் தலைவர்களுக்கு போட்டியெல்லாம் கிடையாது. எல்லாரும் சேர்ந்து ஒரு தலைவரை தேர்ந்தெடுப்போம். அதனால்தான் தலைவர் போட்டியில் நான் இல்லை என்று சொன்னேன். எல்லாரும் ஏகமனதோடு சேர்ந்து ஒருவரை தேர்ந்தெடுப்போம்.
நான் தலைவராக இல்லையென்றால் எனக்கு மரியாதை கொடுக்க மாட்டீர்களா, என்னை மறந்துடுவீங்களா? ஒரு விவசாயியோட பையனா இருப்பேன். என்னுடைய பணி ஒரு தொண்டனாக தொடரும். கரப்சனுக்கு எதிராக வந்தவன் நான். அதில் சமரசம் கிடையாது. யாராக இருந்தாலும் சமரசம் இல்லை, ஒரு நாள் இல்லைன்னாலும் ஒரு நாள் நல்லாட்சியை கொண்டுவருவோம், 2026 மக்கள் நலனுக்கான தேர்தலாக நடக்கப் போகிறது” என்றவரிடம்.
“நீங்கள் எம்பியாகி டெல்லி போகப் போகிறீர்களாமே?” என்று கேட்கப்பட,
“டெல்லி டெல்லினு சொல்லி என்னை ஏன் பேக் பண்ணப் பாக்கறீங்க? இப்பவே டெல்லி போனால் ஒரு நைட் இருந்துவிட்டு மீண்டும் இங்க வந்துவிடுகிற ஆள் நான். இங்கதான் சுத்திக்கிட்டிருப்பேன்” என்று பதில் சொல்லியிருக்கிறார்.
வருகிற தேர்தலில் திமுகவுக்கு எதிராக பிரச்சார பீரங்கியாக இருக்கிறேன் என்றும் அண்ணாமலை தேசியத் தலைமையிடம் சொல்லியிருக்கிறார் என்கிறார்கள்.