கிரிமினல் ரகுபதி… அண்ணாமலை ஆவேச பேட்டி!

Published On:

| By Kavi

தமிழகத்தின் டாஸ்மாக் நிறுவனம் மற்றும் மதுபான ஆலைகளில் சோதனை நடத்திய அமலாக்கத்துறை ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்திருக்கிறது என்று கூறியிருந்தது.

இந்நிலையில் இன்று (மார்ச் 17) டாஸ்மாக் ஊழலை கண்டித்து தமிழக பாஜகவினர் சென்னையில் உள்ள டாஸ்மாக் அலுவலகத்தை முற்றுகையிட வந்தனர். அப்போது மாநில தலைவர் அண்ணாமலை, முன்னாள் தலைவரும், ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். Annamalai attack speech

திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த இவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் சென்னை அக்கரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, “காவல்துறை திமுகவின் ஏவல்துறையாக மாறியிருக்கிறது. தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய 5000க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளில் முதல்வர் ஸ்டாலின் போட்டோவை மகளிர் அணி ஆணி அடித்து ஒட்டப்போகிறார்கள். ஏப்ரல் முதல் வாரத்தில் பாஜக தலைவர்கள், தொண்டர்கள் டாஸ்மாக் கடைகளை மூடி பூட்டுப்போடுவார்கள். அடுத்த 15 நாட்களுக்குள் இந்த இரண்டு போராட்டமும் நடைபெறும்.

சென்னையில் 22ஆம் தேதி ஒரு போராட்டம் நடைபெறும். காவல்துறை பாஜகவுக்கு மரியாதை கொடுக்காத வரை காவல்துறைக்கு பாஜக மரியாதை கொடுக்காது.

பாஜக எப்போதும் அறவழி போராட்டம்தான் நடத்துகிறது. எங்களுக்கு அனுமதி வழங்காதபோது காவல்துறை மீது வைத்திருக்கிற, நம்பிக்கையை மரியாதையை இழந்திருக்கிறோம்.

அடுத்த போராட்டம் கட்டாயமாக நடக்கும். முடிந்தால் காவல்துறை எங்களை தடுத்து பார்க்கட்டும்.  இனி தமிழ்நாட்டில் யூனிபார்ம் போட்ட எந்தவொரு போலீசுக்கும் தூக்கம் இருக்கக் கூடாது.

விதவிதமான போராட்டம், ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக்கொண்டே இருக்கும். திமுகவை காக்கா பிடித்து கமிஷனராக, டிஜிபியாக கோந்து போட்டு உட்காந்திருக்கிறார்கள்.

இத்தனை காலமாக காவல்துறைக்கு ஆதரவாக பேசியவன் நான். ஆனால் எங்களுடைய தொண்டர்களை இழிவுப்படுத்திய பிறகு, இனி காவல்துறையை நான் தூங்கவிடமாட்டேன்” என்றார்.

மேலும் அவர், “டாஸ்மாக்கிற்காக முன்கூட்டியே எங்களை கைது செய்திருக்கிறார்கள். சண்டை போட்டுத்தான் நாங்கள் வெளியே வந்திருக்கிறோம். இந்தசமூதாயம் திருந்த வேண்டும் என்பதற்காகத்தான் நாங்கள் போராடிக்கொண்டிருக்கிறோம். அதற்கு மரியாதை கொடுக்கத் தெரியவில்லை. Annamalai attack speech

மண்டபத்தில் அடைத்து வைக்காமல் சென்னை முழுவதும் சுற்றுவது, டாய்லெட் இல்லாத மண்டபத்தில் அடைத்து வைப்பது, 6  மணிக்கு மேல் பெண் தொண்டர்களுக்கு சட்டப்படி மரியாதை கொடுப்பதில்லை… ஆனால் இரவு வரை அடைத்து வைத்திருப்போம் என்றால் என்ன செய்வது?” என்று கேள்வி எழுப்பினார். Annamalai attack speech

அப்போது முதல்வர் வீட்டை முற்றுகையிடுவோம் என்று சொல்லியிருந்தீர்கள். இதற்கு அமைச்சர் ரகுபதி, வந்து பார்க்க சொல்லுங்கள் என்று சொல்லியிருக்கிறாரேஎன்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப, “உறுதியாக வருவேன். அந்த கிரிமினல் ரகுபதியிடம் நல்லா சொல்லிடுங்க. அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு அமைச்சர் ரகுபதி மீது நடந்துகொண்டிருக்கிறது. இவர் சட்டத்துறை அமைச்சராக இருக்கிறார். இவர் சட்டத்தை பற்றி பேசுகிறாரா. அவருக்கு எந்த அருகதையும் இல்லை” என்று ஆவேசமாக பதிலளித்தார்.

டாஸ்மாக் ஊழலை பொறுத்தவரை தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தான் ஏ1 என்று மீண்டும் குறிப்பிட்ட அண்ணாமலை, “தைரியம் இருந்தால் என்னை கைது செய்ய சொல்லுங்கள். செந்தில் பாலாஜிக்கு சிறையில் இருந்து வந்த பிறகு மீண்டும் அதே துறையை கொடுக்கிறார்கள் என்றால் எப்படி குற்றவாளி இல்லை என்று சொல்லுவேன். உச்ச நீதிமன்றமே செந்தில் பாலாஜியை பார்த்து நீங்கள் இன்னும் அமைச்சராக தொடர வேண்டுமா என்று கேட்கிறது”  என்று சுட்டிக்காட்டினார். Annamalai attack speech

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share