தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கூட்டத்துக்கு எதிராக கருப்பு சட்டை அணிந்து கருப்பு கொடி போராட்டத்தில் பாஜகவினர் இன்று (மார்ச் 22) ஈடுபட்டுள்ளனர். annamalai attack mkstalin on JAC meeting
சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியில் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
அதே நேரத்தில் இதற்கு தமிழக பாஜக தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்து, மாநிலம் முழுவதும் அவரவர் வீட்டு முன்பு கருப்பு சட்டை அணிந்து கருப்பு கொடி காட்டி பாஜகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் சென்னை பனையூரில் தனது இல்லத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார்.

திமுக நாடகம் நடத்தி வருகிறது!
அப்போது அவர், ”மற்ற மாநிலங்களுக்கு நமது உரிமைகளை விட்டுக்கொடுத்ததற்காக திமுகவிற்கு எதிராக பாஜக கருப்புக் கொடிகளை ஏந்தி தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகிறது.
தமிழ்நாட்டின் பிரச்சினைகளை கேரளா, கர்நாடகா அரசுகளிடம் பேசி தீர்வு காணாமல் திமுக நாடகம் நடத்தி வருகிறது. தமிழ்நாட்டிற்கு அண்டை மாநிலங்களுடன் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. திமுக ஆட்சிக்கு வந்த கடந்த நான்கு ஆண்டுகளில், அரசியல் ஆதாயத்திற்காக தமிழ்நாட்டின் நலன்கள் தொடர்ந்து தியாகம் செய்யப்பட்டன.
தமிழக முதல்வர் கேரளாவுக்கு ஒருபோதும் சென்று அவர்களுடன் பேசி பிரச்சினைகளைத் தீர்க்கவில்லை, ஆனால் இன்று, அவர் உருவாக்கிய செயற்கையான பிரச்சினையைப் பற்றிப் பேச கேரள முதல்வரை அழைத்துள்ளார்.
கேரளாவுடன் முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை உள்ளது, கர்நாடகாவுடன் மேகதாது அணை விவகாரம், கர்நாடக எல்லையிலிருந்து ஓசூர் நோக்கி மெட்ரோ பாதைக்கு எதிர்ப்பு என பல்வேறு பிரச்சனைகள் உள்ளது.
தான் ஒரு அகில இந்தியத் தலைவர் என்றும், சித்தராமையா ஒரு பிராந்தியத் தலைவர் என்றும் காட்ட கூட்டத்திற்கு வந்துள்ளார் கர்நாடகா துணை முதல்வர் டி.கே. சிவகுமார்” என அண்ணாமலை தெரிவித்தார்.
