அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் விவரங்கள் அடங்கிய எஃப்.ஐ.ஆர். லீக் ஆனதில் தொடங்கி… கைதான ஞானசேகரனின் திமுக தொடர்பு, அவன் பேசியதாக கூறப்படும் யார் அந்த சார் ஆகிய கேள்விகளோடு அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர் போராட்டம் செய்து வருகின்றன. திமுகவின் கூட்டணி கட்சிகளான கம்யூனிஸ்ட் கட்சி, விசிக ஆகிய கட்சிகளும் கேள்வி எழுப்பியுள்ளன.
சட்டமன்றம் தொடங்கிய ஜனவரி 6 ஆம் தேதியும், நேற்று 7 ஆம் தேதியும் அதிமுக யார் அந்த சார் என்ற பேட்ஜுகள் அணிந்தும், பதாகைகளை எழுப்பியும் போராட்டம் நடத்தினார்கள். இந்த விவகாரத்தில் இன்றும் சட்டமன்றத்தில் அதிமுக நூதன போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது.
உயர் கல்வி அமைச்சர், சட்ட அமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் மக்கள் மன்றத்தில் கருத்துகளை தெரிவித்து வந்தாலும், முதலமைச்சர் ஸ்டாலின் ஏன் இதுகுறித்து உரிய பதிலளிக்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன.
உயர் நீதிமன்றக் கண்காணிப்பில் இந்த விவகாரத்தில் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணையும் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில்தான் அண்ணா பல்கலை மாணவி விவகாரம் தொடர்பாக சட்டமன்றத்தில் இன்று (ஜனவரி 8) முதல்வர் பதிலளிக்க இருக்கிறார் என்ற தகவல் ஆளுங்கட்சி வட்டாரத்தில் இருந்து நமக்குக் கிடைத்துள்ளது.
இதுகுறித்து ஆளுந்தரப்பில் விசாரித்தபோது, “அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் என்ன நடந்தது? காவல் துறை என்ன நடவடிக்கை எடுத்தது? யார் அந்த சார்? ஆகிய கேள்விகளுக்கான பதில்கள் அடங்கிய முழு விவரங்களை உரிய அதிகாரிகளிடம் முதல்வர் கேட்டிருந்தார். அதன்படியே அந்த ரிப்போர்ட் முதல்வர் கையில் நேற்று இரவு அளிக்கப்பட்டிருக்கிறது.
அதன்படி இன்று சட்டமன்றத்தில் இந்த விவகாரம் குறித்து விரிவாக பதிலளிக்கப் போகிறார் முதல்வர் ஸ்டாலின். இதற்காகவே இன்று சட்டமன்றத்தை லைவ் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது” என்கிறார்கள்.
–வணங்காமுடி
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: ட்ராபிக்கல் பொங்கல்!
அண்ணாநகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு : அதிமுக வட்ட செயலாளர், காவல் ஆய்வாளர் கைது!