அண்ணா பல்கலை… அன்று இரவு 7 To 10… நடந்தது என்ன? – இதுவரை வெளிவராத நடுங்க வைக்கும் தகவல்கள்!

Published On:

| By Selvam

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட விவகாரம்  மக்கள் மன்றத்தில் பெரிதாக பேசப்பட்டு வருகிற நிலையில்…  நாளை (ஜனவரி 6)  கூட இருக்கிற சட்டமன்றத்திலும் இப்பிரச்சினை வெடிக்க இருக்கிறது.

எதிர்க்கட்சியான அதிமுகவில்  இருந்து கூட்டணிக் கட்சியான விசிக வரை இப்பிரச்சினையை சட்டமன்றத்தில் எழுப்பத் திட்டமிட்டுள்ளன.

அந்த மாணவி தனது புகாரில்,  தனக்கு எதிரிலேயே ஞானசேகரன் போனில் யாருடனோ,  ‘சார்… சார்..’ என அழைத்து பேசிக் கொண்டிருந்தான் என கூறியிருந்தார். இந்த  அடிப்படையில் யார் அந்த சார் என்று எதிர்க்கட்சிகளும் சமூக அமைப்பினரும் கேள்வி எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

சென்னை உயர்நீதிமன்றத்தின் கண்காணிப்பில் மூன்று பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்புப் புலனாய்வுக் குழு இந்த வழக்கை  விசாரித்து வரும் நிலையில்தான்… சட்டமன்றத்தில் இந்த பிரச்சினை வெடிக்கக் காத்திருக்கிறது.  இந்நிலையில் இந்த விவகாரத்தில் யூகமான செய்திகளை வெளியிட வேண்டாம் என தமிழக டிஜிபி ஊடகங்களுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

சட்டமன்றத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் இந்த விவகாரத்தில் பதிலளிக்க வேண்டிய நிலையில், அண்ணா பல்கலை வழக்கின் தற்போதைய நிலை பற்றி விசாரித்தோம்.

 “அண்ணா பல்கலைக் கழகத்தில் பொறியியல் படிக்கும் மாணவி கடந்த டிசம்பர் 23 ஆம் தேதி மாலை, வகுப்புகள் முடிந்த நிலையில் தனது ஆண் நண்பருடன் பல்கலை வளாகத்திலேயே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.

பொதுவாகவே டிசம்பரில் பகல் பொழுது குறைவு என்பதால்  ஆறு மணி வாக்கிலேயே லேசாக இருட்டிவிட்டது. இந்த நிலையில்தான்  ஞானசேகரன் அண்ணா பல்கலைக் கழக வளாகத்துக்குள் உலவிக் கொண்டிருந்தான்.

ஞானசேகரன் வசிப்பது அண்ணா பல்கலைக்கு அருகே உள்ள கோட்டூர் புரத்தில். ஆனால் அவனுக்கு சொந்த ஊர் செங்கல்பட்டு அருகே உள்ள மதுராந்தகம். அவனுக்கு இரண்டு மனைவிகள், அதிகாரபூர்வமற்ற இன்னொரு துணைவி என மூன்று பெண்களோடு  வெளிப்படையாகவே வாழ்ந்து வருகிறான். இவனுக்கு மொத்தம் 3 குழந்தைகள்.

ஞானசேகரனின் இரண்டாவது மனைவி அண்ணா பல்கலைக் கழகத்தில் உள்ள கேன்டீனில் துப்புரவுத் தொழிலாளராக பணியாற்றி வந்தார்.  6 மாதங்களுக்கு முன்னர் அவர் அப்பணியில் இருந்து நின்றுவிட்டார். தனது  இரண்டாவது மனைவி அண்ணா பல்கலைக்குள் வேலை பார்க்கிறார் என்ற வகையில்தான் பல்கலைக்குள் அடிக்கடி வந்து போயிருக்கிறான் ஞானசேகரன்.

கேண்டீனுக்கு வரும் சாக்கில் அண்ணா பல்கலைக்குள் தனது அத்தனை சேட்டைகளையும் அரங்கேற்ற ஆரம்பித்தான் ஞானசேகரன்.  இவன் மீது 20க்கும் மேற்பட்ட வழக்குகள் இருக்கின்றன. பெரும்பாலும் திருட்டு, வழிப்பறி, ஆள் கடத்தல், கொள்ளை வழக்குகள்தான். இதில் 8 வழக்குகளில் நீதிமன்றத்தில் தண்டனை விதிக்கப்பட்டது. அபராதம் அல்லது ஆறு மாதம் சிறை என தண்டனை விதிக்கப்பட்டு அவ்வப்போது சிறை சென்று வந்ததால் செங்கல்பட்டு, புழல் சிறைகள் இவனுக்கு மாமியார் வீடு போல ஆகிவிட்டன. இவனது க்ரைம் ஹிஸ்டரி செங்கல்பட்டு போலீஸுக்கும் தெரியும், கோட்டூர்புரம் போலீஸுக்கும் தெரியும்.  அதுமட்டுமல்ல… கைது, கஸ்டடி, நீதிமன்ற விசாரணை, சிறை என குற்ற சிஸ்டத்தின் ஒவ்வொரு நடைமுறையும் ஞானசேகரனுக்கும் நன்கு தெரியும், 

இந்த நிலையில்தான் அன்று டிசம்பர் 23 ஆம் தேதியும் அதேபோன்ற, ‘அவேர்னஸ் ‘சோடுதான் அண்ணா பல்கலைக்குள் சுற்றி வந்திருக்கிறான் ஞானசேகரன். பரவலாக மாணவர்களின் நடமாட்டம் இல்லாத நிலையில், புல்வெளியில் அமர்ந்து தனது ஆண் நண்பரோடு பேசிக் கொண்டிருந்தார்  அந்த மாணவி.

“நானும் என் நண்பரும் யுனிவர்சிட்டி வளாகத்தில் உட்கார்ந்து பேசிக்கிட்டிருந்தோம். அப்போ பக்கத்துல இருந்த புதருக்குள்ள இருந்து திடீர்னு வந்தான் அவன்.  அப்பதான் லேசா இருட்ட ஆரம்பிச்சுது… தன்னோட செல்போன் மூலமாக சட்டுனு எங்க ரெண்டு பேரையும் வீடியோ எடுக்க ஆரம்பிச்சான். எனக்கு ரொம்ப அன் கம்ஃபர்டபிளா இருந்துச்சு.

யார் நீ எதுக்கு எங்களை வீடியோ எடுக்குறே? ன்னு நானும் நண்பரும் கேட்டோம். அப்ப திடீர்னு  என் ஆண் நண்பரை மிரட்டி தள்ளிக்கிட்டு பக்கத்துல அழைச்சுக்கிட்டுப் போனான். கொஞ்ச நேரத்துல ஞானசேகரன் மட்டும் வந்தான்.  என் பாய் ப்ரெண்ட் வரலை. எங்கே அவருனு கேட்டேன்.

‘அவன் இப்ப வரமாட்டான்.  போயிட்டான்….’னு சொல்லிக்கிட்டே என் கிட்ட வந்தான் ஞானசேகரன்.

கொஞ்சம் கொஞ்சமாக என் முகத்துக்கிட்ட நெருங்கினான். எனக்கு ரொம்ப பயமாயிடுச்சு. அவன் என்னை ஏதோ பண்ணப் போறான்னு எனக்கு தெரிஞ்சுடுச்சு. அவன் என்னை பாலியல் ரீதியாக கட்டாயப்படுத்தினான்.

நான், ‘என்னை விட்ரு… இப்ப மென்சஸ் டயம் வேற…’ னு அவன்கிட்ட கெஞ்சினேன். நான் ஏற்கனவே ரொம்ப டயர்டா இருந்தேன். ஆனா அவன் அப்ப சொன்ன வார்த்தையால எனக்கு பெரிய ஷாக் ஆயிடுச்சு.

’மென்சஸ் டயமா… அப்படின்னா பரவாயில்லை. வா ஓரல் செக்ஸ் வச்சிக்கலாம்’னு அவன் சொன்னதும் எனக்கு இடி விழுந்த மாதிரி ஆயிடுச்சு. ஆனா அவன் என்னை தொடர்ந்து வற்புறுத்தினான். என்னை தொல்லை செய்துகொண்டே ஆடைகளைக் களைந்து கையில் வச்சிருந்த போனால வீடியோ எடுத்துக்கிட்டிருக்கான்.  அரைமணி நேரத்திற்கும் மேலாக அவனோட கொடூரப் பிடியில இருந்தேன்.

அப்பதான்… வீடியோ எடுத்த போனை காதுல வச்சிக்கிட்டு அவன் யார்கிட்டயோ பேசினான்.

‘சார்…சொல்லுங்க சார்…  நான் இங்கதான் இருக்கேன். அந்த பொண்ணுக்கிட்டதான் பேசிக்கிட்டிருக்கேன்.  ஒன்னும் பிரச்சினை இல்ல அனுப்பிட்டு பேசுறேன் என்று சொல்லி போனை கட் பண்ணிட்டான்.

போனை கட் பண்ணிட்டு, ‘உங்க யுனிவர்சிட்டியில் முக்கியமானவர் தான், அவர்கிட்டையும் நீ போகணும். உனக்கு எந்த பிரச்சினையும் இருக்காது. எல்லாம் நல்லாவே நடக்கும். நான் பாத்துக்குறேன்…னு சொன்னான். எனக்கு உசிரே போயிடுச்சு’ என்று அந்த புகாரில் சொல்லியிருக்கிறார் அண்ணா பல்கலை அபலை மாணவி.

சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி அமைக்கப்பட்ட மூன்று பெண் ஐ.பிஎஸ் அதிகாரிகள் குழுவும் அந்த மாணவியிடம் விசாரணை நடத்தியுள்ளார்கள்.  தமிழ்நாடு சாராத வெளி மாநிலத்தைச் சேர்ந்த  ஐபிஎஸ் அதிகாரிகள் பட்டியலை விசாரணை குழு அமைப்பதற்காக டிஜிபியிடம் கேட்டது உயர் நீதிமன்றம். டிஜிபி ஆறு பேர் கொண்ட பட்டியலை நீதிமன்றத்தில் கொடுத்தார். அதில் இருந்து  சென்னை அண்ணா நகர் துணை ஆணையர் புக்யா சினேஹ பிரியா, ஆவடி துணை ஆணையர் அய்மன் ஜமால், சேலம் நகர துணை ஆணையர் பிருந்தா  ஆகியோரை விசாரணை அதிகாரிகளாக நியமித்தது நீதிமன்றம்.

இந்த பெண் அதிகாரிகள்  அந்த மாணவியிடம் மீண்டும் விசாரணை நடத்தினார்கள். அப்போதும் அந்த மாணவி, தன் புகாரில் தெரிவித்ததையே தெளிவாக கூறினார். மேலும்,  ‘அவன்  அந்த போனை பேசி முடிச்சுட்டு,  நான் ரெண்டு நாள் கழிச்சு வருவேன்.  அப்ப நீ  சாருக்காக வரணும்.  நீ வரலைன்னா உன் வீடியோவெல்லாம்  லீக் ஆயிடும். உன் பேரை டோட்டல் டேமேஜ் ஆக்கிடுவேன்’னு சொல்லிட்டுப் போயிட்டான். இதெல்லாமே அன்னிக்கு நைட் ஏழு மணிக்கு மேல நடந்தது” என்று கூறியிருக்கிறார்.

அதே பெண் அதிகாரிகள் டீம், கைது செய்யப்பட்ட ஞானசேகரனிடமும் விசாரித்திருக்கிறார்கள்.

 அப்போது ஞானசேகரன், ‘நான் ஏற்கனவே கைது, கோர்ட், ஜெயில்  எல்லாத்தையும் பாத்துருக்கேன்.  எடுத்ததுமே போலீஸ் செல்போனைதான் முக்கிய ஆதாரமா வச்சி விசாரிப்பாங்கனு எனக்கு நல்லா தெரியும். அதனாலதான் நான் எப்பவுமே ஒரு சம்பவம் பண்ண போகும்போது என் மொபைலை ஏரோப்ளேன் மோடுல போட்டுடுவேன். அப்படிதான் அன்னிக்கு சாயந்தரமும் என் மொபைலை  ஏரோ ப்ளேன் மோடுல போட்டுட்டேன்.  போலீஸ்ல நம்ம செல்போன் மூலமா லொக்கேஷனை காட்டிக்கொடுத்து   மாட்டிக்க கூடாதுன்னுதான் இப்படி செஞ்சேன்.

அன்னிக்கு அந்த பொண்ணுக்கு நேரா நான் போன் பேசின மாதிரி நடிச்சேன். அந்த பொண்ணை வெளிய கூட்டிட்டு போறதுக்கு பிளான் பண்ணேன். ஆனா அவ வரலை… அதுக்காக மிரட்டுறதுக்காகத்தான் இப்படி போன் பண்ணேன். மத்தபடி நான் வேற யாருக்காகவும் கூப்பிடலை. போனும் பண்ணலை’ என்று சொல்லியிருகிகிறான் ஞானசேகரன்.

என்னடா இது உன் போன்ல இவ்வளவு வீடியோ வச்சிருக்கே… பொண்ணுங்கனா உனக்கு அவ்வளவு கேவலமா போயிடுச்சா என்று விசாரணை அதிகாரிகள் கேட்க…

‘நானே வீடியோ எடுத்து நானே பாத்துப்பேன். வேற யாருக்கும் கொடுக்க மாட்டேன். இது எனக்கு பழக்கமாகிடிச்சு…’ என்று அதிர வைத்திருக்கிறான் ஞானசேகரன்.

விசாரணைக் குழுவினர் அவனது செல்போனை ஆராய்ந்திருக்கிறார்கள்.  அவன் கால் டீடெய்ல்ஸ் எடுத்துப் பார்த்திருக்கிறார்கள். அன்றைய தேதியில் மாலை சுமார் 7 மணி முதல் இரவு 10 மணி வரை அவனது போன் ஏரோ ப்ளேன் மோடில்தான் இருந்திருக்கிறது. வேறு போன் மூலமாக வாட்ஸ் அப் அல்லது வேறு ஆப்கள் மூலமாக யாரிடமாவது பேசியிருக்கிறானா என ஆராய்ந்ததில் அப்படி எதுவும் இல்லை.

போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தபோது, “யார் அந்த சார் என்ற வார்த்தையை போராட்ட மந்திரமாக்கி,  கட்சிகள் போராட்டம் செய்துகொண்டிருக்கிறார்கள். அதேநேரம்  அப்படி ஒரு சார் இருக்கிறாரா, அவன் யாரிடம் பேசியிருக்கிறான் என்பதை எங்களை விட மத்திய அரசு எளிதாக கண்டுபிடிக்க முடியும். செல்போன் நெட்வொர்க்குகள் மத்திய தகவல் தொடர்புத் துறையின் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன. எனவே அந்த நேரத்தில் அப்படி அழைப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தால் அதை யாராலும் மறைக்கவோ அழிக்கவோ முடியாது” என்கிறார்கள்.

இந்த விவகார தொடர்பாக சமூக நலத்துறை அதிகாரிகளிடம் பேசியபோது,

“அந்த பெண்ணின் நிலைமை மிகவும் அக்கறை கொள்ள வேண்டியதாக இருக்கிறது. எஃப்.ஐ.ஆர். லீக் ஆகிவிட்ட நிலையில்  அவரது தனியுரிமை பெரிய அளவு பாதிக்கப்பட்டுள்ளது. அன்று அண்ணா பல்கலை வளாகத்தில் நடந்த சம்பவமே அவரை மன அளவில் கடுமையாக பாதித்திருக்கிறது. அதன் பின் எஃப்.ஐ.ஆரில் அவரது அடையாளம் வெளிப்பட்டது மேலும்  அந்த பெண்ணையும் அவரது குடும்பத்தையும்  பாதித்திருக்கிறது,

இந்த நிலையில் அந்த மாணவிக்கும், அவரது குடும்பத்தினருக்கும்  சமூக நலத்துறை சார்பில் உயர் தர மனோதத்துவ கவுன்சிலிங் டாக்டர்கள் மூலமாக தைரியம் சொல்லி கொஞ்சம் கொஞ்சமாக அந்த பெண்ணை தேற்றி வருகிறோம்.

’உன்னைப் போல யாரும் இல்லம்மா… உன் தைரியத்தை பாராட்டணும்மா…எத்தனையோ பொண்ணுங்க நமக்கு ஏன் வம்புனு அமைதியா சகிச்சுக்கிட்டு போயிடுற இந்த உலகத்துல தைரியமா நின்னு புகார் கொடுத்திருக்கே. நீ பெண்களுக்கெல்லாம் ஒரு ரோல் மாடல்…’ என்று அந்த பெண்ணின் மனதை உறுதிப்படுத்துகிற மாதிரி தொடர்ந்து அவர்கள் பேசிவருகிறார்கள். இதனால் கொஞ்சம் கொஞ்சமாக அந்த பெண்ணும், அவரது குடும்பத்தினரும்  மன உறுதி பெற்று வருகிறார்கள்.

சிறப்பு விசாரணைக் குழுவினரையும் அந்த கவுன்சிலிங் மருத்துவர்கள் சந்தித்து அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தும்போது, ‘போலீஸ் என்கிற தொழில் முறையாக செய்யாமல் பெண்ணாக இருந்து விசாரியுங்கள்’ என்று கூறியிருக்கிறார்கள். அதன்படியேதான் சிறப்பு விசாரணைக் குழுவினரும் அந்த மாணவியிடம் சக தோழியாக, தாயாக, சகோதரியாக  அமர்ந்து விசாரணை நடத்தியிருக்கிறார்கள்” என்கிறார்கள்.

இந்தநிலையில், ஞானசேகரன் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. மேலும், விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு சிறையில் இருக்கும்போதே சட்ட ரீதியாக தண்டனை வாங்கிக் கொடுக்க போலீசார் தீவிரமாகியுள்ளனர்.

-வணங்காமுடி

திமுக வெளிச்சத்தில் நாங்கள் இல்லை… முரசொலிக்கு மார்க்சிஸ்ட் புதிய செயலாளர் பெ.சண்முகம் பதில்!

அறிவாலயம் டூ கோட்டை… கனிமொழி பிறந்தநாளில் சலசலப்பு போஸ்டர்கள்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share