எடப்பாடியின் லஞ்ச் பேக்கில்… எட்டாய் மடித்து… சட்டமன்றத்தில் அதிமுக செய்த சம்பவம்!

Published On:

| By Aara

இன்று (ஜனவரி 6) சட்டமன்றம் கூடிய நிலையில், அதிமுக சார்பில் அண்ணா பல்கலை மாணவி விவகாரத்தில் நீதி கேட்டு போராட்டம் நடத்தினர்.

யார் அந்த சார் என்ற பேட்ச்சை சட்டையில் குத்திக் கொண்டும், அண்ணா பல்கலை மாணவிக்கு நீதி வேண்டும் என்ற பதாகைகளை கையில் ஏந்தி அனைத்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களும் கோஷங்கள் எழுப்பினர். இதையடுத்து பேரவைத் தலைவர் அப்பாவு சட்டமன்றத்தில் இருந்து அதிமுக உறுப்பினர்களை வெளியேற்ற உத்தரவிட்டார்.

எடப்பாடி உள்ளிட்ட அனைத்து அதிமுக எம்.எல்.ஏ.க்களும் பதாகைகளை திடீரென தங்கள் சட்டைப் பையில் இருந்து எடுத்து விரித்துப் பிடித்ததும் திமுக தரப்பு அதிர்ந்துவிட்டது. சட்டமன்ற நிகழ்வு நேரலை செய்யப்படாததால் அந்த காட்சிகளும் வெளியே தெரியவில்லை.

இந்நிலையில், சட்டமன்றத்தில் என்ன நடந்தது, அதிமுகவின் போராட்ட வியூகம் அமைக்கப்பட்டது எப்படி என விசாரித்தோம்.

சட்டமன்றம் காலை 9.30 மணிக்கு கூட இருந்த நிலையில், அதிமுக பொதுச் செயலாளாரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் சரியாக காலை 8.45 மணிக்கு எதிர்கட்சித் தலைவர் அறைக்கு வந்துவிட வேண்டும் என்று நேற்றே உத்தரவிட்டிருந்தார்.

அதேபோல அதிமுகவின் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியின் அறைக்கு காலை 8.30 மணியில் இருந்தே வந்துவிட்டனர்.
9.15 மணிக்கு ஆளுங்கட்சியான திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வந்துவிட்டனர். அரசு கொறடா ராமச்சந்திரனின் அறையில் கூடிய திமுக எம்.எல்.ஏ.க்களிடம், ‘சட்டமன்றத்தில் என்ன நடந்தாலும் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் எவ்வித இடையூறிலும் ஈடுபடக் கூடாது. இது முதல்வரின் உத்தரவு’ என்று தெரிவித்தார்.

இதற்கிடையே எதிர்க்கட்சித் தலைவர் அறைக்குள் சென்ற எடப்பாடி பழனிசாமி அங்கே அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களிடம் பேசினார். எடப்பாடியோடு லஞ்ச் பைகள் இரண்டை அவரது உதவியாளர்கள் எடுத்து வந்தனர். அறைக்குள் சென்றதும் அந்த லஞ்ச் பேக்கில் இருந்து, ‘யார் அந்த சார்?’ என்ற பேட்ச் சை எடுத்து எல்லா அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கும் விநியோகித்தார் எடப்பாடி. இதை சட்டையில குத்திக்கங்க என்றார்.

அதேபோல தமிழ்நாடு அரசே மறைக்காதே… நீதி வேண்டும் அண்ணா பல்கலை மாணவிக்கு நீதி வேண்டும் என அச்சிடப்படட ஏ3 சைஸ் பதாககள் அனைத்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டன.

’எல்லாரும் இதை எட்டாய் மடிச்சு… சட்டை பாக்கெட்டுல வச்சிக்கங்க… அதுக்கு மேல அம்மா படத்தை முன்னாடி தெரியுற மாதிரி வச்சிக்கங்க… உள்ள போனதும் நான் எடுத்துக் காட்டினதும் நீங்க எல்லாம் இதை எடுத்து உயர்த்திக் காட்டணும்’ என்று அதிமுக எம்.எல்..ஏ.க்களிடம் பேசினார் எடப்பாடி.

அனைவரும் பேட்ச்சை வாங்கிக் குத்திக் கொண்டு ஏ 3 சைஸ் பதாகையை எட்டாய் மடித்து பாக்கெட்டில் வைத்துக் கொண்டு சட்டமன்றத்துக்குள் சென்று அமர்ந்தனர்.

காலை 9.24 மணிக்கு ஆளுநர் ஆர்.என். ரவி சட்டமன்றத்துக்குள் வந்தார். அவருக்கு உரிய மரியாதை அளிக்கப்பட்டு. உள்ளே அழைத்துச் செல்லப்பட்டார். தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. தேசிய கீதமும் பாடப்பட வேண்டும் என்று ஆளுநர் கோர அப்போது சில நிமிடம் மௌனம் நிலவியது.

இந்த நிலையில் தான்… காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும், தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகனும் ஆளுநருக்கு எதிரே நின்று அவருக்கு எதிராக முழக்கங்கள் இட்டனர். 9.24 க்கு உள்ளே வந்த ஆளுநர், சரியாக பத்து நிமிடங்களில் 9.34 க்கெல்லாம் வெளியேறிவிட்டார்.

அதன் பின் ஆளுநர் உரையை சபாநாயகர் வாசிக்கத் தொடங்கியபோதுதான் எதிக்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி எழுந்தார். அவரோடு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களும் எழுந்தனர், தங்கள் சட்டை பாக்கெட்டுகளில் இருந்து அண்ணா பல்கலை மாணவிக்கு நீதி கேட்கும் ஏ 3 சைஸ் பதாகைகளை சடக்கென வெளியே எடுத்து உயர்த்தி விரித்துப் பிடித்தனர். ‘அண்ணா பல்கலை மாணவிக்கு நீதி வேண்டும்… யார் அந்த சார்?’ என்று கேள்வி எழுப்பி முழக்கமிட்டனர். முதல்வர் உள்ளிட்ட ஆளுங்கட்சி உறுப்பினர்கள் இதைப் பார்த்தபடி இருந்தனர்.

அப்போது சபாநாயகர் அதிமுக உறுப்பினர்களை அமரச் சொன்னார். அவர்கள் தொடர்ந்து முழக்கம் எழுப்பியதால் வெளியேற்ற உத்தரவிட்டார். இதையடுத்து அந்த பதாகையை பிடித்தபடியே எடப்பாடி பழனிசாமியும் அதிமுக சட்ட்டமன்ற உறுப்பினர்களும் வெளியேறினார்கள்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “இது ஆளுநர் உரையல்ல, சபாநாயகர் உரை. அண்ணா பல்கலை மாணவி விவகாரத்தில் அரசு இனியும் தூங்கிக் கொண்டிருக்கக் கூடாது என்பதால்தான் இந்த பதாகைகளை எடுத்து வந்து போராடினோம். யார் அந்த சார்? என்று கேட்டால் அரசுக்கு ஏன் கோபம் வருகிறது? யாரையோ காப்பாற்ற இந்த அரசு முயற்சி செய்கிறது” என்று கூறினார் எடப்பாடி பழனிசாமி.

யார் அந்த சார் என்று எதிர்பாராத விதமாய் எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் அதிமுக நடத்திய போராட்டம் பரபரப்பாக பேசப்பட்டது. அதேபோல சட்டமன்றத்திலும் அதிமுக உறுப்பினர்கள் இன்று திட்டமிட்டு சம்பவம் செய்திருக்கிறார்கள்.

வணங்காமுடி

தமிழகத்தில் எமெர்ஜென்சி… ஆளுநர் அடுக்கடுக்கான கேள்விகள்!

பத்திரிகையாளர் கொடூரக் கொலை: பதறவைக்கும் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share