அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் குற்றவாளி என்று சென்னை மகளிர் நீதிமன்றம் இன்று (மே 28) தீர்ப்பளித்துள்ளது. வரும் ஜூன் 2-ஆம் தேதி தீர்ப்பு விவரங்கள் அறிவிக்கப்படும் என்று நீதிபதி ராஜலட்சுமி தெரிவித்துள்ளார். anna university sexual assault case
தீர்ப்பு வெளியான பிறகு, அரசு தரப்பு வழக்கறிஞர் மேரி செய்தியாளர்களிடம் பேசும்போது, “இந்த வழக்கில் சாட்சியங்கள், ஆவண சாட்சியங்கள், தடய அறிவியல் துறை சாட்சியங்கள் மூலமாக ஞானசேகரன் மீதான 11 குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டு அவர் குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தண்டனை விவரங்கள் ஜூன் 2-ஆம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம், தனக்கான தண்டனையை குறைக்க வேண்டும் என்று ஞானசேகரன் கோரிக்கை வைத்தார். அரசு தரப்பில் அதற்கு கடுமையான ஆட்சேபனை தெரிவித்து அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று வாதிட்டோம்” என்று தெரிவித்தார்.
ஞானசேகரன் தரப்பு வழக்கறிஞர் கோதண்டராமன், “இந்த வழக்கை பொறுத்தவரையில், ஞானசேகரன் மட்டும் தான் எதிரியாக காட்டப்பட்டுள்ளார். அவருடன் யாரேனும் சேர்ந்து குற்றச்சம்பவத்தில் ஈடுபட்டதாக குற்றப்பத்திரிகையில் தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
எனவே, ஞானசேகரனிடம் மட்டும் தான் நீதிமன்ற விசாரணை நடைபெற்றது. அவர் மீது 11 குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டது. அந்த குற்றச்சாட்டுக்கள் நிரூபணம் செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. தண்டனை விவரங்கள் அறிவிக்கப்பட்டவுடன், மேல்முறையீடு செய்வதற்கான சாத்தியக்கூறுகள் என்ன இருக்கிறது என்று பார்த்துவிட்டு முடிவு செய்யப்படும்.
காவல்துறை இந்த வழக்கை சிறப்பாக விசாரணை நடத்தியுள்ளனர். சாட்சியங்களில் சில குறைபாடுகள் இருக்கிறது. அதை தான் மேல்முறையீட்டின் போது முக்கிய வாதங்களாக எடுத்துவைக்க இருக்கிறோம்.
அரசு தரப்பில் அதிகப்படியாக ஆயுள் தண்டனை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர். ஆனால், ஆர்ட்டிகிள் 21 விதியின்படி ஞானசேகரனுக்கு குடும்பம் இருக்கிறது, உடல்நலனை கருத்தில் கொள்ள வேண்டும், கடன் இருக்கிறது உள்ளிட்டவற்றை சுட்டிக்காட்டி குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று வாதிட்டோம்” என்று தெரிவித்தார்.