கல்லூரிகளில் மாணவர்கள் ராகிங்கில் ஈடுபடுவதை தடுக்க அண்ணா பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அனைத்து வகை கல்லூரிகளிலும் புதிதாக சேரும் மாணவர்களை சீனியர் மாணவர்கள் ராகிங் என்ற பெயரில் துன்புறுத்துவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ராகிங் செய்யும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடப்பட்டும், மாணவர்கள் அதை பொருட்படுத்தவில்லை. ராகிங் தொல்லையால் மன உளைச்சலுக்கு ஆளாகும் மாணவர்களில் சிலர் தற்கொலை முயற்சிகளில் ஈடுபடுகின்றனர்.
சமீபத்தில் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி விடுதியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் சரவணன் என்ற மாணவன் சீனியரின் ராகிங் தொல்லையால் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். இதுதொடர்பாக நான்கு மாணவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதுதொடர்பாக, அகில இந்திய தொழில்நுட்ப கழகம், அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியிருக்கிறது. அதன்படி, அண்ணா பல்கலைக்கழகம் தமிழ்நாடு முழுவதுமுள்ள 500க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
அதில், ”ராகிங்கில் ஈடுபட மாட்டேன் என மாணவரும், பெற்றோர் அல்லது பாதுகாவலர் ஆன்லைனில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். மாணவர் பிரமாணப் பத்திரத்தை [antiragging](https://www.antiragging.in/) என்ற இணையதளத்திலும், [amanmovement]( https://amanmovement.org/registration/public/amanmovement/) என்ற இணையதளத்திலும் தாக்கல் செய்யலாம். மேலும் இதனை பதிவு செய்து வரும் மின்னஞ்சலை கல்லூரி சிறப்பு அலுவலருக்கு அனுப்பி வைக்க வேண்டும். மாணவர்களின் பிரமாணப் பத்திரத்தில் மாணவர் மற்றும் பெற்றோர் அல்லது பாதுகாவலர் கையொப்பம் கண்டிப்பாக இருக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
**-வினிதா**
�,