முன்னாள் முதல்வர் அண்ணா நினைவு தினத்தை ஒட்டி, முதல்வர் ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தியுள்ளனர்.
முன்னாள் முதல்வர் அண்ணாவின் 55-வது நினைவு தினம் இன்று (பிப்ரவரி 3) அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் இருந்து அண்ணா நினைவிடம் வரை, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமையில் அமைதி பேரணி நடைபெற்றது. தொடர்ந்து அண்ணா நினைவிடத்தில் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மரியாதை செலுத்தினர்.
இந்தநிலையில், முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஸ்பெயின் நாட்டிற்கு பயணம் செய்துள்ள முதல்வர் ஸ்டாலின், அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அண்ணா உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “தமிழ்த்தாயின் தலைமகனாகப் பிறந்து, நமக்கெல்லாம் அண்ணனாக – அறிவு மன்னனாக வழிகாட்டிய பேரறிஞர் அண்ணா நினைவு நாள். இன்று அமைதிப் பேரணியாகச் சென்ற திமுக நிர்வாகிகள், பேரறிஞர் அண்ணா சொன்ன கடமை, கண்ணியம் – கட்டுப்பாட்டோடு உழைத்து மாநில சுயாட்சியை வென்றெடுக்கும் மக்களுக்கான அரசு மத்தியில் அமைய ஓய்வின்றி உழைக்க வேண்டும். எண்ணித் துணிக கருமம்” என்று தெரிவித்துள்ளார்.
இதேபோல, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அக்கட்சியினர் சென்னையில் அண்ணா நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினர்.
எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள பதிவில், “சமூகவியல் கொள்கையாக இருந்த திராவிடத்தை ஒப்பற்ற அரசியல் தத்துவமாக மாற்றியவரும், ஆட்சிக் கட்டிலில் திராவிடத்தை அமரச் செய்து, மாநிலத்தின் பெயர் முதல் அரசின் பதவிகள், கோப்புகள் வரை “எங்கும் தமிழ், எதிலும் தமிழ்” என நவீன தமிழ்நாட்டை கட்டமைத்து அதனை தமிழ்மயமாக்கிய மாபெரும் தமிழ்க் கனவு கண்ட , கழகத்தின் முதல் எழுத்து, பேரறிஞர் அண்ணாவின் 55 வது நினைவு நாளில் அவரைப் போற்றி வணங்குவதுடன், தமிழ்நாட்டின் சீர்மிகு கொள்கைகளாகப் பேரறிஞர் அண்ணா நிறுவிய சமூகநீதி-சமத்துவம்-மாநில சுயாட்சி ஆகியவற்றைப் தொடர்ந்து பேணிக் காத்திடுவோம்” என்று தெரிவித்துள்ளார்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்
“எதிரிகள் தாக்கித் தாக்கி தங்களின் வலுவை இழக்கட்டும். நீங்கள் தாங்கி தாங்கி வலுவைப் பெற்றுக் கொள்ளுங்கள்” என்ற பேரறிஞர் அண்ணாவின் வரிகளுக்கேற்ப நம்முடைய எதிரிகளும் துரோகிகளும் நம்மை எவ்வளவு பலவீனமாக்க முயற்சி செய்தாலும் அவற்றை துணிச்சலுடன் எதிர்கொண்டு அண்ணாவின் கனவுகளை, லட்சியங்களை நிறைவேற்ற உறுதியேற்போம்.
பாஜக தலைவர் அண்ணாமலை
தமிழகம் கண்ட எளிமையான தலைவர்களில் ஒருவர், மது மூலம் கிடைக்கும் வருவாய் என்பது, தொழுநோயாளி கையில் உள்ள வெண்ணெயை வாங்குவதற்குச் சமம் என, மதுவிலக்குக் கொள்கையில் உறுதியாக இருந்தவர். தான் தொடங்கிய கட்சியில் கூட, தனக்குப் பின் தனது வாரிசுகள் வர வேண்டும் என்பதை விரும்பாதவர். திமுக நிறுவனரும், தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சருமான பேரறிஞர் அண்ணாதுரை அவர்களது நினைவைப் போற்றி வணங்குகிறேன்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…