கேரளாவைச் சேர்ந்த அன்னா செபாஸ்டின் (26) என்ற பெண் கடந்த மார்ச் மாதம் சி.ஏ படித்து முடித்தார். கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு புனேயில் உள்ள யர்னஸ்ட் யங்ங் என்ற பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் முதல் முறையாக வேலைக்குச் சேர்ந்தார். ஆனால் வேலையில் சேர்ந்த 4 மாதத்தில் அப்பெண் உடல்நலம் பாதிக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயத்தில் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அன்னாவின் மேலாளர், துணை மேலாளர் அவருக்கு பணிச்சுமையை அதிகமாக கொடுத்துள்ளனர். பணி முடியும் நேரத்தில் மற்றொரு டாஸ்க் கொடுத்து முடித்து விட்டு போங்கள் என்று கூறுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால், தினமும் பணி முடித்து இரவு ஒரு மணியளவில்தான் தான் தங்கியிருக்கும் அறைக்கு அன்னா வருவார்.
ஆனால், ஜூலை 20 ஆம் தேதி அவர் இறந்த போது இரவு 8 மணிக்கே அறைக்கு வந்து விட்டார். அதற்கு முன்னதாக , இரு வாரங்களுக்கு முன்பு அவரின் பட்டமளிப்பு விழாவுக்கு தனது பெற்றோரை புனாவுக்கு வரவழைத்துள்ளார்.
அப்போதே, தனக்கு நெஞ்சு வலி இருப்பதாக பெற்றோரிடத்தில் அன்னா கூறியுள்ளார். தொடர்ந்து, மருத்துவமனைக்கு அழைத்து சென்று ஈ.சி.ஜி எடுத்து பார்த்துள்ளனர். ஈ.சி.ஜியில் நார்மல் என்றே வந்துள்ளது. ஆனால்,ஜூலை 20 ஆம் தேதி அவருக்கு கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டுள்ளது. மருத்துவமனை கொண்டு செல்வதற்குள் அன்னா இறந்தும் போனார்.
இறப்பதற்கு முன்னதாக தனது நெருங்கிய தோழியான ஆன் மேரி என்பவரிடத்தில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக அன்னா செல்போனில் பேசியுள்ளார். அப்போது, மிக மோசமான பணிச்சூழலில் தான் இருப்பதாகவும் , அதனை தான் உடைத்து கொண்டிருப்பதாவும் கூறியுள்ளார். அன்னா தனது பணியை ராஜினாமா செய்ய திட்டமிட்டிருந்துள்ளார். ஆனால், அதற்குள் பலியாகி விட்டார்.
அன்னா இறந்த பிறகு, அவரது அறையை சோதித்து பார்த்த போது, தன்னை தானே அவர் வரைந்த ஓவியம் ஒன்று இருந்தது. அதில், புறா ஒன்று அவரின் முன் சிறகடித்து பறப்பது போலவும் அதை பார்த்து மார்பில் கை வைத்து கொண்டு அன்னா சிரிப்பது போலவும் இருந்தது அந்த ஓவியம். இந்த ஓவியத்தை பார்த்து அவரது பெற்றோர் கண்ணீர் சிந்தி வருகின்றனர். அன்னாவுக்கு ஏற்பட்ட முடிவை பார்த்த பிறகாவது, டாக்சிக் மேனஜர்கள் திருந்துவார்களா?
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: குற்றம் சாட்டப்பட்டவருக்கு பதவி உயர்வா? – ஆட்சியர் விளக்கம்!