அக்டோபர் 10 ஆம் தேதி காலை பெங்களூருவில் காலமான முரசொலி செல்வத்தின் உடல் அன்று மாலையே சென்னை கோபாலபுரத்தில் இருக்கும் கலைஞரின் வீட்டுக்கு எடுத்து வரப்பட்டது.
கோபாலபுரம் என்ற கூட்டில் கலைஞராலும்,, தயாளு அம்மையாராலும் வளர்க்கப்பட்ட பல்வேறு பறவைகளில் ஒருவர்தான் முரசொலி செல்வம். அவர் கால ஓட்டத்தில் பெங்களூருக்கும் சென்னைக்கும் பறந்துகொண்டிருந்தாலும்…. உயிர்க் காற்று போன பின் கோபாலபுரம் கூட்டுக்குள் வந்துதான் தனது கடைசி இரவைக் கழித்திருக்கிறார்.
அக்டோபர் 10 ஆம் தேதி மாலை கோபாலபுரம் இல்லத்துக்குள் உடலாக வந்தடைந்தார் முரசொலி செல்வம். நேசமும் பாசமும் அறிவும், உறவும், வரலாறும், அரசியலும், எதையும் தாங்கும் உறுதியும் கற்றுக் கொண்ட அந்த கோபாலபுர வீட்டில் 24 மணி நேரம் ஓய்வெடுத்துவிட்டு பெசன்ட் நகர் நோக்கி இறுதி ஊர்வலமாக புறப்பட்டார்.

இந்த 24 மணி நேரத்தில் தயாளு அம்மையார் முதலான பாச உறவுகள், எத்தனையோ துறை சார்ந்த பெரும்புள்ளிகள், திமுக தொண்டர் என பல்வேறு தரப்பைச் சேர்ந்தவர்களும் அவரை கடைசியாக சந்தித்து உரையாடிவிட்டுச் சென்றார்கள். வழக்கமாக அவர் புன்னகையோடு பதிலுரைப்பார். ஆனால் இந்த இறுதி உரையாடலில் அவர் பேசவே இல்லை.
அவரைப் பற்றியே அனைவரும் பேசிக் கொண்டிருந்தனர். ஒவ்வொருவருக்கும் அவ்வளவு சம்பவங்கள் முரசொலி செல்வத்தைப் பற்றி இருக்கின்றன,
திமுக பொதுச் செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன், குளிர்ப்பெட்டிக்குள் இருந்த முரசொலி செல்வத்தைப் பார்த்து கண்ணீரோடும் கோபத்தோடும், ‘ஏன்யா? நீ மட்டும் போயிட்ட… என்ன உனக்கு அவசரம்?’ என்று மாலையை செல்வத்தை நோக்கி விட்டெறிந்தார். அது கோபமல்ல… முரசொலி செல்வத்தின் மீது அவர் வைத்திருந்த மூர்க்கத்தனமான அன்பு!
’தலைவர் கலைஞரோடும் கோபாலபுரத்தோடும் என்னை பிரிக்க முடியாத அளவுக்கு ஃபெவிகால் போட்டு ஒட்டிவிட்டதே முரசொலி செல்வம்தான்.
கல்லூரி வாழ்க்கை தொடங்கி இன்று வரை யான் பெற்ற பேருக்கெல்லாம், செல்வமே முழு முதல் காரணகர்த்தா என்பதை என் நெஞ்சு அறியும், எங்களை நெருங்கியவர்கள் அறிவார்கள்” என்று கூறியிருக்கிறார் துரைமுருகன். இந்த மூர்க்கத்தனமான அன்புதான், செல்வத்தின் மீதான கோபமாக வெளிப்பட்டிருக்கிறது.

முரசொலி செல்வம் மீது கலைஞர் எவ்வளவு அன்பு வைத்திருந்தார் என்பதையும், செல்வத்துக்கு தனது மகள் செல்வியை அவர் எப்படி திருமணம் செய்துகொடுத்தார் என்பதையும் கலைஞரே வெளியுலகத்துக்கு சொல்லும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியவர் ஜெயலலிதா.
ஆம்… 1991 இல் ஜெயலலிதா ஆட்சியில் திமுகவின் ஒரே ஒரு சட்டமன்ற உறுப்பினர் பரிதி இளம் வழுதி. ஒன்றாக இருந்தாலும் நின்று சட்டமன்றத்தில் கர்ஜித்தவர்.
அப்படித்தான் 1991 செப்டம்பர் 9 ஆம் தேதி சட்டமன்றத்தில் ஆவேசமாக பேசினார் பரிதி இளம் வழுதி. அப்போதெல்லாம் முரசொலியின் வெளியூர் பதிப்பு மதியம் 2 மணிக்கு முடித்தாக வேண்டும். அப்போதுதான் வெளியூர்களுக்கு இதழை அனுப்பி மறுநாள் காலை கிடைக்கச் செய்ய முடியும். முரசொலி மட்டுமல்ல, பல நாளிதழ்களின் நிலையும் அதுதான்.
அதனால் முரசொலி ஆசிரியரான செல்வம், திமுக சட்டமன்ற உறுப்பினர் பரிதி இளம் வழுதியின் பேச்சை வெளியிட்டு முரசொலி முதல் பதிப்பை முடித்து அச்சுக்கு அனுப்பி அது வெளியூர்களுக்கும் போய்க் கொண்டிருந்தது.
இந்நிலையில், பரிதி பேசிய பேச்சின் ஒரு பகுதியை மாலை அவைத் தலைவர் சேடப்பட்டி முத்தையா அவைக் குறிப்பில் இருந்து நீக்குகிறார். ஆனால், அவைக் குறிப்பில் இருந்து சபாநாயகரால் நீக்கப்பட்ட பரிதியின் பேச்சு மறுநாள் வெளியூர் முரசொலி பதிப்பில் வெளியானது.

இதற்காகத்தான் முரசொலி ஆசிரியர் செல்வம் மீது சட்டமன்றத்தில் உரிமை மீறல் பிரச்சினை கொண்டுவரப்பட்டது. செப்டம்பர் 25 ஆம் தேதி சட்டமன்றக் கூண்டில் ஏற்றப்பட்டார். அவைத் தலைவர் சேடப்பட்டி முத்தையா முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் முரசொலி மீதான கண்டனத்தைப் படித்தார். என்ன தண்டனை தருவார் என்று எதிர்பார்த்த வேளையில், ‘நீங்கள் போகலாம்’ என்று கூறிவிட்டார்.
இதற்குப் பின் முரசொலியில், ‘ கூண்டு கண்டேன் குதூகலம் கொண்டேன்’ என்று கலைஞர் கடிதம் எழுதுகிறார். அந்த கடிதத்தின் மூலம் தன் பிறவிப் பயனை அடைந்துவிட்டேன் என்று தனது முரசொலி நினைவலைகள் நூலில் குறிப்பிடுகிறார் முரசொலி செல்வம்.
அந்த கடிதத்தில் கலைஞர் சொல்லும் செய்திகள் முரசொலி செல்வத்தின் தனிப்பட்ட வாழ்வையும், பொது வாழ்வையும் உச்சபட்சமாக கௌரவப்படுத்தும் செய்திகள்,
கலைஞர் சொல்லும் அந்த ஆச்சரிய தகவலை இப்போது காண்போம்…
“இந்தியாவின் ஆலோசகராக இங்கிலாந்து அரசின் வேண்டுகோளின் பேரில் லண்டன் மாநகருக்கு செல்ல அனிபால் எனும் விமானம் ஏறி… நீதிக் கட்சியின் தன்னேரில்லாத தளபதி சர். ஏ.டி.பன்னீர்செல்வம் அவர்கள் பயணம் செய்தபோது அவர் அமர்ந்திருந்த அந்த விமானம் ஓமான் கடலில் வீழ்ந்தது. தமிழர்களின் செல்வத்தை திராவிடர்களின் செல்வத்தை நம்மிடமிருந்து பிரித்துத் தொலைத்தது.
1940 இல் பன்னீர்செல்வம் மறைந்த சோக நிழல் இந்த மண்ணில் படிந்திருக்கும்போதுதான், அதே 1940 ஏப்ரல் திங்களில் என் சகோதரிக்கு ஒரு மகன் பிறந்தான். மறைந்தாலும் மனதில் நிறைந்திருக்கும் பன்னீர்செல்வத்தின் நினைவாக அவனுக்கு நான் பன்னீர்செல்வம் என்று பெயரிட்டேன்.
அந்த பன்னீர்செல்வம் தான் சட்டப் பேரவைக் கூண்டிலே நிறுத்தப்பட்ட முரசொலி ஆசிரியர் செல்வம்.

செல்வம் பிறந்தபோதே என் தாயார் என்னைப் பார்த்து, ‘உனக்கு ஒரு பெண் பிறந்தால், அதற்கு செல்வி என பெயரிட்டு செல்வத்துக்கே துணைவியாக்க வேண்டும்’ என்று அன்புக் கட்டளைப் பிறப்பித்தார்கள். பாட்டியின் ஆசை நிறைவேறியது.
அண்ணா தலைமையில் தந்தை பெரியார், மூதறிஞர் ராஜாஜி, காயிதே மில்லத் ஆகியோர் ஒரே மேடையில் தோன்றி மணமக்களை வாழ்த்தினர். அந்த மணக்கோலத்தில் செல்வத்தைப் பார்த்தபோது கூட எனக்கு அத்தனை மகிழ்ச்சி இல்லை.
ஆனால், ஆங்கிலம் தமிழ் நாளேடுகள் அத்தனையிலும் செல்வம் சட்டப்பேரவை கூண்டில் சிரிப்பு தவழ நின்றுகொண்டிருக்கும் படம் வெளிவந்துள்ளதைப் பார்த்தபோதுதான் எனக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை” என்று முரசொலி கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார் கலைஞர்.
இன்று முரசொலி செல்வத்தின் உடல் மீது இருந்த கண்ணாடிப் பேழை அகற்றப்பட்டபோது… கலைஞரின் மகள் செல்வி தன் கணவர் முரசொலி செல்வத்தின் மார்பு மீது கடைசியாய் ஒரு முறை தலை சாய்த்து வெடித்து அழும் காட்சி அனைவரையும் உலுக்கியது.

கலைஞரின் தாயார் அஞ்சுகத்தம்மையாரின் அன்பு உத்தரவின் பேரில் செல்வி பிறப்பதற்கு முன்பே…. அவருக்கு செல்வி என பெயரும், செல்வத்தின் மனைவி என்ற உரிமையும் நிலைநாட்டப்பட்டதை என்னவென்று சொல்வது?
காவியக் காதலையெல்லாம் தோற்கடித்த இந்த செல்வி – செல்வம் திருமண பந்தம் தனிப்பட்ட வாழ்வு மட்டுமல்ல… திமுகவின் வளர்ச்சியோடும், முரசொலியின் வளர்ச்சியோடும் பின்னிப் பிணைந்த பொது வாழ்வும் கூட!
புறப்பட்டார் முரசொலி செல்வம்… நாளைய முரசொலிக்கான கட்டுரையாக தன்னையே வழங்கிவிட்டு!
–ஆரா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தொடர் விடுமுறை…தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்த தமிழக அரசு!
முதல் இன்னிங்சில் 556 ரன்கள்… சொந்த மைதானத்தில் நொந்த பாகிஸ்தான்

Comments are closed.