அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சொத்துக் குவிப்பு வழக்கை வரும் நவம்பர் 1ம் தேதிக்கு ஒத்தி வைத்து தூத்துக்குடி முதன்மை மாவட்ட நீதிமன்றம் இன்று (அக்டோபர் 11) உத்தரவிட்டுள்ளது.
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கடந்த 2001 முதல் 2006ம் ஆண்டு வரை அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இதுதொடர்பாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினரின் ரூபாய் 6.5 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை, தூத்துக்குடி நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கில் தங்களையும் இணைக்க கோரி மனு தாக்கல் செய்தனர்.
இந்த நிலையில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சொத்துக்குவிப்பு வழக்கு நீதிபதி செல்வம் முன்னிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது ”அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ரூ.60 கோடி சொத்து சேர்த்ததற்கான ஆதாரங்கள் உள்ளது. அவர் தொடர்ந்து அமைச்சரவையில் இருப்பதால் லஞ்ச ஒழிப்புத்துறையின் விசாரணை முழுமையாக நடைபெறவில்லை” என்று அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ரமேஷ் தெரிவித்தார்.
அதேவேளையில், ’அமலாக்கத்துறையின் மனுவை ஏற்றுக்கொள்ள வேண்டாம்’ என லஞ்ச ஒழிப்புத் துறையினரும், அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மனோகரனும் வாதிட்டனர்.
தொடர்ந்து சுமார் 50 நிமிடம் நடைபெற்ற விவாதங்கள் நிறைவு பெறாததை தொடர்ந்து வரும் நவம்பர் 01 தேதிக்கு விசாரணையை முதன்மை மாவட்ட நீதிபதி செல்வம் ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
லியோ படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி… விஜய் ரசிகர்கள் குஷி!
ICC WorldCup: டிரெண்டிங்கில் விராட்கோலி – நவீன் உல் ஹக்… மீண்டும் மோதல்?