அனிதா நினைவு தினம்: உதயநிதி உறுதி!

Published On:

| By Jegadeesh

Anita Memorial Day

நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அனிதாவின் நினைவுதினம் இன்று (செப்டம்பர் 1) அனுசரிக்கப்பட்டு வரும் சூழலில், ஓர் அண்ணனாக அவரை நினைவு கூர்கிறேன் என்றும் நீட்டை நிரந்தரமாக நீக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை எனவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

மத்திய அரசால் மருத்துவ படிப்பில் நுழைவதற்கான நீட் எனப்படும் நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.

நீட் தேர்வினால் தமிழக ஏழை எளிய மற்றும் கிராமப்புற மாணவர்களின் மருத்துவ கனவு சிதைக்கப்படுவதாகவும், இதனால் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கொடுக்க வேண்டும் என்றும்  தமிழக பாஜகவை தவிர்த்து திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் நிலைப்பாடாக உள்ளது.

குறிப்பாக உதயநிதி ஸ்டாலின் கடந்த சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது நீட்டை ரத்து செய்வோம் என்று வாக்குறுதி அளித்தார்.

இதனிடையே, நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியதாததால் மாணவர்கள் சிலர் தொடர்ந்து தற்கொலை செய்து வருவது மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

இச்சூழலில், நீட் நுழைவுத் தேர்வை எதிர்த்து 2017 செப்டம்பர் 1ஆம் தேதி தனது உயிரை மாய்த்துக்கொண்ட மாணவி அனிதாவின் நினைவு நாளான இன்று உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில் இது குறித்த தனது வேதனையை பகிர்ந்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “நீட் ஒழிப்புப் போராளி தங்கை அனிதா நம்மை விட்டுப் பிரிந்து இன்றோடு வருடங்கள் ஆறு ஆகின்றன.

ஆயிரம் ஆண்டுகள் கடந்தாலும் தங்கை அனிதாவை நீட் தேர்வு கொலை செய்த வடு நம் மனதில் என்றும் இருக்கும்.

நீட் எனும் சமூக அநீதிக்கு எதிராக இறுதிவரை போராடிய தங்கை அனிதா மறைந்த இந்நாளில், ஓர் அண்ணனாக அவரை நினைவு கூர்கிறேன்.

நீட்டை நிரந்தரமாக நீக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை. அந்த நாள் நிச்சயம் வரும். நீட்டை ஒழித்து கட்டுவோம்”என்று கூறியுள்ளார்.

அதேபோல் அனிதாவின் நினைவு தினத்தையொட்டி திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் அவருடைய உருவப் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

அதேபோல் கும்பகோணம் அரசு மகளிர் கல்லூரி மாணவிகளும் அனிதாவின் உருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

கவுதம சிகாமணி வழக்கு: சென்னை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றம்!

ஒத்த ஓட்டு முத்தையா: மூன்று வேடங்களில் கவுண்டமணி

விஸ்வநாதன் ஆனந்தை பின்னுக்கு தள்ளிய குகேஷ்

அழைத்து வந்த கலைஞர்… அனுப்பி வைக்கும் ஸ்டாலின்: யார் இந்த கிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்.? ஏன் இந்த மாற்றம்?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share