ஈசிஆரில் நடைபெற்று வரும் இசையமைப்பாளார் அனிருத் இசைக்கச்சேரியைக் காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்துள்ளதால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இசையமைப்பாளர் அனிருத் தனுஷ் நடிப்பில் வெளியான 3 திரைப்படத்தில் இடம்பெற்ற “ஒய் திஸ் கொலவெறி” பாடல் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். 2012ல் வெளியான 3 தொடங்கி, 2022 தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம், மேகம் கருக்காதா பெண்ணே பெண்ணே பாடல் வரை ஏராளமான பாடல்களுக்கு இசையமைத்துள்ளார்.
குறிப்பாக இந்த ஆண்டில் பீஸ்ட் படத்தில் அரபிக் குத்து, விக்ரம் படத்தில் பத்தல பத்தல, காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் டூ டூ பாடல் என ஏராளமான வெற்றிப் பாடல்களைக் கொடுத்து அதிக ரசிகர்கள் பட்டாளத்தைக் கொண்ட இளம் இசையமைப்பாளர் அனிருத் ஆவர்.

இந்நிலையில், இசை துறையில் தனது 10ஆவது ஆண்டைக் கொண்டாடும் வகையில், அனிருத் தனது முதல் இந்திய மியூசிக் கான்செர்ட் நிகழ்வான ‘ராக்ஸ்டார் ஆன் ஹாட்ஸ்டார் – ஒன்ஸ் அப்பான் எ டைம் கான்சர்ட்’ எனும் நிகழ்ச்சியை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் உடன் இணைந்து அறிவித்தார்.
அக்டோபர் 21ஆம் தேதி சென்னை ஈசிஆர் பகுதியிலும், நவம்பர் 12 ஆம் தேதி கோவை கொடிசியா மைதானத்திலும் இசை கச்சேரி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த இசைக்கச்சேரிக்கான விளம்பரங்களும் செய்யப்பட்டன. சென்னை மெட்ரோ ரயில்கள், மெரினா மால் ஆகியவற்றிலும் இசைக்கச்சேரிக்கான விளம்பரங்கள் இடம்பெற்றிருந்தன. அந்த விளம்பரங்கள் முன்பு நின்று ஏராளமான அனிருத் ரசிகர்களும் செல்பி எடுத்துக்கொண்டதைக் காணமுடிந்தது.

இசைக்கச்சேரியைக் காண ரூ.1000 தொடங்கி ரூ.50,000 வரை டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று (அக்டோபர் 21) இரவு 8 மணிக்கு இசைக்கச்சேரி தொடங்கி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள நித்யகல்யாண பெருமாள் கோயில் மைதானத்தில் கச்சேரி நடைபெற்று கொண்டிருக்கிறது.
இதனால் பல்லாயிரக் கணக்கான அனிருத் ரசிகர்கள் அந்த பகுதியில் குவிந்துள்ளதால் வடநெமிலி ஊராட்சிக்குட்ட செம்மஞ்சேரி பகுதி ஈசிஆர் சாலையில் இருபக்கமும் கார்கள் அணி வகுத்து நிற்கின்றன.

கச்சேரி நடைபெறும் மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பார்க்கிங் ஏரியா கார்களால் நிரம்பியுள்ளது. உள்ளே நிற்கும் எண்ணிக்கையை காட்டிலும் வெளியே அதிகளவிலான கார்கள் நிற்பதையும் காணமுடிகிறது.
இதனால் நிகழ்ச்சி நடைபெறும் பகுதியிருந்து சென்னை – புதுச்சேரி என இருபக்கம் 3 கி.மீ தூரம் வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக புதுச்சேரியில் இருந்து சென்னை வரும் வாகனங்களும், சென்னையிலிருந்து புதுச்சேரி செல்லும் வாகனங்களும் போக்குவரத்து நெரிசலில் சிக்கியுள்ளது.
போக்குவரத்தைச் சீர் செய்யும் பணியில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டிருந்தாலும், அந்த பகுதியைக் கடக்கும் வரை வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலையே உள்ளது.
அதோடு இரவு கச்சேரி முடிந்து திரும்பும் போது அனைவரும் ஒரே நேரத்தில் கிளம்புவார்கள் என்பதால் இதைவிட அதிகமாகப் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.
நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளவர்கள் பலர் மது அருந்தியிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் திரும்பிச் செல்லும் போது விபத்துகள் ஏற்பட வாய்ப்பிருப்பதால் அதனை தவிர்ப்பதற்கான ஆலோசனையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
பெருங்களத்தூரில் கடும் போக்குவரத்து நெரிசல் : மாற்று வழி என்ன?
தீபாவளி பண்டிகை: தீவிர கண்காணிப்பில் சென்னை போலீஸ்!
பிரியா