பூனையை சாப்பிடும் பூனை: அதிகாரிகள் ஆய்வில் பகீர்!

Published On:

| By Monisha

டிரஸ்ட் என்ற பெயரில் விலங்குகளைக் கொடுமைப்படுத்திய யசுவா அனிமல் டிரஸ்டில் இருந்து 101 விலங்குகள் மீட்கப்பட்டுள்ளன.

சென்னை தாம்பரத்தில் உள்ள எட்டயபுரம், தர்காஸ்ட் சாலையில் யசுவா அனிமல் டிரஸ்ட் என்ற அமைப்பு இயங்கி வருகிறது. இங்கு பூனைகள், நாய்கள் என நூற்றுக்கணக்கான விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

ஆனால் இந்த டிரஸ்டில் இருக்கும் விலங்குகள் துன்புறுத்தப்பட்டு வருவதாக என்.ஜி.ஓவைச் (அரசு சாரா அமைப்பு) சேர்ந்த பிரகாஷ் என்பவர் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் அந்த டிரஸ்டில், பி.எம்.ஏ.டி (பெசன்ட் மெமோரியல் அனிமல் டிஸ்பென்சரி), அனிமல் கேர் டிரஸ்ட் மற்றும் விலங்கு நல ஆர்வல அதிகாரிகள் ஆகியோர் நேற்று (டிசம்பர் 18) ஆய்வு மேற்கொண்டனர்.

அந்த ஆய்வின்போது, யசுவா டிரஸ்டில் இருந்த அனைத்து விலங்குகளும் ஊட்டச்சத்துக் குறைபாடுகளுடனும், போதிய உணவு இல்லாமலும் உடல் மெலிந்து எலும்புகள் வெளியே தெரியும் அளவிற்கு மிகவும் பரிதாப நிலையில் இருந்துள்ளன.

மேலும், டிரஸ்டில் பல விலங்குகள் இறந்துகிடந்துள்ளன. இறந்துகிடந்த விலங்குகளை அப்புறப்படுத்தாததால், உயிருடன் இருந்த விலங்குகள் உணவுப் பற்றாக்குறையால் அவற்றை உண்டு கொண்டிருந்தன.

அத்துடன், விலங்குகள் அடைத்து வைக்கப்பட்டிருந்த எந்த கூண்டுகளிலும் உணவு, தண்ணீர் இல்லாமல் இருந்துள்ளது. விலங்குகள் அடைத்து வைக்கப்பட்டிருந்த கூண்டுகளும் அவை கழித்த மலம், சிறுநீரால் முற்றிலும் தூய்மையற்று இருந்துள்ளது.

அதில், ஒரு சில விலங்குகள் அடிபட்ட நிலையில் சிகிச்சை அளிக்கப்படாமலும் இருந்துள்ளது. எளிமையாகச் சொல்ல வேண்டுமானால் அங்கிருந்த விலங்குகள் அனைத்தும் எந்த தவறும் செய்யாமல் சிறை வாழ்க்கையைவிட மோசமாக இருந்துள்ளன.

புகாரின் அடிப்படையில் ஆய்விற்காகச் சென்றவர்கள் இந்த கொடுமைகளைக் கண்டு உடனடியாக அங்கிருந்த 101 பூனைகள் மற்றும் நாய்களை மீட்டுள்ளனர்.
மேலும் யசுவா அனிமல் டிரஸ்ட் மீது ஐபிசி செக்‌ஷன் 428 மற்றும் 429 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து, உயர்நீதிமன்ற வழக்கறிஞரும், ஹெவன்ஸ் ஃபார் அனிமல்ஸ் டிரஸ்டின் (heaven for animals trust) நிறுவனருமான பிரகாஷ்காந்த் என்பவர் சோமங்கலம் ஆய்வாளருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

அதில், “எங்களுக்கு சமூக வலைத்தளம் வாயிலாகவும் விலங்கு நல ஆர்வலர்கள் வாயிலாகவும் யசுவா அனிமல் டிரஸ்டில் பூனைகள் மற்றும் நாய்கள் துன்புறுத்தப்படுவதாகப் புகார்கள் கிடைத்தது.

இந்த புகாரின் அடிப்படையில் விலங்கு நல ஆர்வலர்களோடு நாங்கள் சென்று ஆய்வு மேற்கொண்ட போது விலங்குகள் உணவு, தண்ணீர் இல்லாமல், மிகச் சிறிய கூண்டுக்குள் அடைத்து வைக்கப்பட்டிருந்தன.

ஒரு பூனை இறந்து கிடந்த மற்றொரு பூனையைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தது. விலங்குகள் தங்க வைக்கப்பட்டிருந்த இடமும் தூய்மையற்ற நிலையிலும் மிகவும் அசுத்தமாகவும் இருந்தது.

அங்கு உடல்நலக்குறைவோடு இருந்த பூனைகள் மற்றும் நாய்கள் என 101 விலங்குகளை நாங்கள் மீட்டுள்ளோம். எனவே யசுவா அனிமல் டிரஸ்ட் மீது ஐபிசி செக்‌ஷன் 428, 429 மற்றும் 11 கீழ் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தியை அறிந்த விலங்கு நல ஆர்வலர்கள் பலர், “மனிதர்களைப் போல் விலங்குகளும் அன்பிற்காக ஏங்கும் ஒரு உயிரினம் தான். அவைகளுக்கு உணவு, பாதுகாப்பு அளித்துப் பராமரிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை.

’பாதுகாப்பு அளிக்கிறேன்’ என்ற பெயரில் விலங்குகளைக் கொடுமைப்படுத்த வேண்டாம். யாருடைய பாதுகாப்பு இல்லை என்றாலும் விலங்குகள் தங்களைத் தானாகவே பார்த்துக் கொள்ளும்” என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மோனிஷா

தமிழர்கள் இனி இலங்கைக்கு கப்பலில் பயணிக்கலாம்!

இந்தியாவை விமர்சித்த இன்போசிஸ் நிறுவனர்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share