ரூ17,000 கோடி வங்கி கடன் மோசடி விவகாரத்தில் டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்தில் ரிலையன்ஸ் குழும தலைவர் அனில் அம்பானி இன்று ஆகஸ்ட் 5-ந் தேதி ஆஜரானார்.
வங்கி கடனை திருப்பிச் செலுத்தாததால் அனில் அம்பானியை ‘திவாலானவர்’ என பாரத ஸ்டேட் வங்கி அறிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து அனில் அம்பானிக்கு சொந்தமான இடங்களில் அண்மையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அவருக்கு சொந்தமான 50 நிறுவனங்கள், 35 வளாகங்கள், 25 தனிநபர் சார்ந்த இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
மேலும் ஆகஸ்ட் 5-ந் தேதி, டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் அனில் அம்பானி ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இந்த சம்மன் அடிப்படையில் டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் அனில் அம்பானி இன்று ஆஜரானார். அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அனில் அம்பானி வழக்குகள்
ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவரான அனில் அம்பானிக்கு யெஸ் வங்கி, 2017-19-ல் ரூ3,000 கோடி கடன் கொடுத்தது. இந்த கடன் தொகை, பல போலி நிறுவனங்களுக்கு மாற்றப்பட்டது என்பது குற்றச்சாட்டு. இது போன்ற குற்றச்சாட்டுகளால் பணமுறைகேடு தடுப்புச் சட்டத்தின் கீழ் அனில் அம்பானி மீது அமலாக்க்கத்துறை ஏற்கனவே வழக்கு பதிவு செய்தது. வங்கிகளில் மொத்தம் ரூ17,000 கோடி கடன் பெற்று மோசடி செய்தார் அனில் அம்பானி என்பதும் குற்றச்சாட்டு.
