ஒருகாலத்தில் தினசரிகளில் ஒரு பக்கம் முழுக்கத் திரைப்பட விளம்பரங்கள் வெளியாகும். தொலைக்காட்சி, பண்பலை வானொலி, சமூகவலைதளங்கள் என்று திரைப்பட விளம்பரங்களுக்கான ஊடகங்கள் பயன்பாடு பலவாறாகப் பிரிய, அச்சில் வரும் விளம்பரங்களின் தேவை சுருங்கியது. அதேநேரத்தில், முழுப்பக்க விளம்பரங்களுக்குத் தயாரிப்பாளர் சங்கம் தரப்பில் கடுமையான கட்டுப்பாடுகள் விதித்திருப்பதாகவும் சொல்லப்பட்டது. அப்படியொரு நிலையில், இன்று முழுப்பக்க விளம்பரத்தைத் தாங்கி வந்திருக்கிறது ஒரு திரைப்படம். Angeekaaram Movie First Look 2025
‘அங்கீகாரம்’ என்று பெயரிடப்பட்டுள்ள அந்த படத்தில் நாயகனாக நடிப்பவர் கேஜேஆர் எனும் கொட்டப்படி ஆர்.ராஜேஷ். நயன்தாரா நாயகியாக நடித்த ‘அறம்’ படம் மூலமாகத் தயாரிப்பாளராக அறிமுகம் ஆனவர். தொடர்ந்து குலேபகாவலி, ஐரா, ஹீரோ, க.பெ. ரணசிங்கம், டிக்கிலோனா, டாக்டர், அயலான் படங்களைத் தயாரித்தவர். சில படங்களில் விநியோகஸ்தராகவும் இணைந்து செயலாற்றியிருக்கிறார்.
இவரது ‘கேஜேஆர் ஸ்டூடியோஸ்’ தயாரித்த ‘ஆலம்பனா’ நீண்ட நாட்களாக வெளியாகாமல் முடங்கிக் கிடக்கிறது. Angeekaaram Movie First Look 2025
இந்தச் சூழலில், இயக்குனர் பா.ரஞ்சித்திடம் உதவியாளராக இருந்த தென்பாதியான் இயக்கத்தில் ‘அங்கீகாரம்’ படத்தில் நாயகனாகக் களம் இறங்கியிருக்கிறார் ராஜேஷ்.

விளையாட்டு பயிற்சியாளர் பாத்திரத்தில் அவர் நடிக்கிறார் என்பதை பர்ஸ்ட் லுக் சொல்கிறது. அதேநேரத்தில், தன்னிடம் பயிற்சி பெறுகிற ஒரு விளையாட்டு வீரர் அல்லது வீராங்கனை களம் காண்பதற்கு விதிக்கப்பட்ட தடை அல்லது வேறு பிரச்சனைகளுக்கு எதிராக அவர் நீதிமன்றத்தை நாடுவதே இதன் கதை என்பதையும் உணர்த்துகிறது.
இதுவே, இப்படத்தின் கதை தமிழ்நாட்டைச் சேர்ந்த எந்த விளையாட்டு வீரர் / வீராங்கனையின் வாழ்வை மையப்படுத்தியது என்ற கேள்வியையும் எழுப்பியிருக்கிறது.
இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். ஏ.விஸ்வநாத், சான் லோகேஷ், ராமு தங்கராஜ், பீட்டர் ஹெய்ன், ஷெரீப் என்று பல திரை பிரபலங்களின் பெயர்கள் இவ்விளம்பரத்தில் இடம்பெற்றிருக்கின்றன. மன்சூர் அலிகான், ரங்கராஜ் பாண்டே உள்ளிட்ட பலர் இதில் நடித்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.
’தயாரிப்பு வேண்டாம், இனி ஹீரோதான்’ என்று கேஜேஆர் களமிறங்கியிருக்கிறாரா? இந்த கேள்விக்கான பதிலை ‘அங்கீகாரம்’ படத்தின் அடுத்தடுத்த படிநிலைகள் நமக்குச் சொல்லிவிடும்..! Angeekaaram Movie First Look 2025