மே மாதம் முழுவதும் விடுமுறை வழங்க கோரி அங்கன்வாடி ஊழியர்கள் இரண்டாவது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். Anganwadi workers protest
தமிழகத்தில் அங்கன்வாடி மையங்களில் பணியாற்றி வரும் சமையலர்கள், உதவியாளர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் கோடை விடுமுறையை மே மாதம் முழுவதும் வழங்க வேண்டும் என்று 2023 ஆம் ஆண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தி 15 நாட்கள் விடுமுறை வழங்கப்படும் என்று உறுதியளித்ததால் போராட்டம் கைவிடப்பட்டது.
இந்த நிலையில் இந்த ஆண்டு மே மாதம் முழுவதும் தங்களுக்கு கோடை விடுமுறை வழங்க வேண்டும் என்று அங்கன்வாடி ஊழியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி நேற்று (மே 3) முதல் அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த போராட்டத்தால் குழந்தைகள் மையத்தில் உணவு வழங்குவதில் பாதிப்பு ஏற்பட்டது.
இதனால் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் போராட்டத்தில் ஈடுபடும் அங்கன்வாடி ஊழியர்கள் மீது துறை ரீதியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்திருந்தார்.
எனினும் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் நேற்று இரவு விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியர்கள் இன்று இரண்டாவது நாளாக போராட்டத்தை தொடர்கின்றனர்.
30 நாட்கள் கோடை விடுமுறை, அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகம் முன்பாக 500க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள், தங்களது கோரிக்கையை வலியுறுத்தி ஒப்பாரி வைத்தும், கும்மியடித்தும் அரசின் கவனத்தை ஈர்த்தனர்.
திருப்பூர் மாவட்டம் அங்கன்வாடி ஊழியர் சங்க செயலாளர் சித்ரா செய்தியாளர்களிடம் கூறுகையில், “2023 ஆம் ஆண்டு நாங்கள் ஒன்றரை நாள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டபோது அமைச்சர் கீதா ஜீவன், அடுத்த ஆண்டு முதல் 30 நாட்கள் விடுமுறை அளிக்கப்படும் என்று உறுதியளித்தார். அதன்படி இந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரில் அறிவிப்பு வெளியாகும் என்று காத்திருந்தோம். ஆனால் எங்கள் கோரிக்கை குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை. முதலமைச்சரும், அமைச்சரும் ஏசியில் உட்கார்ந்து இருக்கிறார்கள். அவர்களுக்கு எங்கள் புழுக்கம் தெரியாது” என்று கூறினார்.

கோயமுத்தூர் மாவட்ட அங்கன்வாடி ஊழியர்கள் சங்கத்தினர் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 700 முதல் 1000 ஊழியர்கள், நேற்று இரவு கூடாரம் அமைத்தும் அதே பகுதியில் சமைத்து சாப்பிட்டும் தங்களது போராட்டத்தை தொடர்ந்தனர்.
சிவகங்கை ஆட்சியாளர் அலுவலகம் முன்பாக அங்கன்வாடி ஊழியர்கள் தலையில் முக்காடு போட்டு ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நீலகிரி மாவட்ட அங்கன்வாடி ஊழியர்கள் ஊட்டி ஆட்சியர் அலுவலகம் வளாகம் முன்பாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இவ்வாறு அமைச்சரின் எச்சரிக்கையையும் மீறி இரண்டாவது நாளாக அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தை தொடர்ந்தனர். விரைவில் அரசு தங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். Anganwadi workers protest
