ADVERTISEMENT

தங்கமென ஜொலிக்கிறாளா ‘அங்கம்மாள்’? – விமர்சனம்!

Published On:

| By Minnambalam Desk

திருநெல்வேலி மாவட்ட கிராமம் ஒன்றில் வாழும் பெண்மணி அங்கம்மாள்(கீதா கைலாசம்), இளம் வயதிலேயே கணவன் இறந்த நிலையில் போராடி கஷ்டப்பட்டு குடும்பத்தை தூக்கி நிறுத்தி , மூத்த மகனுக்கு (பரணி)கல்யாணம் செய்து வைத்து பேத்தி பார்த்து, இளைய மகனை (சரண் சக்தி) டாக்டருக்குப் படிக்க வைத்து, நிமிர்ந்து விட்ட இறுமாப்பு அவளுக்கு உண்டு.

அது மற்றவர்களை எடுத்தெறிந்து அதட்டி அடக்கிப் பேசும் ஆணவ குணமாகவும் இருக்கிறது. ஆனால் பேத்தி என்றால் அங்கம்மாளுக்கு உயிர் .

ADVERTISEMENT

இன்னும் உழைக்கத் தயங்காதவள் அங்கம்மாள். வாயில் ஒரு சுருட்டு, ஒரு பழைய டிவிஎஸ் 50 என்று ஊர் முழுக்க பால் கறந்து ஊற்றுபவள் அவள்தான்.

யார் என்ன செய்தலும் மருமகளை (தென்றல்) காரணமாக்குவது, பழி போடுவது சமயங்களில் அடிப்பது கூட உண்டு .

ADVERTISEMENT

சட்டை (ஜாக்கெட்) போடும் பழக்கம் இல்லாத அந்தக் கால ஆள் அங்கம்மாள்.

காலம் மாறி பலர் சட்டை போடும் பழக்கத்துக்கு வந்தாலும் தோளில் கோல வடிவத்தில் பச்சை குத்தி இருக்கும் அங்கம்மாள், அந்தக் கோலம் வெளியே தெரிய வேண்டும் என்பதற்காக, சட்டை போடுவதை விரும்பாதவள்.

ADVERTISEMENT

அங்கம்மாளின் டாக்டரான இளைய மகனுக்கும், திருநெல்வேலி இரண்டாம் நிலைத் தியேட்டர் அதிபர் ஒருவரின் மகளுக்கும் (முல்லையரசி) காதல். பெண் வீட்டார் அதற்கு ஒத்துக் கொள்ள , அவர்களை தன் வீட்டுக்கு அழைத்து வர வேண்டிய சூழல், டாக்டருக்கு .

ஆனால் ஜாக்கெட் போடாத அம்மா, எப்போதும் யாரையும் அதட்டி அதிகாரமாகப் பேசும் , வேலைக்கு ஏவும் குணம் இவற்றை எல்லாம் பார்த்தால் காதலியின் பெற்றோர் என்ன நினைப்பார்களோ என்பது அவனது பயம்.

எனவே தனது அண்ணியின் உதவியை நாடுகிறான் டாக்டர். மாமியாருக்கு பயந்து நடுங்கும் அவள் மெல்ல மெல்ல பிளான் பண்ணி மாமியாரை ஜாக்கெட் போடுவதை நோக்கி நகர்த்துகிறாள்.

ஒரு நிலையில் தனது இளையமகன்தான், தனது அண்ணி மூலம் இப்படி செய்கிறான் என்பதை உணர்ந்த அங்கம்மாள் , ஜாக்கெட் போட சம்மதிக்கிறாள் . ஆனால் பெண் வீட்டில் இருந்து வரும்போது எல்லோருக்கும் நல்ல உடை வேண்டும் என்பதால் துணி எடுக்க கடைக்குப் போக, மருமகள் முதன் முதலாக சுடிதார் அணிய ஆசைப்பட்டு சுடிதார் வாங்க , அங்கம்மாளுக்கு அது பிடிக்கவில்லை.

அந்த சுடிதார் உள்ளிட்ட துணிகளை நெருப்பில் போட்டு விட்டு, மீண்டும் சட்டை போடாமல் சேலை கட்ட ஆரம்பிக்கிறாள். மகன்கள், மகள் ஆகியோர் அவர்களிடம் கோபப்படுகிறார்கள். தன்னை படிக்க வைக்காமல் விட்டு விட்டு தம்பியை மட்டும் படிக்க வைத்த ஒரே வஞ்சனையை மூத்த மகன் சொல்ல, தன்னை அடிமையாக நடத்தும் கொடுமையை மருமகள் சொல்ல, பிரச்னை பெரிதாகிறது.

பெண் வீட்டார் வருகிறார்கள் .. டாக்டரின் காதலி ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டில் வருகிறாள். பேசினால் மகன் வருத்தப்படுவானென்று அமைதியாக இருக்கிறாள் அங்கம்மாள் . ஆனால் அவளுக்கு தன் சுயத்தை இழப்பது சுய இரக்கமாக மாறுகிறது.

வீம்பும் வீறாப்பும் கொண்ட அங்கம்மாள் என்ன செய்தாள் என்பதே,

NJOY பிலிம்ஸ் மற்றும் FIRO MOVIE STATION தயாரிப்பில் கீதா கைலாசம்,சரண் சக்தி, பரணி, முல்லையரசி, தென்றல் ஆகியோர் நடிக்க, பெருமாள் முருகன் எழுதிய கோடித் துணி சிறுகதைக்கு திரைக்கதை எழுதி, சுதாகர் தாஸுடன் சேர்ந்து வசனம் எழுதி, விபின் ராதா கிருஷ்ணன் இயக்கி இருக்கும் படம்.

மலை உச்சியில் இருந்து எப்போதாவது அடிக்கும் உச்சி மலைக் காத்து, தரைக்கு வந்தால் அது பெரும் இழப்புகளை ஏற்படுத்தும் . எனவே உச்சி மலைக் காத்து ஊருக்குள் அடித்தால் அது தீய சகுனம் என்பது நம்பிக்கை. அப்போது மலையில் இருந்து ஒரு பூ, தரைக்கு வரும். அந்த பூ எப்படி இருக்கும் என்பது பலருக்கும் தெரியாது.

அதை காட்சிப்படுத்திய விதம் அபாரம். படம் முழுக்கவே காற்றும் ஒரு கதாபாத்திரமாக வருவது சிறப்பு. வாழ்த்துகள் இயக்குனர் விபின் ராதா கிருஷ்ணன் , மற்றும் அஞ்சாய் சாமுவேல்.

சாமுவேலின் ஒளிப்பதிவுதான் படத்தில் கவரும் முதல் விஷயம். நீண்ட பரந்து விரிந்த நிலம், ஆகாயம். மனிதர்களையே பார்த்திருக்காதோ என்று யோசிக்க வைக்கும் இடங்கள், அவ்வளவு பரந்த விஸ்தீரணத்தில் குட்டிப் பாம்பென வளைந்து நெளிந்து வரும் பாதைகள், இந்த வீட்டில் தலை வைத்துப் படுத்தாள் எதிர் வீட்டில் கால் நீட்டலாம் என்னும் அளவுக்கு குறுகலான கிராமியத் தெருக்கள் என்று ஒளிப்பதிவும் இயக்கமும் சேர்ந்து பங்களித்து இருக்கும் விதம் சிறப்பு.

துளியும் குறை சொல்ல முடியாத அளவுக்கு அங்கம்மாளாக கூடு விட்டுக் கூடு பாய்ந்திருக்கிறார் கீதா கைலாசம், பேச்சு , தொனி, பாவனை, பார்வைகளும் வார்த்தைகளுமாக கலந்து பேசும் விதம், அர்த்தம் உள்ள மவுனம் என்று பிரம்மாதப்படுத்தி இருக்கிறார். சொந்த வாழ்வில் அடக்கி வைக்கப்பட்டது கூட இந்தப் படத்தில் அவர் நன்றாக நடிக்கக் காரணமாக இருக்கலாம்.

இவர் நடிக்கிறாரா இல்லை அந்த ஊரில் நிஜமாக வளையவரும் பெண்ணா என்பதே தெரியாத அளவுக்கு மருமகளாகவே மாறி இருக்கிறார் மருமகளாக நடித்து இருக்கும் தென்றல் .

பரணியும் படிக்காத, மனசுக்குள் உள்ள கோபத்தையும் வருத்தத்தையும் நாதஸ்வரம் வாசிப்பின் மூலம் ஆற்றிக் கொள்ளும் கேரக்டரில் பொருத்தம்.

காதலியாக வரும் முல்லையரசியின் யதார்த்தம் கூட அழகு.

ஆனால் டாக்டராக வரும் சக்தி சரண்தான் யாருக்குமே சம்மந்தம் இல்லாத தோற்றத்தில் இருக்கிறார் .

ஒரு தியேட்டர் அதிபரின் கறுப்பான பெண் இவனைக் காதலிக்க அவனது தோற்றமும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று இந்தப் படத்தின் படைப்பாளிகள் சொல்ல வருவதாக எடுத்துக் கொண்டாலும் கூட , அவரது தோற்றப் பொருத்தம் ஏற்க முடியவில்லை.

முதல் காட்சியில் அங்கம்மாள் தனது பேத்திக்கு பச்சை குத்த முயலும்போது மங்கு வரும் என மருமகள் கோபப்பட்டு மாமியாரைப் பேசுகிறாள், உடனே அங்கம்மாள் மருமகளை அடிக்கிறாள். பொருந்தவில்லையே.

சாலையில் போய்க் கொண்டிருக்கும் பெரிய மகனை நிறுத்தி நான் உன்கிட்ட தனியா பேசணும் என்கிறாள் அங்கம்மாள். அவள் வீட்டில் என்ன நூறு பேரா இருக்கிறார்கள். மண் வீடு என்றாலும் பரந்து விரிந்து இருக்கிற அந்த வீட்டுப் பகுதியில் தன் மகனிடம் பேச அங்கம்மாளுக்கு இடமோ நேரமோ இல்லையா? பின்னாடி ஒரு மலைக் குன்று வரும்படி அந்தக் காட்சி அழகாக இருக்க வேண்டும் என்பதற்காக நடு ரோட்டிலா மனம் விட்டுப் பேசுவார்கள், அம்மாவும் மகனும் ?

சிறுகதை என்ற வகையில் இவை எல்லாம் ஓகே. ரத்தமும் சதையுமாக மனிதர்கள் நடிக்கும்போது அது வேண்டாத காட்சியாகவே மாறும் .

இத்தனைக்கும் இளைய மகனுக்கு அம்மா மீது பயம் எல்லாம் இல்லை.முதல் காட்சியிலேயே அம்மா சொன்னதை கேட்க முடியாது என்கிறான் . அப்படி தைரியமாக பேசும் அவன் நேரடியாக அம்மாவிடம் போய் ஜாக்கெட் போடு, அப்பத்தான் நீ ஆசைப்படுற அந்த பணக்கார சம்மந்தம் அமையும் என்று சொல்ல வேண்டியதுதானே? எதுக்கு திடீர் என பயந்து , அண்ணியை விட்டு கேட்க சொல்ல வேண்டும்?

ஒரு சிறுகதையை திரைக்கதையாக மாற்றும் போது அதிக கவனம் வேண்டும் . நீளப் படுத்த எழுதும் காட்சிகள் ஆழத்தைக் குறைத்து விடும்.

பெருமாள் முருகன் நல்ல எழுத்தாளர், விவசாயம் இயற்கை பற்றிய அவரது கவனித்தாலும் பதிவுகளும் அவரது நாவல்களில் அபாரமாக இருக்கும் . வித்தைக்காரர், அதில் மாற்றம் இல்லை.

ஆனால் யதார்த்தம் என்ற பெயரில் கெட்ட வார்த்தைகளை அதிகம் எழுதுவார். இந்தப் படத்திலும் அது இருக்கிறது . குறிப்பாக அவரது கதையின் இயல்பான முதன்மையான தமிழ்ப்பெண் கதாபாத்திரங்களை இழிவு படுத்தும்படி எழுதுவார்.எங்கோ ஒரு பகுதியில் ஏதோ ஒரு காலத்தில் வந்தவர்கள் செய்த அல்லது செய்ததாக சொல்லப்பட்ட விஷயத்தை எல்லாம் அந்த பகுதியின் பூர்வ குடி மக்கள் மீது சுமத்தி இப்போது அந்தப் பகுதியில் வாழும் மக்களை கூனிக் குறுகச் செய்வார்.

அதன் பின்னால் ஒரு சுயலாப அரசியலும், வன்மமான மொழி அரசியலும் அவரிடம் உண்டு.

இந்தப் படமும் அதற்கு பலியாகி இருக்கிறது.

எனினும் படத்தில் மேக்கிங் அருமையாக இருக்கிறது .

உலகப் படவிழாக்களில் கலந்து கொண்டு விருது பெறாமல் வந்திருக்கிறது அங்கம்மாள். அப்படி விருது பெறாததற்கு நான் மேலே சொன்ன கதாபாத்திரச் சீர்குலைவுகளே காரணமாக இருக்கும் .

எனினும் அங்கம்மாள் .. ஒரு நல்ல முயற்சி

— ராஜ திருமகன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share