பாகிஸ்தான் தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர் முதாவத் முரளி நாயக் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிதியுதவியும், 5 ஏக்கர் நிலமும் வழங்கப்படும் என அமைச்சர் நாரா லோகேஷ் தெரிவித்தார். andhra govt announce 50 lakhs for murali nayak
பஹல்காமில் கடந்த மாதம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து ஆபரேசன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் தாக்கி அழித்தது.
இதனையடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்ட நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் தலையீட்டால் உடனடியாக சண்டை நிறுத்தத்திற்கு இருநாடுகளும் ஒப்பு கொள்வதாக அறிவித்தன. எனினும் எல்லை மாநிலங்களில் நேற்று இந்த போர் நிறுத்த அறிவிப்புக்குப் பின்னரும் பாகிஸ்தான் தாக்குதல்களை தொடர்ந்து வருவதாக தகவல் வெளியாகி வருகிறது.
இதற்கிடையே ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய துப்பாக்கிசூட்டில் ஆந்திராவை சேரந்த முதாவத் முரளி நாயக் என்ற ராணுவ வீரர் மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் மற்றும் கல்வி மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் நாரா லோகேஷ் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். மேலும் அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்தனர்.

தொடர்ந்து தனது சொந்த நிதியில் இருந்து நாயக் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிதியுதவி நாரா லோகேஷ் வழங்கினார். இந்நிலையில் நாயக்கின் குடும்பத்தில் ஒருவருக்கு வேலையும், 5 ஏக்கர் விவசாய நிலமும், ரூ.50 லட்சம் நிதியும் அரசு வழங்கும் என அவர் உறுதியளித்தார்.