ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் நிகழ்ந்த பயங்கர சாலை விபத்தில் 13 பேர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத்தில் இருந்து 40 பயணிகளுடன் தனியார் சொகுசு பேருந்து ஒன்று நேற்று இரவு புறப்பட்டு ஆந்திர மாநிலம் பாமூர் சென்று கொண்டிருந்தது.
ஆந்திரப் பிரதேச மாநிலம், பிரகாசம் மாவட்டம், மர்காபுரம் மண்டலத்தின் ராயவரம் அருகே இன்று காலையில் வந்து கொண்டிருந்த தனியார் சொகுசு பேருந்து, எதிரே கற்களை ஏற்றி வந்த டிப்பர் லாரி மீது நேருக்கு நேர் மோதியது.
மோதிய வேகத்தில் பேருந்தும், லாரியும் அடுத்தடுத்து தீப்பிடித்து எரியத் தொடங்கின. இதனால் வாகனங்களுக்குள் இருந்தவர்கள் வெளியே வர முடியாமல் சிக்கிக் கொண்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், நீண்ட நேரம் போராடித் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். எனினும், இந்த விபத்தில் இதுவரை 13 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.

மேலும், 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். விபத்துக்கான சரியான காரணம் இதுவரை தெரியவில்லை. உயிரிழந்தவர்களின் உடல்களை அடையாளம் காணும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
