அன்புமணி சுற்று பயணத்துக்கு தடை விதிக்க ராமதாஸ் வலியுறுத்தல்!

Published On:

| By Mathi

Ramadoss press meet

பாட்டாளி மக்கள் கட்சியின் ‘தலைவர்’ என கூறிக் கொண்டு கட்சியின் பெயர், கொடியை அன்புமணி பயன்படுத்தினால் நடவடிக்கை பாயும்; சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் அன்புமணியின் சுற்று பயணத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். Ramadoss Anbumani PMK
திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் இன்று ஜூலை 24-ந் தேதி செய்தியாளர்களிடம் டாக்டர் ராமதாஸ் கூறியதாவது: பாமகவின் தலைமையகம் சென்னையில் இருந்து தைலாபுரம் தோட்டத்துக்கு மாற்றப்பட்டுவிட்டது. சென்னை அல்லது வேறு எந்த ஒரு இடத்திலும், பாமகவுக்கு தலைமையகம் இல்லை.

பாமகவின் செயல் தலைவராக அன்புமணி ராமதாஸ் தொடருவார். அன்புமணி, செயல் தலைவர்தான் என்கிற விவரம் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

பாமகவின் தலைவர் என அன்புமணி கூறிக் கொண்டால் நடவடிக்கை எடுக்கப்படும். பாமக நிர்வாகிகளை அன்புமணி தாமாக நியமித்துக் கொண்டு செயல்படுவது சட்டவிரோதமாகும்.

அன்புமணி தமது பெயருக்கு பின்னால் என் பெயரை போடக் கூடாது என ஏற்கனவே சொல்லி இருக்கிறேன்; இன்ஷியல் மட்டும்தான் போட வேண்டும்.பாமக தலைமைக்கு கட்டுப்படாதவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள்.

ADVERTISEMENT

அன்புமணி தமது சுற்றுப் பயணத்தில் பாமக கொடி, பெயரை பயன்படுத்தக் கூடாது; இதனால் சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்படும்; எனவே காவல்துறை தலைவரிடம் மனு கொடுத்துள்ளோம். ‘செயல் தலைவரான’ அன்புமணி பாமகவின் நிறுவனர் தலைவரான என்னிடம் தமது சுற்றுப் பயணத்துக்கு அனுமதி பெறவில்லை. அனுமதி பெற்றுதான் இந்த பயணத்தை பாமக சார்பாக மேற்கொள்ள வேண்டும். அன்புமணி தலைமையில் பாமக என்பதோ ஒரு அணி என்பதோ இல்லை. பாமகவும் நான்தான்.. பாமக தலைவரும் நான்தான்.

என் வீட்டில் ஒட்டு கேட்பு கருவியை வைத்தது யார் என்பது தெரியும். நான் அமர்ந்திருக்கும் இடத்திலேயே ஒட்டுக் கேட்கும் கருவி வைக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வாறு டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share